‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா - சந்தா வழங்கும் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா - சந்தா வழங்கும் விழா!

featured image

ஆசிரியரால் ‘விடுதலை’ வாழவில்லை; ‘விடுதலை’யால்தான் ‘‘ஆசிரியர்’’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, ஜூன் 5 ஆசிரியரால் ‘விடுதலை’ வாழ வில்லை; ‘விடுதலை’யால்தான் ‘ஆசிரியர்’ வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 1.6.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:
‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய ‘விடுதலை 90′ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் மானமிகு தோழர் இரா.குணசேகரன் அவர்களே, இரண்டு நூல்களை வெளியிட்ட திராவிட இயக்க ஆய்வாளரும், மூத்த இதழாளருமான மானமிகு அய்யா தோழர் க.திருநாவுக்கரசு அவர்களே,
விடுதலைக் களஞ்சியம் இரண்டைப் பெற்றுக்கொண்டு மிக அருமையானதொரு உரை யாற்றி, அடுத்த நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டிய காரணத்தினால், சென்றிருக்கக்கூடிய மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இந்நிகழ்வில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய அருமைத் தோழர் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, செயலவைத் தலைவர் மானமிகு வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே,
மற்றும் இயக்கத்தினுடைய முக்கிய பொறுப்பா ளர்களே, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மானமிகு என்னாரெசு பிரின்சு பெரியார் அவர்களே,
விடுதலை தேனீக்களே!
அனைத்து இயக்கத் தோழர்களே, விடுதலை தேனீக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

தேனீக்கள், தேனைச் சேகரித்து, நல்ல ஆரோக்கி யமான வாழ்க்கைக்கு நமக்கு அது மிகச் சிறப்பான வகையில், தரும். அந்தத் தேன் மூலமாகத்தான் பல நோய்கள் தவிர்க்கப்படும். தேனுக்கு அந்த சக்தி உண்டு என்று, நம்முடைய சித்த மருத்துவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். மருந்தைக்கூட தேனில்தான் குழைத்துத் தருவார்கள்.
ஆனால், இந்தத் தேனை எடுத்துக் கொடுத்தி ருக்கின்ற விடுதலை இருக்கின்றதே, அதனுடைய கருத்துகள் வாசகர்களுக்குத் தேனாக இருந்து, எதிரிகளுக்குத் தேளாகத் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும்.
சில பேருக்குத் தேனாக இருந்தாலும் – எதிரிகளுக்கு அது தேளாகக்
கொட்டிக் கொண்டிருக்கும்!

தேனாக சில பேருக்கு – தெவிட்டாத தேனாக நம்மைப் போன்ற கருத்தியலாளர்களுக்கு, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு அது பயன்பட்டாலும்கூட, எதிரிகளுக்கு அது தேளாகக் கொட்டிக் கொண்டிருக்கும்.
எனவேதான், அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதை எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்புதான், நாம், நம்மை செம்மையான பாதையில் செல்லு கிறோமா, இல்லையா? என்பதற்கு சரியான அளவுகோலாகும்.
ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள், திரு வாரூரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் உரை யாற்றும்பொழுது ஒரு கருத்தைச் சொன்னார்.

அந்தப் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை எல்லோரும் பாராட்டினார்கள். கவிஞர் கண்ணதாசன் பாராட்டினார், சிவாஜி கணேசன் பாராட்டினார். நகர சபை தலைவராக இருந்த கே.டி.ஆர்.கோபாலகிருஷ்ண ராஜூ அவர்கள் பாராட்டினார். அனைத்துக் கட்சி நண்பர்களும் பாராட்டினார்கள்.

பிறந்த நாள் விழாவில்
தந்தை பெரியார் உரை!
அந்தப் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் உரையாற்றும்பொழுது,
‘‘இவ்வளவு பேர் பாராட்டுகிறார்கள்; பலதரப்பட்டவர்கள் பாராட்டுகிறார்கள். நம்பிக்கை யாளர்களாக இருக்கிறவர்கள் பாராட்டுகிறார்கள். பக்தி நிறைந்தவர்கள் பாராட்டுகிறார்கள். என்னுடைய கருத்திற்கு மாறானவர்கள் கூட என்னைப் பாராட்டினார்கள். இதுவரை என்னை எல்லோரும் வைது கொண்டிருந்தார்கள்; எல்லோரும் என்னைத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் எல்லோரும் என்னைப் பாராட்டக் கூடிய அளவிற்கு வந்துவிட்டார்களே என்று சொல்லும்பொழுது, எனக்கு என்மீதே ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
என்ன அந்த சந்தேகம் என்று சொன்னால், நாம் ஒருவேளை கொள்கையிலிருந்து வழு விக் கொண்டிருக்கின்றோமா? நழுவிக் கொண்டி ருக்கின்றோமா? அல்லது நாம் ஏதாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்துவிட்டோமோ? என்று ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன். இல்லை, இல்லை, நாம் ஒருபோதும் அப்படி ஆவதற்கு வாய்ப்பே இல்லை. நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடிய சூழ்நிலையே கிடையாது நம் வாழ்நாளில். எப்போதும் சமரசம் செய்துகொண்டதில்லை.
அப்படி இருக்கும்பொழுது எப்படி இவர்கள் நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர்களுடைய அறிவுத் திறனும், புரிந்துகொள்ளக்கூடிய ஆற்ற லும் இப்பொழுது வளர்ந்திருக்கிறது என்று அதற்குப் பொருள். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன்” என்றார்.

அதுபோல, ‘விடுதலை’ எப்பொழுதுமே கசப்பான கருத்துகளைச் சொல்லக்கூடிய ஓர் ஏடுதான்.
இங்கே நம்முடைய ஆய்வாளர் தோழர் க.திரு நாவுக்கரசு அவர்கள் சொன்னதைப்போல, இது ஒரு செய்தி ஏடு அல்ல!
ஏன் ‘விடுதலை’யைத் தொடங்கினோம் என்று ஒருபோதும் தந்தை பெரியார் அவர்கள் வருத்தப்பட்டதில்லை!
அந்தக் காலத்து சொல்லாட்சி, தந்தை பெரியார் பயன்படுத்திய சொல்லாட்சியைப் பயன்படுத்திச் சொல்லவேண்டுமானால், ‘‘வருத்தமான ஏடு!” கமர்ஷியல் பேப்பர் அல்ல; அதேநேரத்தில், வருத்தமான ஏற்பாடும் அல்ல இது. ஏன் இதைத் தொடங்கினோம் என்று ஒருபோதும் அவர் வருத்தப்பட்டதில்லை.

ஆனால், வரவேற்கப்படவேண்டிய ஏடாக, அன்றும், இன்றும், என்றும் ‘விடுதலை’ ஏடு திகழ்ந்து கொண்டிருக்கின்றது. காரணம், அது வெறும் செய்தித்தாள் அல்ல – மாறாக, கருத்துப் போர் நடத்தக்கூடிய ஒரு பேராயுதம்; அறிவாயுதம், தந்தை பெரியார் அவர்களால் தலைமுறை தலைமுறையாக மாற்றிக் கொடுக்கப்பட்டு, அது இன்றைக்குத் தொடர்ச்சியாக – எப்படி ஒலிம்பிக் சுடரை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டே வந்து, கடைசியாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு வருவார்களோ, அதுபோன்று இவ்வேடு நடந்துகொண்டே இருக்கிறது.
ஆகவே, இந்த ‘விடுதலை’க்கு சந்தா என்பதே மற்றவர்கள் மத்தியில் ‘விடுதலை’யைச் சேர்க்க வேண்டும் என்பதுதான்!

பூவாளூர் பொன்னம்பலனாரின் அறிக்கை!
அன்றைய காலத்தில் ‘விடுதலை’ ஏட்டிற்கு ஆசிரியராகவும், நிர்வாக மேலாளராகவும் இருந்தவர் பூவாளூர் பொன்னம்பலனார் அவர்கள் ஒரு சிறிய அறிக்கையை கொடுத்தார்.
அதை இன்றைக்கு நம்முடைய துணைத் தலைவர், நிர்வாக ஆசிரியர் அவர்கள் அந்த அறிக்கையை எடுத்துக் காட்டி, சந்தா சேர்ப்பதைப்பற்றி எழுதியி ருந்தார்.
இப்பொழுது அண்மைக் காலத்தில், ‘விடு தலை’க்குச் சந்தா சேர்ப்பிற்காக செல்லும்பொழுது, ‘‘நாங்கள்தான் பிடிஎஃப் வடிவில் ‘விடுதலை’யைப் படித்துவிடுகின்றோமே – எங்களுக்குத் தினமும் வாட்ஸ் அப்பில் வந்துவிடுகிறதே! அதன்படி நாங்கள் தனியே சந்தா கட்டவேண்டும் என்கிற அவசியமே இல்லையே” என்று சிலர் சொல்லலாம். அவர்கள் சொல்வதில் பொருள் உண்டு, உண்மை உண்டு.
ஆனால், ஒன்றே ஒன்று, ‘விடுதலை’யை பிடிஎஃப் வடிவில் எப்பொழுது உங்களால் பார்க்க முடியும் என்று சொன்னால், பத்திரிகையை அச்சடித்துக் கொடுத்தால்தான், நீங்கள் பார்க்க முடியும். அப்படி பத்திரிகையை அச்சடிப்பதற்கு என்ன வேண்டும்?

சந்தா ஆதரவு வேண்டும் – பணம் வேண்டும்.
பத்திரிகைகளுக்கு முதல் எதிரி யார்?
அதேநேரத்தில், எல்லா ஏடுகளுக்கும் உள்ள ஒரு பொதுவான உண்மை என்னவென்றால், பத்திரிகை களுக்கு முதல் எதிரி யார் என்றால், கருத்தியல் எதிரிகள் அல்ல. கூட இருப்பவர்களே, அதாவது ஏஜெண்டுகள்தான் எதிரிகள் ஒரு காலத்தில். இந்த உண்மை பத்திரிகையை நடத்துகின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், அவர்கள் பாக்கி வைத்திருப்பார்கள்; அதற்குப் பிறகு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதை வசூல் செய்வ தற்காகவே ஒருவரை அனுப்பவேண்டும். அதனால், பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாது. ஏஜெண்டுகளைக் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘நாங்கள் அதற்குக் காரணமில்லை. பத்திரிகையை வாங்குகிறவர்கள் சந்தாக்களைக் கொடுப்பதில்லை; நாங்கள் எவ்வளவு நாள்கள்தான் சந்தா இல்லாமல், பத்திரிகையைப் போட்டுக் கொண்டிருப்போம்” என்று சொல்வார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி, இதுபோன்ற சிரமங்களையெல்லாம் தாண்டி ‘விடுதலை’ ஏடு நடந்துகொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று சொன்னால் நண்பர்களே!

ஆசிரியரால் ‘விடுதலை’ வாழவில்லை; ‘விடுதலை’யால்தான் ‘ஆசிரியர்’
வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
எனக்கு முன் இங்கே உரையாற்றிய பேராசிரியர் சுப.வீ. அவர்கள், ‘‘விடுதலை ஆசிரியரால்தான் விடுதலை பத்திரிகை வாழுகிறது” என்று சொன்னார். மற்றவர்களும் சொன்னார்கள்.
அதில் ஒரு திருத்தத்தை நான் சொல்லு கிறேன். ஆசிரியரால் ‘விடுதலை’ வாழவில்லை; ‘விடுதலை’யால்தான் ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எவ்வளவு பணிகள் என்றாலும், உற்சாகமாக செய்யக்கூடிய நிலை!
இன்றைக்கு ‘விடுதலை’ இருக்கின்ற காரணத்தி னால்தான், எவ்வளவு பணிகள் என்றாலும், உற்சாக மாக செய்யக்கூடிய நிலை இருக்கிறது.

தொடர்ந்து அந்தப் பணிகளைச் செய்வதி னால்தான், தோழர்களைப் பார்க்கின்றோம்; எதிர்ப்பு களைச் சந்திக்கின்றோம்; அப்படி சந்திப்பது மட்டு மல்ல; சிந்திக்கின்றோம்.
ஒரு மாத காலமாக நடந்த – ஏழு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்னும் இரண்டு நாள்கள் கழித்துத்தான் முடிவுகள் வர விருக்கின்றன. ஏழு கட்டத் தேர்தல் எதற்காக என்று சொன்னால், யாருடைய வசதிக்காக? எதற்காக? என்று எல்லோருக்கும் தெரியும்.

‘விடுதலை’ ஏடு ஒரு கருத்தியல் போராயுதம்!
மற்ற ஏடுகளுக்கும், ‘விடுதலை’க்கும் உள்ள வேறுபாடு என்வென்று சொன்னால், ‘விடுதலை’ ஒரு போராயுதமாக, ஒரு கருத்தியல் போராயுதமாகத்தான் இந்தக் காலகட்டத்தில்கூட நடந்திருக்கிறது.
ஆச்சாரியாருடைய குலக்கல்வித் திட்டத்தை நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
‘விடுதலை’ நாளேட்டினுடைய அவசியம்; அது ஒரு கருத்துப் போர் நடத்தக்கூடிய ஏடாக இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்பொழுது, ஜனநாயகத்திற்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆயுதங்கள் வேண்டும். ஆயுதம் என்றால், வன்முறை ஆயுதங்கள் அல்ல; அறிவாயுதங்கள் அவை. அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சியை உருவாக்கவேண்டுமானால், ஜனநாயகத்திற்கு நான்காவது தூண் என்று ஊடகங்களைப் பத்திரி கைகளைச் சொல்வார்கள்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய, மக்களாட்சியைக் காப்பாற்றக் கூடிய நான்காவது தூண்!
சட்டமன்றம், நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகிய மூன்று துறைகளையும் தாண்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய, மக்களாட்சியைக் காப்பாற்றக் கூடிய ஒன்று இருக்கின்றது என்றால், அது மிக முக்கியமான நான்காவது தூணான ஊடகத் துறைதான்.

ஆனால், நம்முடைய நாட்டில், அந்தத் தூண்கள் எல்லாம் எவற்றைத் தாங்கவேண்டுமோ, அவற்றைத் தாங்காமல், வேறு வகையான அளவிற்கு, அச்சுறுத்தல்களுக்கு ஒரு பக்கம் ஆளாகி, அதன் காரணமாக, ஆளுங்கட்சியில் என்ன நடந்தாலும், மற்றவர்கள் விமர்சனம் செய்யாத ஒரு சூழல்.
அந்தக் காலத்தில், ஆளுங்கட்சி என்பது இல்லாமல், யாராக இருந்தாலும், தயவுதாட்சண்யம் இல்லாமல், விமர்சிப்பதை அய்யா அவர்கள், ‘குடிஅரசு’ காலத்திலிருந்து உருவாக்கினார்.
அதனுடைய தனித்தன்மை, ‘‘இன்னார், இனியர்” என்று நாம் பார்ப்பதில்லை.
தந்தை பெரியார், ஆண்டுவிழாவிற்காக எழு தப்பட்ட கட்டுரையில், ‘‘என்னுடைய பேனாவினால், நான் யாரைத்தான் தாக்காமல் விட்டேன் என்று எனக்கே நினைவிற்கு வரவில்லை’ என்று எழுதினார்.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்!
அவ்வளவு பேரை தாக்கி எழுதியதற்குக் காரணம் என்னவென்றால், சமூகத்தை சரிப்படுத்தவேண்டும்; கோணலை நிமிர்த்த வேண்டும். குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். சமத்துவ சமுதாயத்தை உரு வாக்கவேண்டும். சமதர்மக் கொடி தலைதாழாது சமூகநீதிக் கொடியும் பறக்கவேண்டும். ‘அனை வருக்கும் அனைத்தும்’ கிடைக்கவேண்டும் என்ப தற்காகத்தான்
இதற்காக ‘விடுதலை’ ஏடு, தன்னை முழுமை யாக ஒப்படைத்துக் கொண்டு ஒரு நாளேடாக பகுத்தறிவு நாளேடாக இருக்கிறது.
அகில உலக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் லெவி பிராகல்
லெவி பிராகல் என்பவர் அகில உலக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர். இப்பொழுதும் அவர் உயிரோடுதான் இருக்கிறார், நார்வே நாட்டில்.
உலக நாடுகளில் 56 நாடுகள் இணைந்த ஓர் அமைப்பு அது. அந்த அமைப்பில், திராவிடர் கழகத்தையும் இணைத்தார்.
(தொடரும்)

No comments:

Post a Comment