"தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்" - தமிழ்நாடு அரசின் அளப்பரும் சாதனைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

"தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்" - தமிழ்நாடு அரசின் அளப்பரும் சாதனைகள்!

சென்னை, மே 27- தமிழ்ப்பணித் திட்டங்களை நிறை வேற்றி உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களி லெல்லாம் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைந் துள்ளார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

“தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும்” ​ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பாடிய வரிகளை இதயத்தில் ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும்; தமிழை ஆட்சி மொழியாக்கிட அரும் பாடுபட்டு வருவதோடு, தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக உலகத்தின் முது மொழியாம் அமுதமெனும் தமிழ்மொழியை உயர்த்துதல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், அரிய தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்குதல், அயலகப் பல் கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவித்தல், மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல், தமிழ்க் கூடல், தமிழ்மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம், தமிழ் பரப்புரைக் கழகத்தின் வாயிலாக அயல் நாடு மற்றும் வெளி மாநில தமிழர்களுக்கு தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜனவரி திங்கள் 12 ஆம் நாள் அயலகத் தமிழர் தின விழா உள்ளிட்ட எண்ணற்ற நன்மைபயக்கும் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம்

1970ஆம் ஆண்டு முதல் ‘நீராரும் கடலுடுத்த‘ எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக நடை முறையில் உள்ளது. தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டதால் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் 35 விருதுகள்

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகை யில், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள் ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, தமிழ்ச்செம்மல் விருதுகள், இலக்கண விருது, இலக்கிய விருது, தூயத் தமிழ் பற்றாளர் விருதுகள் உள்ளிட்ட 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுத் தொகையை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த் தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டு தோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 இலட்சம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். கடந்த மூன்றாண்டு களில் 260 விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் புதியதாக உருவாக்கப்பட்டு பொதுத் துறையால் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட தகை சால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

நூல்கள் நாட்டுடைமை

தமிழறிஞர்களின் படைப்புகள் எளிய முறையில் மலிவு விலையில் மக்களுக்கு கிடைத்திடும் வகையிலும், தமிழறிஞர் களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்திட வேண் டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தமிழ் நாடு அரசின் சார்பில், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட புகழ் வாய்ந்த 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரி மையர்க்கு 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையும் வழங்கி சிறப்பிக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உயரிய சிந்தனையில் உதித்த தமிழறிஞர்களுக்கான கனவு இல்லத் திட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரும்புதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலை ஞரின் 97ஆவது பிறந்த நாளான 03.06.2021 அன்று கனவு இல்லத் திட்டத்தின்கீழ் சாகித்திய அகாதமி விருது மற்றும் முத் தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர் கட்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகளை தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப் பட்டு, தமிழுக்கும் தமிழறிஞர் களுக்கும் பெருமை சேர்த்துள்ள வரலாற் றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தினால் பயன டைந்த தமிழ்ச் சான்றோர்களும் ஆன்றோர் களும், அகமகிழ்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அயலகத்திலும் அண்டை மாநிலங்களிலும் தமிழ் இருக்கைகளை நிறுவிடவும் தமிழ்ப்பணி ஆற்றிடவும் நிதியுதவி​

அயல்நாடு வாழ் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்கப்படுத்துகின்ற வகை யில், அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவித்தல் திட்டத் தின்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களால் ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயற்படுவதற்காக 1 கோடியே 25 இலட்சம் ரூபாயும், ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 இலட்சம் ரூபாயும் (3 இலட்சம் அமெரிக்க டாலர்). நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட மேம்பாட்டிற்கு 75 இலட்சம் ரூபாயும் புதுடில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாயும் ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மொழியைக் கற்பித்திட ஏதுவாக வகுப்பறைகள் அமைத்திட ரூ.15 இலட்சம் ரூபாயும் வழங்கி, தாய்மொழியாம் தமிழ் மொழியை அயலகத்திலும், அண்டை மாநிலங்களிலும் வளர்த்திட நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதை அயலகத் தமிழர்கள் நெஞ்சார பாராட்டியும், வரவேற்றும் உள்ளனர்.

திருக்குறளின் அருமை, பெருமைகளை அறிந்திட மாணவர்களை ஊக்கப்படுத்திடும் “குறள் முற்றோதல்” திட்டம்

1.1.2000 ஆம் ஆண்டு குமரிமுனையில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வரும் “குறள் முற்றோதல்” திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 இலட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளனர்

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் வாயிலாக மாணவர்களிடம் தமிழ் உணர்வை ஊக்கப்படுத்திட தமிழ்க்கூடல் திட்டம்

“தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களி டையே தமிழ் ஆர்வத்தினை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்திட கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், பொறியியல் கல்லூரி இயக்ககம் ஆகியவற்றால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 இலட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 இலட்சமும் வழங்கும் வகையில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதே போன்று, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியின் தொன்மை – பெருமைகளை அறியவும், தமிழ் மொழி இலக்கிய இலக்கணங்களின் மீது பற்றும் ஆர்வமும் கொள்ளவும், தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் – தமிழ்ச்சான்றோர்கள் பற்றி அறிந்து – கொள்ளவும் உதவும் வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 6218 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலுள்ள தமிழ் மன்றங்கள் மூலம் – ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று ‘தமிழ்க்கூடல்‘ நடத்திட ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- என மொத்தம் ரூபாய் 5 கோடியே 59 இலட்சத்து 62 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் உணர்வினை ஊட்டி ஊக்கப்படுத்திட, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், தமிழ்மொழி இலக் கியத் திறனறித் தேர்வு, இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, தமிழால் முடியும், இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை, இலக்கிய வினாடி வினா உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டு வருகின்றன.

தீராக் காதல் திருக்குறள் திட்டம்

​‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திட 25 இலட்சம் ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ள நிதியுதவியில் குறளோவியம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு திருக் குறள் நாள்காட்டி உருவாக்கப்பட்டு முதல மைச்சர் அவர்களால் 15.1.2022 அன்று வெளியிடப்பட்டு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு களும் வழங்கப்பட்டன. இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment