டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் அவசர கூட்டம் மக்களவைத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்துவது குறித்து வியூகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் அவசர கூட்டம் மக்களவைத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்துவது குறித்து வியூகம்

featured image

புதுடில்லி, மே 13- பாஜகவை வீழ்த் துவது தொடர்பாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுடன் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 10ஆம் தேதி பிணையில் விடுவிக்கப் பட்டார். இதைத் தொடர்ந்து, டில்லியில் அவர் 11.5.2024 அன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டில்லியில் நேற்று (12.5.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமை வகித்தார்.

அப் போது, மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக உறுப்பினர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட் டத்தில் அவர் பேசியதாவது:
உச்ச நீதிமன்றம் எனக்கு இடைக்கால பிணை வழங்கியதை அதிசயமாகவே பார்க்கிறேன். சிறையில் இருந்தபோது குடிநீர், மின்சாரம், மருத்துவ சேவை மக்களுக்கு முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து மட்டுமே என் சிந்தனை இருந்தது. டில்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, கட்சியை அழிக்க பாஜக தீவிர முயற்சி செய்கிறது. அதற்காகவே ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத் தடுத்து கைது செய்யப்பட்டனர். என்னை கைது செய்து கட்சியை உடைக்க சதி செய்தனர். ஆனால், பாஜகவின் முயற்சி, சதி வெற்றி பெறவில்லை. என்னை கைது செய்ததால் முன்பைவிட ஆம் ஆத்மி பலம் அடைந்திருக்கிறது.
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்குவாங்க பாஜக தலைமை தீவிர முயற்சி மேற்கொண் டது. அந்த முயற்சி பலன் அளிக் காததால் சிலருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் நங்கூரம்போல கட்சியில் உறுதியாக நின்றனர். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.
-இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

மோடியின் அரசியல்
வாரிசு யார்?
முன்னதாக செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயது ஆகிறது. வயதை காரணம் காட்டி அத்வானியை அரசியலில் இருந்து ஓய்வு பெற செய்தனர். இதேபோல பிரதமர் மோடியும் ஓய்வு பெறுவாரா என்று ஏற்கெனவே கேள்வி எழுப்பினேன்.
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக, ‘75 வயதில் மோடி ஓய்வு பெற மாட்டார். நாட்டுக்காக தொடர்ந்து சேவை செய்வார்’ என்று தெரிவித்துள்ளது. தனது அடுத்த அரசியல் வாரிசு யார் என்பது குறித்து பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.
பாஜக மூத்த தலைவர்கள் சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, ரமண் சிங் ஆகியோரின் அரசியல் வாழ்க்கைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள் ளார். இப்போதைய நிலையில் 2-ஆவது இடத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்ய நாத் உள்ளார். அவரை 2 மாதங்களில் பதவியில் இருந்து நீக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இது பற்றி பகிரங்கமாக கேள்வி எழுப்பினேன்.

75 வயதில் பிரதமர் மோடி ஓய்வு பெற மாட்டார் என்று மட்டுமே பாஜக விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் பதவியில் இருந்து ஆதித்யநாத் நீக்கப்பட மாட்டார் என்று பாஜக உறுதி அளிக்கவில்லை.
அப்படியானால், அடுத்த 2 மாதங்களில் அவர் முதலமைச்சர் பதவியை இழப்பார் என்பது உறுதி யாகிறது.
ஒரே நாடு, ஒரே தலைவர் திட்டத்தில் பாஜகவில் மூத்த தலை வர்கள் ஓரம்கட்டப்படுகின்றனர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment