சென்னை, ஜூன் 7- பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக, எட்டு முறை தமிழ்நாடு வந்தும், பா.ஜ., ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், 11 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில், பா.ஜ., 19 தொகுதிகளிலும்; அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேரும் போட்டியிட்டனர். தமிழ்நாட்டில் இருந்து இம்முறை பா.ஜ.,- மக்களவை உறுப்பினர்கள் வர வேண்டும் என, பிரதமர் மோடி விரும்பினார். அதற்காக, தமிழ்நாட்டில் தன் பிரச்சாரத்தை துவக்கினார். அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன், சென்னை நந்தனத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை, சென்னையில் ‘ரோடு ஷோ’ நடத்தி, ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து, வேலுார், கோவை மேட்டுப்பாளையம், சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். பிரச்சாரத்திற்காக, எட்டு முறை பிரதமர் தமிழ்நாடு வந்தார். இது தவிர, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் என, பல ஒன்றிய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாடு பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்படி இருந்தும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்த பா.ஜ., 11 தொகுதிகளில் வைப்புத் தொகை இழந்துள்ளது. இதற்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் சரிவர தேர்தல் பணியில் ஈடுபடாததே காரணம் என புகார் கூறப்படுகிறது. ‘நீ இந்த வேலை செய், அந்த வேலை செய்’ என்று தொண்டர்களை வேலை வாங்கினாரே தவிர, தொண்டர்களுடன் இணைந்து மக்களை சந்திப்பது, பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது என, களப்பணி ஆற்றவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரச்சாரத்திற்கு வந்த தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்களை வரவேற்பதிலும், அவர்கள் உடன் செல்வதிலும் தான் கவனம் செலுத்தினர். காலையில் தேர்தல் பணிமனைக்கு வரும் தொண்டர்களிடம், ‘நீங்கள் இங்கே பிரச்சாரத்திற்கு போங்க; நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவர். பின், இரவு பிரச்சாரம் முடிவடையும் நேரம் வந்து பங்கேற்பர். இப்படி அடுத்தவர்களை வேலை வாங்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தியதும், தொழிலதிபர்களை சந்தித்து நன்கொடை வசூலிப்பதிலும் கவனம் செலுத்தியதால் தான், ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
No comments:
Post a Comment