தமிழ்நாடு – புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சருக்கு வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

தமிழ்நாடு – புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!

featured image

சர்வாதிகார வெறிக்குப் போடப்பட்டுள்ள அணை முழுமையடைய, முழுக் கவனமும், அரசியல் வியூகமும் அவசியத் தேவை!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சருக்கு வாழ்த்துகள்! சர்வாதிகார வெறிக்குப் போடப்பட்டுள்ள அணை முழுமை யடைய, முழுக் கவனமும், அரசியல் வியூகமும் அவசியத் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, மறுக்க முடியாத, மகத்தான வெற்றியாக தமிழ்நாடு – புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவைத்து, “இந்த நாற்பது – இனியவை நாற்பது” என்பதை உணர்த்தி, பிரகடனப்படுத்தியதற்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது ஒப்பற்ற முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட மதியூக வியூகமும் தந்த வெற்றிக்கனிகள் இவை.

பெரியார் மண் என்பதை நிரூபித்த
முதலமைச்சர்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தம் நூற்றாண்டு நிறைவில் இந்த இனிய நாற்பதைக் கொண்டு முதலமைச்சரும் கூட்டணியினரும் கட்டிய இந்த வெற்றி மாலையைக் கலைஞரின் தோளுக்குச் சூட்டிடும் அவரது முயற்சியின் மூலம், மீண்டும் “இது பெரியார் மண்தான்” என்பதையும், “திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்” என்பதையும் நிரூபித்து விட்டார், நம் கற்றிடமாகத் தமிழ்நாட்டை ஆக்கிய நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர்! இந்தியா கூட்டணியின் சிற்பியான அவரே அதன் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். அந்த வெற்றித் திருமகனாருக்குத் தாய்க் கழகத்தின் தகத்தகாய வாழ்த்துகள்!

காவிக் கறை கலைகிறது!
புதிய விடியலுக்கு வித்திட்ட ராகுல் காந்தி – காங்கிரஸ் – இந்தியா கூட்டணிக் கட்சிகள்!
காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.
காங்கிரசும், இளந்தலைவர் ராகுல் காந்தியின் இடையறாத பிரச்சாரச் சுனாமியும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரமும் முகிலைக் கிழித்து எறிந்து புதிய விடியலுக்கு வித்திட்டிருக்கின்றன!
இதற்குக் காரணமான வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்!
ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது நிலைத்து நிற்க, முழுமையான, கவனச் சிதறல் இல்லாத கடமை உணர்வும், தீவிர கண்காணிப்பும் அவசியமாகும்!

சர்வாதிகார வெறிக்கு அணை போட முழுக் கவனம் தேவை!
சர்வாதிகார வெறிக்கு அணை போடப்பட்டுள்ளது; அந்த அணை முழுமையாவதற்கு முழுக் கவனமும் அரசியல் வியூகமும் தேவை! அதற்கும் தமிழ்நாடும் அதன் மதியூகியான நமது தி.மு.க. தலைவரும் கலங்கரை வெளிச்சமாக என்றும் இருப்பார்கள் என்பது உறுதி!
ஜனநாயகத்தின் – அரசமைப்புச் சட்டத்தின் தலை தப்பியுள்ளது. என்றாலும் கவனம்! கவனம்!!
வாழ்த்துகளுடன்,

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை,
4.6.2024

No comments:

Post a Comment