கெத்துக் காட்டிய பெரியார் பெருந்தொண்டர்
சமா.இளவரசன்
ஹிந்து மதத்தின் சடங்குகள், சாஸ்திரங்கள் படி செய்யப்பட்டு, அக்னியை ஏழு முறை சுற்றிவந்தால் தான் ஹிந்துத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று இந்தியாவின் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிறகு சடங்குகள், சம்பிரதாயங்கள், தாலி அற்ற திருமணங்கள் செல்லும் என்ற தனித்தன்மையான நிலை வந்துவிட்டது. ஆனால், அதற்கு முன்னால் பல்லாயிரக்கணக்கான சுயமரி யாதைத் திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டது. சட்ட அங்கீகாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தந்தை பெரியாரின் இயக்கத்தவர் சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகொண்டனர்.
அந்த வரலாறு ஏராளமான சுவையான செய்திகளைக் கொண்டது.
இந்துச் சட்டப்படி நெருப்பைச் சுற்றி சப்த (ஏழு) அடிகள் எடுத்து வைக்க வேண்டும் என்றுதானே இருக்கிறது, அதை எப்படி அதே வழியில் முறியடிப்பது என்று பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி – பேராண்டாள் இணையர் செய்துகாட்டிய ஒரு செயல்முறை, சுயமரி யாதை இயக்க வீரர்களின் கொள்கைப் பற்றை விளக்கும்.
இந்த இணையரின் இரண்டாம் மகள் தமிழரசி. 1948-ஆம் ஆண்டு மே 9 அன்று பிறந்தவர். இன்றளவும் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கையில் தன்னை தளர்த்திக் கொள்ளாத மன உறுதியும், மாண்பும் கொண்டவர். விடுதலை இதழின் தீவிர வாசகர். வரிவிடாமல் விடுதலையை படித்து குடும்பத்தினருடன் அரசியல் கருத்துகளைப் பகிரக் கூடியவர்.
தமிழரசிக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், 1966ஆம் ஆண்டு, அவரைப் பெண்பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவரின் குடும்பத்தினர் வந்திருந்தார்கள். சுயமரியாதைத் திருமண முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும், தாலி கட்டக் கூடாது என்று என்.ஆர்.சாமி குடும்பத்தின் சார்பில் எடுத் துரைக்கப்பட்டது.
எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு, அடுத்த கட்டம் குறித்து பேசத் தொடங்கியவர்களில் ஒருவர், “திருமணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்ததும் அங்கே நாங்கள் தாலி கட்ட வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
“தாலிக் கயிறை அறுத்து போட்டு விட்டு என் மகளைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவேன்” என்று முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி இருக்கிறார் என்.ஆர். சாமி.
அதைக் கேட்ட பெண்பார்க்க வந்த குடும்பத்தினர் பதறிப் போய், “நாங்கள் விளையாட்டுக்கு சொன்னோம். நீங்கள் ஏன் இவ்வளவு கோபம் அடைந்து விட்டீர்கள்?” என்று மன்னிப்பு கேட்டிருக் கிறார்கள்.
ஆனால், ” ஆரம்பத்திலேயே குறுக்கு சால் ஓட்டுகிறீர்கள். எப்போது உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததோ, அதன் பிறகும் உங்கள் வீட்டில் என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது சரியாக இருக்காது. நீங்கள் கிளம்பலாம்” என்று எழுந்து விட்டாராம் என்.ஆர்.சாமி
அதே ஆண்டு பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மணமகன் தேர்வு செய்யப்பட்டு திருமணம் உறுதியானது. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்த சூழலில், 1966ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் காரைக்குடியில் சமதர்ம மாநாடு நடைபெற்றது. அன்று காலை மணமகள் தமிழரசி – மணமகன் பா.ஜெயராமன் ஆகியோரின் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.
இன்றைக்கு உச்ச நீதிமன்றம் பிற மாநிலங்களுக்கு என்ன தீர்ப்பு தருகிறதோ அதேபடி தமிழ்நாட்டிலும், ஹிந்து திரு மணம் என்றால் நெருப்பு வளர்த்து சப்த அடிகள் எடுத்து வைத்தால் தான் திருமணம் செல்லும் என்று அன்றைக்கும் தீர்ப்பு இருந்தது.
தன் இரண்டாம் மகள் திருமண நிகழ் வில் அதனையும் எதிர்க்கும் வகையில் நூதனமான முறையைக் கையாண்டார் என்.ஆர்.சாமி.
“உனக்கு என்ன நெருப்பை வளர்த்து சுற்றிவர வேண்டும் அதுதானே! இதோ பார்… புராணம், இதிகாசங்கள், ராமாயணம், மகாபாரதம், கடவுள், மதம், ஜாதி, மனு ஸ்மிருதி, மூடநம்பிக்கைகள் என்று எழுதப் பட்ட தாள்களை ஒரு மண்சட்டியில் போட்டுக் கொளுத்துகிறேன்… இந்த நெருப்பு ஓகேயா!” என்று அனைத்தையும் கொளுத்தி, தாலி-சடங்குகள் மறுத்த திருமணத்தை நடத்தினார் என்.ஆர்.சாமி.
(அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மூத்த மகள் ஜனசக்தியின் திருமணமும் சடங்குகள், தாலி அற்ற சுயமரியாதைத் திருமணம் தான். ஆனால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசால் சுயமரியாதைத் திருமணத்திற்கு அங்கீகாரம் தர முடியவில்லை; நீதிமன்றத் தீர்ப்பு என்றெல்லாம் இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான், இரண்டாவது மகளுக்கு இப்படி ஒரு புதுமுறையைக் கையாண்டார்.)
சமூகத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒவ்வொரு குடும்பத்திலும் சுயமரியாதைக் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வர பெரியார் பெருந்தொண்டார்கள் எவ்வளவு முயற்சித்து இருக்கிறார்கள் என்பதற்கு இந்த இரு நிகழ்வுகளும் சிறு உதாரணங்கள்!
No comments:
Post a Comment