சென்னை, ஜூன் 10- தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வை 15லட்சத்து75 ஆயிரம் பேர் எழுதினார்கள். வினாக்கள் எளி தாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்.என்.பி.எஸ்.சி) குரூப்-4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1705, சுருக்கெழுத்து தட்டச்சர்-445. தனி உதவியாளர் கிளார்க்-3, தனி செயலாளர்-4, இளநிலை நிர்வாகி-41, வரவேற்பாளர்-1, பால் பதிவாளர் – 15, ஆய்வக உதவியாளர்-25, பில் கலெக்டர்-66, தொழிற் சாலை மூத்த உதவியாளர்-49, வன பாதுகாவலர், காவலர்-1,177, இளநிலை ஆய்வாளர்-1 ஆகிய 6.244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.
பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப் பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், பட்ட தாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்.பில்., முடித்தவர்கள் என உயர் கல்வி தகுதி பெற்றவர்களும் விண்ணப்பித்தனர். இதனால், விண்ணப்பித்தோர் எணிக்கை 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் ஆனது.
சென்னையில் 432 மய்யங்கள்
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் குரூப்-4 எழுத்து தேர்வு நேற்று (9.6.2024) நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 1,32,276 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது.
எழுத்து தேர்வில் பகுதி 1இல் கட்டாய தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2இல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவுத் தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
வினாக்கள் அனைத்தும் ‘அப்ஜெக்டிவ்’ வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத் திற்கு முன்னதாக தேர்வு எழுதுபவர்கள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே காலை 7 மணி முதலே தேர்வர்கள் வரத் தொடங்கினர்.
தேர்வு மய்யங்களுக்கு கைபேசி, கால்கு லேட்டர், கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு நடைபெற்ற அனைத்து மய்யங்களிலும் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வுகூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை 15 லட்சத்து 75ஆயிரம் பேர் எழுதினர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் திடீர் ஆய்வி லும் ஈடுபட்டனர். இதுதவிர மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் 2ஆவது முறையாக குரூப்-4 தேர்வில் 16லட்சம் பேர் பங்கேற்று எழுதியுள்ளனர்.
அதாவது குரூப்-4இல் ஒரு பதவிக்கு 320 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில்வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பையும், அதனைத்தொடர்ந்து கலந்தாய்வையும் நடத்த டி.என்.பி.எஸ்.சி. தயாராகி வருகிறது.
4.48 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை
குரூப்-4 தேர்வை எழுத 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 78 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். 22 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. அதாவது 4 லட்சத்து 48 ஆயிரத்து 417 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டி.என். பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment