‘நீட்’ ஊழல் குளறுபடிகள் 1,563 பேருக்கு மதிப்பெண் ரத்து ஜூன் 23இல் மறு தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

‘நீட்’ ஊழல் குளறுபடிகள் 1,563 பேருக்கு மதிப்பெண் ரத்து ஜூன் 23இல் மறு தேர்வு

புதுடில்லி, ஜூன் 15- நீட் தேர்வில் கருணை மதிப் பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. மே 5ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான இளங்கலை மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்தத் தேர்வில் இது வரை இல்லாத அளவு மாணவர்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற் றுத் தேர்ச்சி பெற்றனர்.
ஒரே மய்யத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, நடை முறைச் சாத்தியம் இல்லாத வகையில் சிலருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது எனப் பல அம்சங்கள் நீட் தேர்வு நடத்தப்படும் முறை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கின. இதோடு வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர். தேர்வை ரத்து செய் வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப் பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
முன்னதாக, கலந்தாய்வு நடத்தலாம் என நீதிபதி கள் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது. இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விளக்கத்தை தேசிய தேர்வு முகமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதன்போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நரேஷ் கவுசிக், “1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும்.

இதற்கு அறிவிப்பு 13.6.2024 அன்று வெளியிடப் பட்டது. மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதியும், அதன் முடிவுகள் 30ஆம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண் டும் என நீதிபதிகள் தெரி வித்தனர்.

மேலும், 1,563 பேருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண் கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களது அசல் மதிப்பெண் விவரம் வெளியிடப்படும். அந்த முடிவுடன் கலந்தாய்வில் பழைய தேர்வில் பெற்ற மதிப் பெண்களுடன் பங்கேற்பது அல்லது மறுதேர்வை எதிர்கொள்வது குறித்த முடிவை தேர்வர்கள் எடுக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment