ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : ராகுல்காந்தி அரசமைப்புச் சட்டம் பற்றிப் பேசி அம்பேத்கரை அவமதித்துவிட்டதாக பாஜகவால் கைவிடப்பட்ட ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாரே?


– மா.முரளி, தாம்பரம்

பதில் 1 : இந்து மத சட்டத் திருத்தம் குறித்து, அரசியல் சாசனத்தில் சட்டம் கொண்டு வர டாக்டர் அம்பேத்கர் திட்டமிட்டபோது, அதனை எதிர்த்து ஓர் ஆண்டில் மட்டும் 79 கூட்டங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். என்பது தெரியுமா? பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்து அமைச்சர் பதவியும் ஏற்ற ஒருவர் இதுபற்றி எல்லாம் பேசலாமா?
—-
கேள்வி 2 : கருநாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணையம் பாஜகவினர் பரப்பிய போலிக் காட்சிப் பதிவு (வீடியோ) குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதே – ஏன் இந்த தாமதம்?
– க.மாணிக்கம், வேலூர்
பதில் 2 : செத்துப் போன பின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்வதில்லையா?

கேள்வி 3 : “தனது நண்பர்கள் மீதே – பணம் வேனில் கடத்துகின்றனர்” என்று பொதுவெளியில் கூறுகிறாரே மோடி, நண்பர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?
– கல.காளிதாசன், காஞ்சி
பதில் 3 : மோடியின் அமலாக்கத்துறை பேன் குத்திக் கொண்டு இருக்கிறதா?
—-
கேள்வி 4 : மோடியைத் தாக்கிப் பேசினார் என்பதற்காக தனது அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்பட்ட ஆகாஸ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளாரே மாயாவதி?
– தே.வெங்கடேசன், மதுரை
பதில் 4 : மடியில் கனமிருக்கிறதே – என்ன செய்வது?

கேள்வி 5 : தடுப்பூசி குறித்த எதிர் மறையான செய்திகள் வருகின்றன. இதனால் மக்களிடையே பதற்றம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே?
– த.சக்திவேல், நாகர்கோவில்
பதில் 5 : குதிரை காணாமல் போனபின் இலாயத்தை இழுத்துப் பூட்டுகிறார்கள். மக்களின் உயிர்ப் பிரச்சினையில் கூட மோடி அரசு விளையாடுவது புரிகிறது.

கேள்வி 6 : 2019 சட்டமன்றத் தேர்தலில் “அலியைக் கும்பிடுபவர்களுக்கு பஜ்ரங்பலியைக் கும்பிடுபவர்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்றார் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத். இதற்கு 3 நாள்கள் பரப்புரை செய்ய தடைவிதித்தது தேர்தல் ஆணையம். இன்று ஹிந்து ராமர், பாபரி மசூதி, என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பெரிய தலைவர்கள் பேசியும் அமைதிகாக்கிறதே தேர்தல் ஆணையம்?
– நி.தாமரை, சேலம்
பதில் 6 : தேர்தல் ஆணையம் என்பது பிஜேபியின் பினாமி என்பது இப்பொழுதுதான் உங்களுக்குப் புரிகிறதா?
—-
கேள்வி 7 : பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் அங்குள்ள காங்கிரஸ் அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறதே?
– நா.சூரியமூர்த்தி, மல்லை
பதில் 7 : மகன் வெளிநாட்டுக்குக் கம்பி நீட்டி விட்டார்; அப்பன் பதுங்குகிறார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

— 

கேள்வி 8 : பொதுத்தேர்வு முடிவிற்குப் பிறகு தோல்வி, குறைந்த மதிப்பெண் போன்ற காரணங்களால் தன்னுயிர் மாய்க்கும் மாணவர் எண்ணிக்கை, தமிழ்நாடு அரசு சிறப்பு ஆலோசனை திட்டம் மூலமாக பூஜ்ஜியமாகி உள்ளதே – இதை ஏன் மற்ற மாநிலங்களும் பின் பற்றக்கூடாது?
– தா.சாக்கியமுனி, செங்கை
பதில் 8 : எல்லாவற்றிலும் “திராவிட மாடல்” அரசு முன் மாதிரி தானே!

கேள்வி 9 : “வெப்பநிலை அதிகரிக்கவில்லை, நாம் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலை இழக்கிறோம்” என்று ஒரு தரப்பினர் கடந்த கால புள்ளிவிவரங்களை எடுத்துகொண்டு வாதம் செய்கின்றனரே?
– தி.கதிர்வேலன், விருத்தாச்சலம்
பதில் 9 : வாதம் செய்கின்ற பிரச்சினையா இது? மக்கள் படும் அவதியை எதார்த்தமாகப் பார்க்க வேண்டாமா?

கேள்வி 10 : வடக்கில் சில ஊடகங்கள் பாஜகவின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யமாட்டோம் என்று கூறியுள்ளனவே? இது சரிதானா? ஊடகங்கள் அனைவருக்கும் பொதுவானதுதானே?
– வே.பாரிவேந்தன், வந்தவாசி
பதில் 10 : பூனை இளைத்தால் எலி குசலம் விசாரிக்கும் – தெரியாதா? ஊடக உரிமை பற்றி எல்லாம் பிஜேபி பேசத் தகுதி கிடையவே கிடையாது.

No comments:

Post a Comment