50 பெண்கள் புகார்!
திருப்பூர், மே 13 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கணவனை சேர்த்து வைக்க மாந்திரீக பூஜை நடத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச காணொலிகள் எடுத்ததாக சாமியார் மீது பெண் ஒருவர் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மேலும் 50 பெண்கள் புகார் அளித்த நிலையில், அவர் தப்பியோடி தலைமறைவாகி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் காரைக் குடியை சேர்ந்த 39 வயது பெண். இவர் கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வந்த நிலையில், கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், எதுவும் கைகூடவில்லை..
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் போது அடிக்கடி யூடியூப் பார்த்த அவர், சாமியார்கள் வித்தைகள் குறித்த காட்சிப் பதிவுகளை பார்த்து நம்பத் தொடங் கினார். பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணா என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக வந்த காட்சிப் பதிவுகளைப் பார்த்துள்ளார்.
இந்த காட்சிப் பதிவுகளை உண்மை என்று நம்பிய காரைக்குடி பெண், பணிக்கம்பட்டியில் உள்ள அந்த சாமியாரை சென்று சந்தித்துள்ளார். ஆனால் அந்த சாமியார் பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் காரைக்குடி பெண் கூறுகையில், ‘பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள வராகி அம்மன் கோவிலுக்கு சென்று சாமியார் அர்ஜூனன் கிருஷ்ணனை சந்தித்தேன். அங்கு எனனக்கு நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அவரிடம் தெரிவித்தேன். அவரும் மாந்திரீகம் மூலம் கணவன்-மகனை சேர்த்து வைப்பதாக உறுதி தெரிவித்தார். இதற்கான பரிகார பூஜை செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் தருமாறு என்னிடம் கேட்டார். இதை உண்மை என்று நம்பி, நான் உடனே ரூ.10 ஆயிரத்தை சாமியாரிடம் கொடுத்தேன்.
சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும் என்றார். சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை தொடங்க முடியும் என்றார். நானும் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் எனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை சாமியாரிடம் போய் கொடுத்தேன்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் எனக்காக எந்த பரிகார பூஜைகளும் செய்யவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. எனவே பணத்தை திருப்பித் தருமாறு கேட்டேன். அவரோ தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். இதை நம்பி நான் சாமியாரின் வீட்டிற்கு சென்றேன். அப்போது சாமியார் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதை காட்சிப் பதிவாக எடுத்து மிரட்டி வருகிறார். இவ்வாறு அந்த மனுவில் காரைக்குடி பெண் கூறியிருந்தார்
இந்த நிகழ்வு குறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினர் பணிக்கம்பட்டியில் சாமியார் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையத்திற்கு சென்றனர். அங்கு கோவிலும், மாந்திரீக நிலையமும் பூட்டிக் கிடந்தது. காவல்துறையில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதை அறிந்த சாமியார் தலை மறைவாகியது தெரியவந்தது. இதற்கிடையே சாமியார் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி சுமார் 50 பெண்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment