2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி - பா.ஜ.க. கூட்டணியிடையே கடும் போட்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி - பா.ஜ.க. கூட்டணியிடையே கடும் போட்டி!

featured image

தமிழ்நாட்டில் 40–க்கு 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி முன்னிலை!
பா.ஜ.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை!

புதுடில்லி, ஜூன் 4- 18ஆவது நாடாளுமன்ற மக்கள வைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 19இல் முதல் கட்டமாகத் தொடங்கி, கடந்த ஒன்றாம் தேதி வரை மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றன. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் வாக்களித்தனர்.
தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (4.6.2024) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2ஆம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் இன்று (4.6.2024) எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்., பாஜகவும், மோடி, அமித்ஷா என அதன் அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்களும் எவ்வளவு முயன்றாலும், மதவாதம், ஜாதியவாதம் என வகுப்புவாத வெறியாட்டங்களுக்கு என்றுமே இடம் கிடையாது என்று பறைசாற்றக்கூடிய அளவில் நாட்டிலேயே தனித்துவம் மிகுந்த, முன்னோடி மாநில மாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்பதை இந்த தேர்தலும் உறுதிப்படுத்தியுள்ளது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கே பெரும் வெற்றி வாய்ப்பு என்று தமிழ்நாடு, புதுச்சேரி பறை சாற்றியுள்ளது.
உ.பி.யிலும் மதவாதம், ராமன் கோயில் எடுபடவில்லை
காவி வட்டாரமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகை யில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹிந்துத்துவ மதவாதம், ராமன் கோயில் என எதுவும் பெரிதாக எடுபடவில்லை. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் என்று தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

உத்தரப்பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான் என பல்வேறு வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேற்கு வங்கத்தில் தனித்தே களம் கண்டாலும், இந்தியா கூட்டணியில் உள்ளதாக தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரசு கட்சி அதிக இடங்களில் (40 இல் 32) முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தப்பட்டதிலிருந்து, வாக்கு எண்ணிக்கை வரை நேர்மையான முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்லாமல், உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் வலியுறுத்து கின்ற தேர்தலாக இது அமைந்துவிட்டது. முன் எப்போதையும் விட தேர்தலில், அரசமைப்புச்சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு தழுவிய அளவில் ஒலித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி-
முன்னிலையில் இந்தியா கூட்டணி
தமிழ்நாட்டில் 39 இல் 39 இடங்களிலும், புதுச்சேரி யிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி முகத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தூத்துக்குடி, மதுரை, மத்திய சென்னை, நீலகிரி, மயிலாடுதுறை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி, தமிழ்நாடு- புதுச்சேரியில் 40/40க்கு என பெருவெற்றிக்கான உறுதி கிடைத்துள்ளது. இதன் மூலம் சமூகநீதி – மதச்சார்பின்மைக்கு ஆதரவான குரலை வலுவாக உறுதிசெய்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்.
தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் – காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் தலைமையில் அனைத்துக் கட்சியினரின் உழைப்புக்குப் பெரு வெற்றி கிடைத்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வழங்கி வரும் முழுமையான ஆதரவு இதில் பிரதிபலிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. 10,000 என்ற அளவில் மட்டுமே வாக்கு வித்தியாசம் உள்ள இந்த 165 தொகுதிகளுள் 89 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 69 தொகுதிகளில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த 4 மணி நேரமாக நடந்து வருகிறது.
பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ள தொகுதிகளில் சுமார் 31 தொகுதிகளில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்கிற நிலையே தொடர்ந்து வருகிறது. 8 தொகுதிகளில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி நீடிக்கிறது! பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ள தொகுதிகள் குறையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் 3 மணி நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பின் மதியம் 3 மணி நிலவரத்தை ஆராய்வதன் மூலமே வெற்றியை உறுதிபட கணிக்க முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜகவின் செல்வாக்கு மிக்க தொகுதியாகக் கூறப்படுகின்ற இந்தூர் தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க. 286, இந்தியா கூட்டணி 235, பிற 22 என முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக முடிவுகள் வெளியானால்தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று உறுதிப்படுத்தப்படும்.
இந்நிலையில், ஆந்திராவில் முன்னிலை பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு அவர்களையும், பீகாரில் நிதிஷ்குமார் அவர்களையும் இந்தியா கூட்டணி சார்பில் சரத்பவார் அவர்கள் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க.வும் அவர்களைக் கூட்டணியில் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றது.
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

No comments:

Post a Comment