சென்னை, ஜூன் 6 ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் திட்டங்களை வழங்கியது குறித்து பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்ததால் தமிழ்நாட்டில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடைபெற்று முடிந்துள்ள 18-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றி தனித்தன்மையானது. திமுக தலைவராக கடந்த 2018-இல் பொறுப்பேற்ற நிலையில், அதன்பின் நடைபெற்ற 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.
இந்தாண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி, பாஜகவுக்கு எதிராக கட்டமைத்து, தேசிய அளவில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற அடித்தளமாக விளங்கினார். அதுமட்டுமின்றி கூட்டணிக்கட்சிகள் கட்டுக் கோப்பாக செயல்பட உறு துணையாக விளங்கினார். தேர்தல் பணி தொடங்க ஓராண்டுமுன்னதாகவே, மக்களவைத் தொகுதி வாரியாக பாக முகவர்கள் கூட்டத்தை நடத்தினார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் இந்தியாவைக் காப்போம், உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்புகளில் பல்வேறு கருத்துகளை கூறி, மக்களிடையே பேசுபொருளாக மாற்றினார்.
தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளை அழைத்து பேசி, தமிழ்நாடு புதுவையில் 40 தொகுதிகளில், 50 சதவீதத்தை கூட்டணி கட்சிகளுக்கு பெருந்தன்மையுடன் பகிர்ந்த ளித்தார். எளிதாக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கி, கடுமையான தொகுதிகளில் திமுகவை போட்டியிடச் செய்தார். இதன்மூலம், 2004-ஆம் ஆண்டுக்குப்பின் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 40-லும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஓய்வு சிறிதும் இல்லாமல் தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி தொய்வின்றி தொடர்ந்தார்.
பிரச்சாரக் கூட்டங்க ளில் திமுக அரசு நிறைவேற்றிய, விடியல் பேருந்து பயணத்திட்டம், 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், மக்களுடன் முதல்வர், காலை உணவு, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தார்.
பத்தாண்டுகள் ஆட்சி செய்த பாஜக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத பொய்முகத்தை மக்கள் அடையாளம் காணச்செய்தார். தொகுதி வாரியாகவேட்பாளர்கள், தொண்டர்களை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்து, தேர்தல் பணியாற்றஉற்சாகப்படுத்தினார். இத்தகைய பணிகளால் 40 தொகுதிகளிலும் நூறு சதவீதம் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி பெற்றது மகத்தான வெற்றியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment