அரசமைப்புச் சட்டமும் பிரதமர் மோடியின் பேச்சும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

அரசமைப்புச் சட்டமும் பிரதமர் மோடியின் பேச்சும்

பீகாரின் கயாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நிர்ணய சபையில் 80.90% மக்கள் ஸநாதனிகள் என்று கூறியுள்ளார்.
“டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அதை உருவாக்கினார்; ஸனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் கவனமாகக் கேட்க வேண்டும். இந்த சிறந்த அரசியலமைப்பை உரு வாக்க அம்பேத்கருக்கு ஆதரவளித்தவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஸநாதனிகள் தான்” என்று மோடி பேசியுள்ளார்.
ஓர் உண்மையை பிரதமர் மோடி இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரைச் சுற்றிப் பெரும்பாலும் இருந்தவர்கள் ஸநாதனிகள் என்பதுதான் பிரதமர் ஒப்புக் கொண்ட முக்கியமான உண்மை.

சட்டத்தை உருவாக்கும் வரை அமைதி காத்த அந்த ஸநாதனிகள் காரியம் ஆகும்வரை காத்திருந்தனர். காரியம் ஆனவுடன் கறி வேப்பிலை மாதிரி தூக்கி எறிந்தனர்.
“பிராமணர்கள் தங்களுடைய உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தங்களை ஆயுதபாணிகளாக்கிக் கொள்வதற்கு சட்டத்தைத் திருத்திய போது இது விஷயத்தில் சூத்திரர்கள் மீதும், தீண்டப்படாதவர்கள்மீதும் இருந்த தடையை அதன் கடுமையைச் சற்றும்கூடக் குறைக்காமல் அப்படியே நீடிக்க விட்டு விட்டனர்” என்கிறார் சட்ட மேதை அம்பேத்கர்.
ஒரு நாட்டின் சட்டத்தை இயற்றுவதில் என்னென்ன விடயங்கள் முதன்மையானதாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதைப்பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.

“வர்க்க ஏற்றத் தாழ்வுகளுடன் பாலின ஏற்றத் தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அப்படியே விட்டு விட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்த சட்டங்களை மட்டும் இயற்றிக் கொண்டு போவது, நமது அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குவதாகும். இது சாணிக் குவியலின்மீது அரண்மனையைக் கட்டுவதற்கு ஒப்பானது. இந்து சட்டத்திருத்த தொகுப்புக்கு நான் வழங்கும் முக்கியத்துவம் இதுதான்” என்றார் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர்.
பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, விவாகரத்து உரிமை, உள்பட கீழ்க்கண்ட மாற்றங்களை இந்து சட்டத் திருத்த மசோதாவில் சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் இடம் பெறச் செய்தார்.

(1) முதல் முறையாக சொத்தில் மகனுக்கு இணையான பங்கு விதவைக்கும் மற்றும் மகளுக்கும் உண்டு.
(2) முதல் முறையாக பெண்கள் கொடூரமாக நடந்து கொள்ளும் கணவனை விவாகரத்து செய்ய அனுமதிப்பு – முதல் முறையாக கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் தடை விதிப்பு.
(3) முதன் முறையாக வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் இந்து சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.
(4) முதல் முறையாக ஒரு இந்து தம்பதியினர் வேறு ஜாதியிலிருந்து குழந்தையைத் தத்தெடுக்கலாம் – என்பவை முக்கியமானவை.

இவை உண்மையிலேயே புரட்சிகரமான மாற்றங்கள், இது மரபுவழி சிந்தனை கொண்ட மக்களிடையே எதிர்ப்புப் புயலை எழுப்பியது. பேராசிரியர் டெரெட் குறிப்பிட்டதுபோல் எதிர்ப்புக்கு எதிராக திரட்டப் படக் கூடிய ஒவ்வொரு வாதமும் ஒன்றுக்கொன்று ரத்து செய்யப்பட்ட பலவற்றையும் உள்ளடக்கியது. எனவே அனைத்து ஒடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர்களுக்கும் விவாகரத்து வழங்குவது தாக்குதலின் முக்கிய இலக்காக மாறியது. மேலும் ‘இந்து மதம் ஆபத்தில் உள்ளது, என்ற கூக்குரல் பலரால் எழுப்பப்பட்டது. அவர்களின் எதிர்ப்புக்கு உண்மையான காரணம் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் – விவசாய வர்க்கங்களைவிட சில வணிக ஜாதியினரிடையே கடுமையான கோபத்தை இது உண்டாக்கியது.

எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகளின் முன்னணிப் படையாக ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) இருந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1949-இல் – ஒரு ஆண்டில் மட்டும் டில்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அங்கு நேரு மற்றும் அம்பேத்கரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்து சட்ட மசோதா என்பது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்று கண்டனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பதவியா, கொள்கையா என்ற கேள்வி சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன் எழுந்தபோது – கொள்கையே முக்கியம் என்று அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்.

பிரதமர் நேரு அவர்களுக்கு இசைவான எண்ணம் இருந்தாலும், ராஜேந்திர பிரசாத் போன்ற ஸநாதனிகளின் எதிர்ப்பைக் கடந்து அம்பேத்கர் பக்கம் பிரதமரால் உறுதியாக நிற்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
எந்த அம்பேத்கர் இந்திய சட்டத்தை இயற்றும் குழுவுக்குத் தலைமை வகித்தாரோ, அதே அம்பேத்கர் 1953 செப்டம்பரில் ஆந்திர மாநில மசோதா பற்றி மாநிலங்களவையில் விவாதம் எழுந்தபோது சொன்னது – காலத்தை வென்று நிற்பதாகும்.
“சிலர் நான்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொன்னார்கள்.
நான்தான் அதை நெருப்பிலிட்டுக் கொளுத்துவதற்கும் முதன்மை யானவனாய் இருப்பேன், நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன்” என்றார்.

பார்ப்பனர்களுக்கு ஒரு இராமாயணம் தேவைப்பட்டது – வால்மீகியை அழைத்தார்கள்; மகாபாரதம் தேவைப்பட்டது. ஒரு வியாசரை அழைத்தார்கள். அரசியலமைப்புச் சட்டம் தேவைப்பட்டது என்னை அழைத்தார்கள்” என்றார் சட்டமேதை அம்பேத்கர்.
“இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு துணை நின்ற 80 முதல் 90 விழுக்காட்டினர் ஸநாதனவாதிகளே” என்று பிரதமர் நரேந்திரமோடி கயாவில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினாரே – அதன் இலட்சணம் இதுதான்!

No comments:

Post a Comment