இயக்க மகளிர் சந்திப்பு (17) கருப்புப் புடவை அணியும்போது, கூடுதல் துணிச்சல் பெறுகிறேன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

இயக்க மகளிர் சந்திப்பு (17) கருப்புப் புடவை அணியும்போது, கூடுதல் துணிச்சல் பெறுகிறேன்!

featured image

வணக்கம்! தங்கள் குடும்பம் குறித்து  அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?

என் பெயர் ம.கவிதா. பிறந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மங்கலப்பள்ளி எனும் சிற்றூர். வயது 48 ஆகிறது. இணையர் பெயர் வி.ஜி.இளங்கோ. திருமணம் நடைபெற்றது 1994 ஆம் ஆண்டு. ஒரே பையன். பெயர் இளம்பரிதி. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பு முடித்து, தற்போது அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்பம், நிதி மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகத்தில் எப்போது இணைந்தீர்கள்?

நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பின்னாளில் தாலி தேவையில்லை என்கிற அளவிற்கு வளர்ச்சி இருந்தது. எனது அண்ணன் எம்.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மூலம், அய்யா கே.சி.எழிலரசன் அவர்கள் நட்பு கிடைத்து, அவர்கள் மூலமே 2009 ஆம் ஆண்டு இயக்கத்திற்கு வந்தோம். எங்கள் புதிய இல்லம் திறப்பு விழாவிற்கு ஆசிரியர் அவர்களை அழைத்து வந்ததும் கேசி.எழிலரசன் அவர்கள் தான்! அவ்விழாவில் ஆசிரியர் குறித்து சிறு கவிதை ஒன்று வாசித்தேன். “வாழ்வியல் சிந்தனைகள் பல தந்தீர்! எ‌மை வாழ்நாளெல்லாம் சிந்திக்க வைத்தீர்! சிந்திக்க வைத்ததால் சிரிக்க வைத்தீர்! எளிமையான வாழ்வின் வழிகாட்டியே, தங்கள் இளமையின் இரகசியமென்ன புன்னகையோ? எப்போதும் உமது உடை கருப்பல்லவோ? அதுவே உமக்கு சிறப்பு மல்லவோ? பெரியார் வழி நின்று பெண்ணினத்தைப் போற்றுகின்றீர்! நன்றி மலர்களை மாலையாக்குகிறோம் ஏற்பீர்!” எனக் கடகடவென பேசிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினேன்.

தாங்கள் கணித்த வகையில், இயக்கத் தோழர்களின் சிறப்புகள் என்ன?

என்னைப் பொறுத்தவரை வெளியில் அதிகம் காட்டிக் கொள்ளாத (Invisible Member) சூழல்தான் பிடித்திருக்கிறது. ஆனாலும் இப்போது கொஞ்சம் அறிமுகமாகி இருக்கிறேன். கருஞ்சட்டைத் தோழர்கள் உண்மையைப் பேசுவார்கள், ஊருக்கு நன்மை செய்வார்கள், வாழ்வில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எனும் சிந்தனையில் இருப்பார்கள். ஒவ்வொரு தோழரின் தனிப்பட்ட வாழ்வுமே ஒரு பிரச்சாரக் களம் தான்! குறிப்பாக, “ஒரு பெண்ணாக, எந்த மனத்தடையும் இன்றி, இந்த இயக்கத்தில் செயல்பட முடியும் என்பது நான் அனுபவத்தில் கண்டது! அந்தச் சுயமரியாதை வாழ்விற்கு அடித்தளமிட்ட எனது பெற்றோர் இலட்சுமி- எம்.கே.எஸ்.மணி ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நூல் வாசிப்புக் குறித்துக் கூறுங்கள்?

வாசிப்பது எனக்கு விருப்பமான ஒன்று! பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவராக என்னை நியமித்துள்ளார்கள். 100 ஆவது நிகழ்வை எட்டவிருக்கும் இணைய வழி நிகழ்வுகளில் பங்கேற்று, எனது பங்களிப்பை அளித்து வருகின்றேன்! ஆசிரியர் அவர்களின் மேல் அளவு கடந்த பற்றுதல் ஏற்பட “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டுரைகளே மிக முக்கியக் காரணம். வரிவிடாமல் படித்துவிடுவேன்!
“ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வாழ்வும் பணியும்” என்கிற நூலை பேராசிரியர் நம். சீனிவாசன் அவர்கள் எழுதி இருந்தார்கள். அற்புதமான அந்த நூல், புதிய சிந்தனைகளை எனக்குள் ஏற்படுத்தியது! ஆசிரியர் அய்யாவிடம் கையொப்பம் வாங்கி பாதுகாத்து வருகிறேன்! கதை, கவிதை, கட்டுரை எழுதும் ஆர்வம் அதிகம். கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யாவும் எழுதுவதற்குத் தொடர்ந்து உற்சாகம் அளிப்பார்கள்!

இயக்கச் செயல்பாடுகள் குறித்துப்பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

எப்போதும் தவறவிடாத பெரியார் பிறந்த நாள் விழாக்கள், எங்கள் பகுதியில் ஆசிரியர் பங்கேற்கும் கூட்டங்கள், மாவட்ட அளவிலான கலந்துரையாடல்கள், குறிப்பாக மகளிரணிக் கூட்டங்கள், டிசம்பர் 2 சுயமரியாதை நாள் நிகழ்வுகள், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், இயக்கத் தோழர்களின் குடும்ப நிகழ்வுகள், இல்லத் திறப்பு விழாக்கள், இணையேற்பு நிகழ்வுகள், இறுதி நிகழ்வுகள் மற்றும் பெரியார் திடலில் நடைபெறும் மாநில அளவிலான நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வருகிறேன்!

பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது, அருகில் இருப்பவர்களுக்கு இனிப்புகள் வழங்குவது, மகளிர் அனைவரும் ஆட்டோக்களில் நகரம் முழுவதும் வந்து, அய்யாவின் படங்களுக்கு மாலையிடுவது என மகிழ்ச்சியோடு செயல்படுவோம்!

“பெரியார்” எனும் பட்டத்தைப் பெண்கள் வழங்கிய போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சட்டம் (Photo Frame) போட்டு வீடுகளில் மாட்ட வேண்டும் என ஆசிரியர் கூறியதையடுத்து, நான் அவ்வாறே செய்து, பிற மகளிருக்கும் சட்டம் போட்டுக் கொடுத்தேன். ஆசிரியர் அவர்களுக்கும் ஒன்று வழங்கினேன்!

பங்கேற்ற மாநாடுகள் குறித்த நினைவுகளைக் கூறுங்கள்?

திருச்சி, சிறுகனூரில் நடைபெற்ற ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி மாநாடு, தருமபுரி மற்றும் ஒசூரில் நடைபெற்ற ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு, வேலூர் புதுமைப் பெண்கள் மாநாடு, கோயம்புத்தூர் புரட்சிப் பெண்கள் மாநாடு, வேலூர் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு, சேலம் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு, செஞ்சி பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநாடு, குடந்தை திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாடு, ஈரோட்டில் நடைபெற்ற ஆசிரியர் அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, தஞ்சாவூர் இளைஞரணி மாநாடு, திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாடு, மத்தூர் திராவிடர் எழுச்சி மாநாடு,

காவேரிப்பட்டினம் பெரியார் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்ற நிறைவு இருக்கிறது!

இயக்கத்தில் வகித்த பொறுப்புகள், போராட்டங்களில் சிறை சென்ற அனுபவம் குறித்துக் கூறுங்கள்?

திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி செயலாளர் மற்றும் மகளிரணி தலைவராகப் பணியாற்றியுள்ளேன். தற்சமயம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவராகச் செயல்படுகிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற (2010) இரயில் மறியலில் கைதானது,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை பெற சோலையார்பேட்டை(2013) மற்றும் திருப்பத்தூர் (2016) போராட்டங்களில் கைதானது, தருமபுரியில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் (2019) கைதானது என்கிற அளவில் சிறை அனுபவங்கள் இருக்கின்றன!

உங்கள் சுற்றத்தில், உங்களால் ஆன மாற்றங்கள் குறித்துச் சொல்ல முடியுமா?

எங்கள் குடும்பம் மற்றும் ஊரில் சில மாற்றங்கள் ஏற்பட நான் காரணமாக இருந்திருக்கிறேன்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே தாலி, மெட்டி, குங்குமம் இல்லாமல் வாழ்வது எங்கள் ஊரில் அதிசயம்தான்! நடக்கக் கூடாத காரியம் நடந்தது போல பார்ப்பார்கள். இன்னும் சொன்னால் எனக்குத் திருமணம் ஆகவில்லை என்றே பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகுதான் தாலி அணியாமல் இருப்பது ஒரு “கொள்கை வழி” செயல்பாடு என அவர்களுக்குத் தெரிய வந்தது. இயக்கப் பெண்களின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் தான், தாலி எனும் புனிதத்தைத் தமிழ்நாட்டில் தகர்த்தெறிந்தது!

ஆண்களிடம் இயல்பாகப் பேசும் சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டிற்கு வரும் தோழர்களிடம் உரையாடுவதும், கைகுலுக்குவதும் இயல்பானது! இவையெல்லாம் என் சுற்றத்தில் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டது.
(தொடர்ச்சி 14ஆம் பக்கம் பார்க்க…)

இப்போது ஏற்றுக் கொண்டார்கள் அல்லது விநோதமாகப் பார்ப்பதில்லை! எங்கள் குடும்பங்களில் பொது வாழ்விற்கு நான்தான் முதலில் வந்திருக்கிறேன்; தயக்கமின்றியும் செயல்படுகிறேன்! காரணம் இந்த இயக்கம் மட்டுமே!

நகைகள் அணியும் வழக்கம் உண்டா?

நகை அணிந்தால்தான் மதிப்பு எனப் பெண்கள் நினைக்கிறார்கள். நான் அதை உடைக்க நினைக்கிறேன்; என்னளவில் எளிமைதான் அழகு என வாழ்கிறேன்.

இறப்பு நிகழ்ச்சிகளில் கூட பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள். தலைவிரி கோலமாக இருப்பது, கட்டிப் பிடித்து அழுவது என இயல்புக்கு மீறி இருக்கும். எங்கள் குடும்பத்தில் மாமனார், மாமியார், அக்கா இணையர் போன்றோர் இறந்த நேரத்தில் எந்தச் சடங்குகளும் இல்லாமல், போலியான நடவடிக்கைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இது எங்கள் அளவிலும், பிறர் பார்வைக்கும் நல்ல மாற்றமாக இருந்தது!

அதேபோல பெண்கள் குழுவாக இருக்கும் போது உணவு சமைப்பது, வீடு பராமரிப்பது, ஆடை, அணிகலன்கள் குறித்துப் பேசுவது என்பவற்றை மாற்றி, அறிவார்ந்த வகையில் உரையாடலை மாற்றி அமைப்போம்!

உறவினர்களின் சம்பிரதாய விழாக்களில், உங்கள் கொள்கை அணுகுமுறை எப்படி இருக்கும்?

கொள்கையில் சமரசம் என்பதே இருக்கக் கூடாது என நினைப்பேன். சடங்கு நிகழ்வுகளின் போது உறவினர்கள் அழைப்பார்கள். மென்மையாகக் கடந்துவிடுவேன். வாய்ப்பிருக்கும் போது, அதனுள் இருக்கும் மூடநம்பிக்கைகளையும் எடுத்துக் கூறுவேன். என்ன செய்கிறீர்கள் எனச் சிலர் கேட்பார்கள். திராவிடர் கழகத்தில் இருக்கிறேன் என்று சொல்லுவேன். அதிலும் கருப்புப் புடவை அணியும் பொழுது கூடுதல் துணிச்சல் வரும்! திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூலையே கொடுப்பேன்!

வீட்டில் இருப்பவர்கள் பேசாதே, பேசாதே என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த இயக்கம் தான் பேசுங்கள், பேசுங்கள் என அழகு பார்த்தது! பொதுக் கூட்டங்கள், மாநாடுகளில் கூட பேசிய அனுபவங்கள் உண்டு! வீட்டிற்குத் தோழர்கள் வந்தால், பயனாடை அணிவித்து வரவேற்பதும், அவர்களின் இயக்க அனுபவங்களைப் பேசி மகிழ்வதும் எனக்குப் பிடித்தமான ஒன்று!

அதேநேரம் பொது வாழ்விற்குப் பெண்கள் வர விரும்பினால் அவ்வளவு எளிதாக வீடும், தெருவும், ஊரும் வாழ்த்திவிடுவதில்லை! போராட்ட வாழ்க்கையில்தான் வென்று வர வேண்டியிருக்கிறது!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்துத் தங்கள் பார்வை என்ன?

மகளிருக்கு மிகப் பெரிய மரியாதையும், ஊக்கத்தையும் கொடுக்கக் கூடிய பெரியாரின் வாழ்நாள் மாணவர்! பெரியாரை உலகமயமாக்கும் பேராளர்! வாழ்வியல் அருளி! சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இல்லாமல், திறந்த புத்தகமாக இருக்கும் தலைவர்!தமிழர் நலனுக்கான வரலாற்றுப் பெட்டகமாக அறிவூட்டிக் கொண்டிருக்கும் தலைவர்! தம் உடல் நலத்தைவிட, மக்கள் நலனே பெரிதென ஓய்வில்லாமல் உழைப்பவர்! பயணங்களில் பகல், இரவு பாராமல் தொண்டாற்றும் திராவிடத்தின் திசைகாட்டி! தோழர்கள் சகிதம், ஆசிரியர் அவர்களுடன் வேனில் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது! பாண்டவர் குட்டையில் எடைக்கு எடை வெல்லம் வழங்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலையில் பெரியார் உலகிற்கு நிதி அளித்த நிகழ்ச்சி, மங்களாதேவி- பழனி ஆகியோரின் இல்லத் திறப்பு விழா, மத்தூர் இந்திரா காந்தி – அண்ணா சரவணன் இல்ல இணையேற்பு விழா, கிருஷ்ணகிரி மேனாள் மாவட்டத் தலைவர் அறவரசன் இல்லத் திருமண நிகழ்வு, சென்னையில் நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடல் கூட்டம், ஏலகிரியில் இருநாள் பயிற்சி முகாம் என ஆசிரியர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் உடன் கலந்து கொண்டது மறக்க முடியாதது!

1000 வாழ்வியல் சிந்தனைகளுக்கு மேல் எழுதிக் குவித்த தலைவர் கி.வீரமணி அவர்கள், நான்கு தலைமுறை மக்களுக்கும் பயன்பட்டு வருகிறார்; உழைத்து வருகிறார்! இந்த வரலாற்றுச் சிறப்பு யாருக்கும் கிடைத்திடாது”, எனக் கவிதா தம் நேர்காணலில் கூறினார்.

No comments:

Post a Comment