சென்னையில் தெரிந்தது பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

சென்னையில் தெரிந்தது பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையம்

சென்னை, மே 11- சென்னையில் நேற்றிரவு (10.5.2024) தென்பட்ட பன்னாட்டு விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் ஒத்துழைப் போடு விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற் கொள்வதற்காக பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் அமைக்கப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி பன்னாட்டு விமானக் குழுக்கள், ஏவுகணை, வாகனங்கள், விமான செயல்பாடுகளின் பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, பன்னாட்டு அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்த விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றிவரும் இந்த பன்னாட்டு விண்வெளி மய்யம் நாள்தோறும் பூமியை 15.5 முறை வலம் வருகிறது. அவ்வாறு விண்வெளி மய்யம் சுற்றி வருகையில் சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு. அப்போது அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும். அதன்படி சென்னையில் இருந்து மிக அருகில் சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் நேற்று (10.5.2024) கடந்து செல்லும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்திருந்தது. அதன்படி நேற்றிரவு தென் மேற்கு திசையில் இரவு 7.09 முதல் 7.16 மணி வரை சுமார் 7 நிமிடங்கள் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் கடந்து செல்வதை காண முடிந்தது. இந்த காட்சியை பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். அப்போது வானில் நட்சத்திரம் நகர்வதை போன்று அந்த நிகழ்வானது இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment