200 ஆண்டுகால வரலாற்றில் மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

200 ஆண்டுகால வரலாற்றில் மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் வெற்றி

featured image

மெக்சிகோ சிட்டி ஜூன் 4- மெக்சி கோவின் 200 ஆண்டு கால வரலாற்றில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் 2ஆவது பெரிய பொருளாதார நாடு மெக்சிகோ. இங்கு தற்போதைய அதிபராக ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஓபரடார் (வயது 70) உள்ளார். மெக்சிகோவை பொறுத்தவரை 6 ஆண்டு களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இவரது பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2.6.2024 அன்று நடைபெற்றது.

அப்போது வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசை யில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனைய டுத்து தேர்தல் முடிவுகள் நேற்று (3.6.2024) வெளியாகின. இதில் ஆளும் மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷீன்பாம் (வயது 61) 60 சதவீத வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட் டியிட்ட சோச்சிட்கால்வேஸ் 27 சதவீத வாக்கு மற்றும் ஜார்ஜ் அல்வாரெஸ் 1 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினர்.

இதன் மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை கிளாடியா தட்டிச்சென்றார். மெக்சிகோவின் 200 ஆண்டு கால வரலாற்றில் இவரே முதல்பெண் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது மெச்சிகோ நகர மேயரான இவர் கால நிலை மாற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. கிளாடியாவின் வெற்றிக்கு அதிபர் ஆண்ட்ரெஸ்லோபஸ் உள்பட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தேர்தல் முடிவு குறித்து கிளாடியா கூறுகையில் ‘இது நாட்டில் உள்ளஅனைத்து பெண்களுக்குமான வெற்றி” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment