எம்.ஆர்.மனோகர்
செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பர னாரைப் பற்றி ‘விடுதலை’ வாசகர்களுக்கு நிறையவே தெரியும். ஆனால், அவர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் இழுத்த செக்கை பார்க்க முடியவில்லையே என்ற ஏங்கினோமே? அந்த ஏக்கம் இனி இல்லை.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவை மத்தியச் சிறையில் அவர் அவதிப்பட்டுக் கிடந்தபோது அவர் இழுத்த செக்குத்தான் நீங்கள் படத்தில் காண்பது. இப்போதும் அங்கே காட்சிப் பொருளாக உள்ளது அது. அதை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்திற்கு எடுத்துச் சென்று வைக்க வேண்டுமென்று கோரி ஒரு சமூக ஆர் வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
வழக்கை சமீபத்தில் விசாரித்தது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமாரின் அமர்வு. நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர். தேர்தல் புயல் ஓய்ந்த பின்பாவது இது நடக்கும் என்றே நம்புவோம். வ.உ.சி. நினைவு மண்டபத்தில் இந்தச் செக்கு வைக்கப்பட்டு விட்டால் சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ வாய்ப்பு ஏற்படும். வங்கிச் செக்கை மட்டுமே பார்த்து வரும் இளைய தலைமுறையினரும் இந்தச் செக்கைப் பார்த்து, கால வெள்ளத்தில் கரைந்து போய்விட்ட அந்த கப்பலோட்டிய தமிழனின் போராட்டத்தைப் புரிந்து கொள்வார்கள் அல்லவா?
No comments:
Post a Comment