தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு

சென்னை, ஜூன் 7 அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கோயில்திருப்பணிகளை மேற்கொண்டு வருவதோடு, அறப்பணிகளாக கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நிறுவி சமூக மேம்பாட்டுக்கு அரும் பணியாற்றி வருகிறது.

கோயில்கள் சார்பில் 25 பள்ளிகளும், ஒரு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி உட்பட 10 கல்லூரிகளும், திருமடங்களின் சார்பில் 7 பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 10 கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக 51 முக்கிய நிறுவனங்கள் மூலம் கல்லூரி வளாக நேர்காணல் நடத்தப்பட்டன.

இந்நேர்காணல் மூலம் 1,894 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 141 மாணவர்களும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 34 மாணவர்களும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி ஆண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 மாணவிகளும், பழனிசின்னக்கலையம்புத்தூர் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் 556 மாணவர்களும், மயிலாடுதுறை மாவட்டம் மேலையூர் பூம்புகார் கல்லூரியில் 107 மாணவர்களும், தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 641 மாணவர்களும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 111 மாணவர்களும், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 16 மாணவர்களும், பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 197 மாணவர்களும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சிறீ தேவிகுமரி மகளிர் கல்லூரியில் 66 மாணவர்கள் என 1,894 மாணவர்கள்பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment