மூடநம்பிக்கையின் உச்சம் இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

மூடநம்பிக்கையின் உச்சம் இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவாம்!

சிவகங்கை, மே.15- இறந்த சிறுமிக்கு கட்-அவுட் அமைத்து அவருடைய தாயாரால் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டது. உயிரிழந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராக்கு. இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி.
சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு அலங்காரம் செய்துகொள்வது என்றால் மிகவும் விருப்பமாம். உற வினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போதெல்லாம் தனது பூப்புனித நீராட்டு விழா வையும் சிறப்பாக நடத்த வேண்டும் என கூறினாராம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமியாக இருந்தபோது உடல்நலக்குறைவால் பாண்டிச்செல்வி இறந்துவிட்டார்.

பூப்புனித நீராட்டு விழா தற்போது பாண்டிச்செல்வி உயிருடன் இருந்தால் 11 வயதாகி இருக்கும் என்றும், பூப்பெய்து இருப்பார் எனவும் ராக்கு நினைத்தார். எனவே, அன்னையர் நாளன்று, தனது மகள் நினைவாக பூப்புனித நீராட்டு விழா நடத்த ராக்கு திட்டமிட்டார். அன்றைய நாள் திருமண மண்டபம் கிடைக்காததால் மறுநாள் இந்த விழாவை ஒரு மண்டபத்தில் நடத்தினார்.

கட்-அவுட்

பாண்டிச்செல்விக்கு பட்டுச்சேலை. நகை, மலர் மாலை அணிவித்தது போன்று ‘கட்-அவுட்’ செய்தனர். உறவினர் களையும், கிராமத்தினரையும் விழாவுக்கு ராக்கு அழைத்து இருந்தார். விழா மேடையில் பாண்டிச்செல்வி கட்-அவுட் வைக்கப்பட்டு இருந்தது. அதன் கீழ் அவர் பயன்படுத்திய கொலுசு உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், உறவினர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களும் பரப்பி வைக்கப் பட்டிருந்தன.

விழாவுக்கு வந்தவர்கள் புகைப்படம் எடுப்பது போன்று நின்று பாண்டிச் செல்வியின் கட்-அவுட்டுடன் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டனர். உணவு சாப்பிட்டு மொய் எழுதினர். மேலும் மண்டபத்துக்கு வெளியே பாண்டிச்செல்வி இல்ல விழா என பேனரும் வைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment