சென்னை, ஜூன் 6 சென்னை யில் ரயிலில் ரூ.4 கோடிபறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக தமிழக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் சிபிசிஅய்டி அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்.6-ஆம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிசிஅய்டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், சிறீவைகுண்டம் ஓட்டுநர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஅய்டி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினர். பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழி சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு பாஜகபொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்கு சென்று, சிபிசிஅய்டி காவல்துறையினர் கடந்த வாரம் விசாரணை நடத்தினர்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த 31-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஅய்டிஅலுவலகத்தில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான பின்னர் ஆஜராவதாக தகவல் அனுப்பினர்.
இந்நிலையில, சிபிசிஅய்டி அழைப்பாணையை ஏற்று கேசவ விநாயகன், எழும்பூரில் உள்ள சிபிசிஅய்டி தலைமை அலுவலகத்தில் 5.6.2024 அன்று காலை ஆஜரானார். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அவரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்தனர். அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
சுமார் 5 மணி நேர விசார ணைக்கு பின்னர் சிபிசிஅய்டி அலுவலகத்தில் இருந்து கேசவ விநாயகன் வெளியே வந்தார். விசாரணையில் வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராவார்கள் என சிபிசிஅய்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் மறுப்பு: இதற்கிடையே, தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக்கோரி, சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘‘தற்போதைய நிலையில் விசார ணைக்கு தடை விதிப்பதோ, அழைப்பாணையை ரத்து செய்வதோ விசாரணையை பாதிக்கும். எனவே, அழைப்பாணை உத்தரவின்படி மனுதாரர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment