ரூ. 4 கோடி பறிமுதல் செய்திருப்பது எப்படி சட்ட விரோத வழக்கு ஆகும்? பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ரூ. 4 கோடி பறிமுதல் செய்திருப்பது எப்படி சட்ட விரோத வழக்கு ஆகும்? பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் கேள்வி

featured image

சென்னை, ஜூன் 5 – தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக் கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூற முடியும்? என்று தமிழ்நாடு பாஜக அமைப்புச் செய லாளர் கேசவ விநாயகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஅய்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பினர். ஆனால், இந்த அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு 3.6.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; சட்ட விரோதமாக பதியப்பட்ட வழக்கை புலன் விசாரணை செய்ய முடியாது; எனவே, கேசவ விநாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணைக்கு இடைக்கால நிவா ரணம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.

அதற்கு, “சட்டவிரோத வழக்கு என எப்படி கூற முடியும்?” என கேசவ விநாயகம் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகுமாறு கூறினார்.

ஆனால், தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேசவ விநாயகத்தின் வழக்குரைஞர் தெரிவித்தார். “பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நடைமுறையை பின்பற்றினால் பணம் சென்று விடும்” என நீதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே சிபிசிஅய்டி சார்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை 6-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment