பெட்டைக் கோழி கூவாது பிஜேபி சமூகநீதி அளிக்காது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

பெட்டைக் கோழி கூவாது பிஜேபி சமூகநீதி அளிக்காது!

இப்பொழுதெல்லாம் – மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க சமூகநீதியைப் பற்றி பிஜேபி தலைவர்களும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள்.
சமூகநீதிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வளவு எல்லாம் பேசக் கூடியவர்களின் தேர்தல் அறிக்கையில் சமூகநீதி குறித்து ஏதாவது ஒரே ஒரு அறிவிப்பு உண்டா?
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலோ, 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும், நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்று அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யும் என்றும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும்தான் பெரும்பான்மையினர்.
ஜனநாயகம் என்பது என்ன? பெரும்பான்மையின மக்களால் ஆளப்படுவதும், சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமைகள் காப்பாற்றப்படுவதும் தானே!
ஆனால் நாட்டின் நடப்பு நிலை என்ன? இது தலைகீழாகத் தானே இருக்கிறது? இந்த நிலையை மாற்றி அமைக்கும் கொள்கைக் கோட்பாடு பி.ஜே.பி., அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸிடம் உண்டா? அடிப்படையில் இதற்கு எதிரான நிலைப்பாடுதானே!

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, வரலாற்றுச் சிறப்போடு நிறைவேற்றப்பட்டது தானே (மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில்) இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு.
அதனை ஆதரித்ததா பிஜேபி? “குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியையும் பறித்தது” என்பார்களே, இந்த நிலையைத்தானே பிஜேபி கடைப்பிடித்தது.
வெளியிலிருந்து வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு அளித்த பிஜேபி., வி.பி.சிங் அவர்களின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு அறிவிப்புக்குப் பிறகு, தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, அந்த ஆட்சியைக் கவிழ்த்தது அதே பிஜேபி தானே! மறுக்க முடியுமா?

27 விழுக்காடு இடஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங் பிரகடனப் படுத்திய நிலையில், வட மாநிலங்களில் கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டது – ஆர்.எஸ்.எசும் பிஜேபியும்தானே!
வெகு காலத்திற்கு முன்புகூடப் போக வேண்டாம். “மருத்துவக் கல்வியில் முதுகலைப் படிப்பிற்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்க மாட்டோம் – அதுதான் எங்கள் அரசின் கொள்கை” என்று உச்சநீதிமன்றத்தில் அதிகாரப் பூர்வமாக பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி தானே! தி.மு.க. தாக்கல் செய்த வழக்கின்மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாகத்தானே, முதுநிலைப் படிப்பிற்கு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இதர பிற்படுத்தப் பட்டோருக்குக் கிடைத்தது – மறுக்க முடியுமா? மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்டவர்கள் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.க்குப் பாடம் கற்பிக்க மாட்டார்களா? இந்தப் பயத்தில் தான் பிஜேபி வகையறாக்கள் சமூகநீதி சங்கீதம் பாடுகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர்.
18ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி ஆட்சியின் சமூக நீதிக்கு எதிரான கொள்கை, செயல்பாடுகளால், பிஜேபி ஆட்சியை வெகு மக்கள் வீழ்த்திட உறுதியாகவே இருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் நாங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் அல்லர் என்று கூட்டங்களில் பேசும் நடிப்பு வார்த்தைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னீர்களே பிரதமர் மோடி அவர்களே, அந்த வாக்குறுதி என்னாயிற்று என்ற கேள்விக் கணை ஆளும் பிஜேபியை நோக்கி, பிரதமர் மோடியை நோக்கி அங்கு இங்கு எனாதபடி வேக வேகமாகப் பாய்ந்து தாக்குகிறது.
‘பகோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்!” என்ற நக்கலான பிரதமரின் பேச்சு வேலை வாய்ப்புக் கிட்டாத கோடானு கோடி இளைஞர்களின் கோபத்தில் நெய்யை ஊற்றிய விபரீதம் ஆகி விட்டது.
ஏற்கெனவே கல்வி வேலை வாய்ப்புகளில், அஜீரணம் ஏற்படும் உயர் ஜாதியினருக்கு, உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு (EWS) என்று அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டு வாயு வேகத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்ததன் மூலம் மோடி தலைமையிலான பிஜேபி யாருக்கான ஆட்சி என்பது அம்பலமாகி விட்டதே!
நாள் ஒன்றுக்கு ரூ.2200/- வருமானம் உள்ளவர்கள் உயர் ஜாதியினராக இருந்தால் அவர்கள் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தில் ஏழைகளாம்!

இந்த அடிப்படையில் நடைபெற்ற ஸ்டேட் பேங்கு எழுத்தர் தேர்வில் ஏற்பட்ட விளைவு என்ன?
பழங்குடியினருக்கான கட் ஆஃப் மார்க் 53.75 பட்டியலின மக்களுக்கான கட்ஆஃப் மார்க் 61.25 இதர பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான கட்ஆஃப் மார்க் 61.25 உயர் ஜாதி ஏழை என்று கூறப்படும் கூட்டத்திற்கான கட்ஆஃப் மார்க் வெறும் 28.5.
இந்தப் பார்ப்பனப் பகற் கொள்ளையை அறிய மாட்டார்களா ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்டவர்களும்?
சமூகநீதிக்கு எதிரான இந்தப் பிஜேபி., ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள்தான் இந்தத் தேர்தல் நேரத்தில் சமூகநீதியைப் பற்றி ஓங்கி ஓங்கிக் குரல் கொடுக்கிறார்கள்.
சுண்ணாம்பை வெண்ணையென்று ஏமாற்றும் இந்தப் பார்ப்பன – பனியா கூட்டத்துக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்பதில் அய்யம் இல்லை – இல்லவே இல்லை.
பெட்டைக் கோழி கூவாது – பிஜேபி சமூகநீதி அளிக்காது!

No comments:

Post a Comment