"2024 மக்களவை தேர்தல் முடிவுகள்" என்னும் சிறப்புக் கூட்டம் "நீட்" தொடர்பான நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

"2024 மக்களவை தேர்தல் முடிவுகள்" என்னும் சிறப்புக் கூட்டம் "நீட்" தொடர்பான நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்

featured image

சென்னை, ஜூன் 12- திராவிடர் கழகம் சார்பில் நேற்று (11.6.2024) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’ சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்நாட்டில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வந்தது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் எண்ணிக்கையைவிட, தத்துவ வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு நமது பாராட்டு என்றும், சுதந்திரம் காப்பற்றப்பட எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் ஜனநாயகப் பாதுகாவலர்களாக வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

கழகத் துணைத் தலைவர்
கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவரகள் கணித்தபடி மக்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய அளவுக்கு இருந்தது. வெற்றி பெற்ற கட்சியின் அலுவலகம் வெறிச்சோடியது. தோல்வி அடைந்ததாக கூறப்பட்ட கட்சித்தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வெற்றி பெற்ற கட்சியும் கூட அடுத்த கட்சிகளின் ஆதரவுடன், ஊன்றுகோலுடன்தான் ஆட்சி அமைத்துள்ளார்கள்.
மோடி அடங்கி ஒடுங்கியுள்ளார். என்டிஏ கட்சிகள் அதிருப்தியுடன் உள்ளன. மராட்டியத்தில் அஜித் பவாரின் கட்சி, அதேபோல் சிவசேனா ஷிண்டே கட்சி என கேபினட் அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று கூறிவருகிறார்கள். துணைபோகின்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் அளிக்கப்படவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இப்போதுள்ள அரசியல் நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள் என்று யாரும் கூறிட முடியாது. இந்த ஆட்சி நிலைக்கின்ற, நீடிக்கின்ற ஆட்சி என்று கருத முடியாது.

வெயிலில் அலையவில்லை, ஒரு சொட்டு வியர்வை இல்லாமல் நிதி அமைச்சராகிவிட்டார் நிர்மலா சீதாராமன். ஆனால், தமிழிசைக்கு அப்படி இல்லை, என்று நாங்கள் கூறவில்லை, காங்கிரசு கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார்.
நிர்மலா சீதாரமன் கணவர் எழுதிய புத்தகம்குறித்து ஆசிரியர்தான் முதலில் கூறினார். தமிழ்நாடு பெரியார் மண் திராவிட பாறையில் தாமரை முளைக்காது என்று ஆசிரியர் கூறியுள்ளார்.
மோடி ஆட்சி நிலைக்குமா? என்று தினமலரே தலையங்கம் எழுதியுள்ளது. அதேபோல் இன்று தினமணி தலையங்கம் எழுதியுள்ளது. குடியுரிமைச்சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரிசையாக ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை இவர்களால் செயல்படுத்த முடியாது, அப்படி செய்யத் துணிந்தால் ஆட்சியில் தொடர முடியாது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறுகிறார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய் பேசக்கூடாது என்று/
அனால், இதற்கு முன்பாகவே ஆசிரியர் அவர்கள் 6ஆம் தேதி அறிக்கையிலேயே கூறிவிட்டார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும், பிஜேபிக்கும் இடையே உரசல் உள்ளது என்று. அவர்கள் ஆட்சி அமைத்தாலும் தோல்வியே என்று ஆசிரியர் குறிப்பிட்டார்.
மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசமைப்புக்கு விரோதமான ஆட்சியாகத்தான் மோடி ஆட்சி இருந்தது. கடந்த முறையும், இப்போதும் மோடி பதவி யேற்பின்போது அரசமைப்புச்சட்டத்தை வணங்குகிறார். அரசமைப்புச்சட்டத்துக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்?
மோடி ஆட்சிமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிகமான முறை பிரதமர் பிரச்சாரம் செய்தது தமிழ்நாட்டில்தான். மக்களவையில் ராகுல்காந்தி பேசும்போது, தமிழ்நாட்டில் பிஜேபி கால்வைக்க முடியாது என்றார்.

எந்த காங்கிரசை விட்டு, எந்த சமூக நீதிக்காக தந்தைபெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறினாரோ, அந்த காங்கிரசு இன்று சமூக நீதியைக் கையில் எடுத்துள்ளது. சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ், யாதவர்களுக்கு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட மற்றவர்கள் பலருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தேர்தல் முடிவு செய்தி வெளியான போது மோடி தொடர்ச்சியாக பின்னடைவு என்கிற செய்தி வந்தது. ஆனால், கடைசியில் முடிவு வெளியானது குறித்து வழக்கும் அங்கே போடப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து பிஜேபி ஆளுகின்ற மாநிலமும் குரல் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் 18.6.2024 அன்று அனைத்துக்கட்சிகள் பங்கேற்கின்ற நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தந்தைபெரியார் மறைந்தாலும், பெரியார் வாழ்க என்று நாடாளுமன்றத்தில் ஒலித்தது. இப்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பின்போது பெரியார் வாழ்க முழக்கம் பெரிதாக ஒலிக்கும். பெரியார் மறையவில்லை. இந்தியா முழுமைக்கும் திராவிட இயக்க சிந்தனை எதிரொலிக்கும். -இவ்வாறு கழகத்துணைத் தலைவர் உரையில் குறிப்பிட்டார்.

நூல் வெளியீடு
ரூ.280 மதிப்புள்ள நீட் தொடர்பான 10 புத்தகங்கள் சிறப்புக்கூட்டத்தில் ரூ.200க்கு வழங்கப்பட்டது.
கழகப்பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள் என பலரும் வரிசையில் சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், கபடி வீரர் கு.வைத்திலிங்கம். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தாம்பரம் ப.முத்தையன், தொண்டறம், தங்க.தனலட்சுமி, ராமு, மு.ரா.மாணிக்கம், திண்டிவனம் பாபு, வழக்குரைஞர் பா.மணியம்மை, ஆடிட்டர் ராமச்சந்திரன், இரா.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலரும் புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

கழக வெளியுறவுச் செயலாளர்
கோ.கருணாநிதி கருத்துரை
கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி கருத்துரையில், மிக முக்கியமான தேர்தலாக 2024 மக்கவைத் தேர்தல் கருதப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மெற்கொண்டார், தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டார். விடுதலையில் மோடிக்கு கருஞ்சட்டைக்காரன் கடிதம் என்று மோடியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். அது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினரிடமும் சேர்ந்தது.
40க்கு 40 இந்தியா கூட்டணி வென்றது. இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்து வழிநடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைச் சொல்ல வேண்டும்.இந்தியா முழுவதும் சமூக நீதிக்கான கூட்டணி அமைந்ததற்கு ராகுல் காந்தி, அகிலேஷ் பாராட்டுக்குரியவர்கள்.
ராகுல் காந்தி இரண்டு பயணங்கள் செய்தார். பெரியார் மண்ணிலிருந்து தொடங்குவதாகக் குறிப்பிட்டு முதல் பயணத்தைத் தொடங்கினார். இரண்டாவது பயணம் நீதி கோரும் நியாய பயணம். இரண்டு பயணத்திலும் சமூகநீதி, ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதை முன்னிறுத்தினார்.
என்டிஏ கூட்டணி 293 பெற்றது என்றாலும் பாஜக 240தான் பெற்றது. பெரும்பான்மைககுரிய 272 அய் பாஜக தனித்து பெறவில்லை.
மோடி பரப்புரையில் மோடி கீ கியாரண்டி என்றார். தேர்தல் முடிவுகள் மோடிக்கே கியாரண்டி இல்லை என்றது. சந்திரபாபு, நிதீஷ்குமார் ஆதரித்தால்தான் ஆட்சி என்று ஆகிவிட்டது.
ராஜஸ்தானில் மோடியின் பரப்புரையில், முசுலிம்கள் ஊடுருவியவர்கள் என்றார். மக்கள் ஏற்கவில்லை. அந்த தொகுதியில் தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்தது.

அயோத்தி ராமன் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் என்றார். அயோத்தியை உள்ளடக்கிய பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை அகிலேஷ் நிறுத் தினார். அத்தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் உயர்ஜாதியினர் மட்டும்தான் பாஜகவை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினர் என அனைவரும் இந்தியா கூட்டணியை ஆதரித்தனர். தேர்தல் பரப்புரையில் மோடி மக்கள் பிரச்சினைகளைப் பேசவில்லை. இந்துத்துவா அர சியலை கையில் எடுத்தார். மேற்கு வங்கம், மராட்டிய மாநிலங் களில் பாஜக வீழ்த்தப்பட்டது. பீகார், கருநாடகத்தில் இந்தியா கூட்டணி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது மோடி சர்க்கார் இல்லை, என்டிஏ சர்க்கார் என்கிறார் மோடி.

இப்போதும் பிஜேபியில் கேபினட் அமைச்சர்களில் 30இல் 17 பேர் உயர்ஜாதியினர். 2024இல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இதுவரை இல்லாத அளவாக பிற்படுத்தப்பட்டவகுப்பினர் 138 பேர் உள்ளனர். இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. கருநாடகா, தெலங்கானா, பீகாரில் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த ஆண்டு அரியானா, மராட்டிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி வலிமைபெற மாநிலங்களில், சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பிஜேபிக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் 98 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 90 மில்லியன் பேரும் ஈடுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்ற சட்டமாக கொண்டுவரப்பட உள்ள டிஜிட்டல் மசோதா தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஜலலிக்கட்டு போராட்ட நேரத்திலும், ஆரம்பம் முதலே நீட் தேர்வையும் ஆசிரியர்தான் எதிர்த்து வருகிறார். இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு ஆசிரியர் அவர்களின் அறிவுரைகள் நிச்சயம் தேவை. இவ்வாறு கோ.கருணாநிதி உரையில் குறிப்பிட்டார்.

கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கருத்துரை
கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கருத்துரையில், தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ள எழுச்சி, இதற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
1934இல் மெட்ராஸ் பிரசிடென்சி தேர்தலில் நீதிக் கட்சி தோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுக்குப்பிறகு, மக்களிடையே கருத்துகளை எடுத்துச்செல்ல, விடுதலை ஏடு தொடங்கப்பட்டது. தந்தைபெரியார் காட்டியஅடையாளம், அவர் தொடங்கிவைத்த பிரச்சாரம் இன்றும் தொடர்கிறது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், exit poll என்று பிஜேபி ஊடகங்கள் உளவியல் தாக்குதல்போல் கணிப்புகளை வெளியிட்டன.ஒருவேளை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், தேர்தலே இல்லாமல் ஆக்கி, ராணுவ ஆட்சி கொண்டு வந்துவிடுவார்களோ என்றெல்லாம் எண்ண வைத்தது. தமிழ்நாட்டில் இத்தனை வயதில் தேர்தல் பிரச்சாரம் ஆசிரியர் செய்தார். இந்தியாவில் சுதந்திரம் அடைந்து நடைபெற்ற தேர்தல் தொடங்கி 2024 தேர்தல் வரை அத்தனை தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்தவர் ஆசிரியர் அவர்கள். அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்ட அம்மையார் குறித்து செந்திகள் வந்தன. அத்தனைத் தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்தவர் ஆசிரியர் அவர்கள்.

Road show என்று தமிழ்நாட்டில் யாரும் நடத்தியதில்லை. இவர்கள் நடத்தியதில் ஆப் கே பார் – சார் சோ பார் என்று முழக்கமிட்டபோது ஆப்கே பார் – சாக்கோ பார் என்று மக்கள் முழக்கமிட்டனர். மோடி செல்லும்போதே, ஓரிடத்தில் முழக்கமிட்டவர்களையே ஓடோடி சென்று அந்தந்த இடங்களில் படத்துக்காக திரும்பத்திரும்ப முழக்கமிடச்செய்தனர். அவர்களின் ஆணவத்துக்கு மக்கள் அளித்த தண்டனை இந்த தேர்தல். evm, vvpad என எல்லாவற்றையும் எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது உள்பட எல்லா நிலைகளிலும் அவர்களை எதிர்த்து தொடர் முயற்சிகள் பல நடைபெற்றன. கருத்து கணிப்பு வெளியிட்ட நிறு வனத்திலிருந்து ஒருவர் தவறாகிவிட்டது என்று கண்ணீர் விடுகிறார் இதுவும் ஒரு நாடகம், மோடி அரசமைப்புச்சட்டத்தை கண்ணில் ஒத்திக்கொண்டதும் ஒரு நாடகம்.
தேர்தல் பத்திரம் என்கிற சட்டரீதியிலான ஊழல், குடியுரிமை சட்டம் என ஒவ்வொன்றும் விவாதமில்லாமல் நேரடியாக நிறைவேற்றிய காட்டுத்தர்பார் ஆட்சியாக இருந்தது.

திராவிடர் கழகக் கொள்கைகளைத் தாங்கி வெளியானது தி.மு.க. தேர்தல் அறிக்கை. தி.மு.க. தேர்தல் அறிக்கை தகவல்கள் ராகுல் காந்தியின் பேச்சில், காங்கிரசு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. பிஜேபி அடைந்த மிகப்பெரிய தோல்வி தத்துவத் தோல்வி. ஸநாதன ஒழிப்புக்கு வட இந்தியர் ஆதரவு அளித்துள்ளனர். ராமன் கோயில், மதப்பிரச்சாரங்களை மக்கள் புரிந்து கொண்டனர். அயோத்தியிலிருந்த மக்கள் வாழ முடியாமல் வெளியேற்றப்பட்டனர். மோடி தோல்வி என்பது அவரை இயக்குகின்ற ஆர்.எஸ்.எஸ். தோல்வியாகும்.
1925இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அதன் நூற்றாண்டில் மக்கள் தோல்வியைக் கொடுத்துள்ளனர்.
திராவிட நாடு கேட்பீர்களா என்ற நண்பரிடம் கூறினோம் திராவிட இந்தியாவாக உருவாக்குவோம் என்று. -இ வ்வாறு கழகப் பிரச்சாரச்

செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையில் குறிப்பிட்டார். துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். சிறப்புக்கூட்ட முடிவில் தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.
புலவர் பா.வீரமணி, விழிகள் வேணுகோபால், கா.அமுதரசன், சி.வெற்றிச்செல்வி, துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு மற்றும் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment