தமிழர்க்கே அடையாளம் வாங்குவோமே விடுதலை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

தமிழர்க்கே அடையாளம் வாங்குவோமே விடுதலை!!

குலக்கல்வி கொண்டுவந்த
கொடுமனத்தார் ஆச்சாரியார்
தலைக்கனத்தை நொறுக்கிவென்ற
தடிதானே விடுதலை!!

பள்ளியில்லா ஊரில்லை
படிப்பில்லா ஆளில்லை
எல்லோர்க்கும் எல்லாமும்
ஈன்றதன்றோ விடுதலை!!

காசுக்குப் பலகாரம்
கடைவெளியில் விற்போரும்
‘பூசுரர்யாம்’ என்றபோது
புத்திதந்த விடுதலை!!

எந்தக் கடவுளரும்
ஈயாத சமத்துவத்தை
ஓசையின்றி ஊரெல்லாம்
உலவவிட்ட விடுதலை!!

புகைவண்டி நிலையத்தில்
புத்தமிழை நீக்கவந்த
பகைஇந்தி பயந்தோடப்
படைநடத்தும் விடுதலை!!

நகைவிடுத்துக் கல்விகற்றே
நாடாள வாவென்றும்
சிகையறுத்து நடமாடும்
சீர்சொன்ன விடுதலை!!

படிதாண்டாப் பெண்ணினத்தார்
பாரெல்லாம் ஆட்சிசெய்ய
முடிவெடுத்து முதன்முதலாய்
முழங்கிநின்ற விடுதலை!!

அடிதொழவோ ஆணினத்தை
அறுத்தெறிவீர்
ஆண்மையினை
விடியாத பெண்மகட்கு
விடிவுசொன்ன விடுதலை!!

சாதிசொல்லித் தடுத்துவைத்தார்
சமநிலையைப் பெறுவதற்கே
நீதிமன்றின் தலைவரென
நிமிர்த்திவைத்த விடுதலை!!

நாதியில்லார் என்றேதான்
நம்கோவில் கதவடைத்தார்!
ஓதிநாமும் வணங்கிடவே
உரிமைதந்த விடுதலை!!

ஓலமிட்டுச் சங்கியெல்லாம்
ஓ! நானே கடவுளென்று
கால்பிடித்துக்
கெஞ்சவைத்தக்
காரணந்தான் விடுதலை!!

ஞாலத்தில் நாத்திகத்தை
நாளெல்லாம் ஓதிநின்றே
காலத்தை வென்றுநமைக்
காக்கின்ற விடுதலை!!

நீண்டபல போராட்டம்
நித்தநித்தம் கண்டாலும்
ஊன்றுகோலாய்த் தமிழர்க்கே
உதவிநின்ற விடுதலை!!

ஆண்டுபல வீழ்ந்துபட்ட
அடிமைநிலை போக்குதற்கே
மூண்டெழுந்த திராவிடத்தின் முழக்கந்தான் விடுதலை!!

பெரியாரின் போர்வாளாய்ப்
பிறந்துவந்த விடுதலை!
உரியாராம் வீரமணி
உழைப்பீந்த விடுதலை!!

சரியாகத் தொண்ணூறாம்
ஆண்டுதொடும் விடுதலை!!
தமிழர்க்கே அடையாளம்
வாங்குவோமே விடுதலை!!

– சுப முருகானந்தம்
மாநிலச் செயலாளர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். தமிழ்நாடு.

No comments:

Post a Comment