தாழ்த்தப்பட்ட மாணவருக்கு ஜாதி கட்டுப்பாடு என்கின்ற பெயரில் முடி வெட்ட மறுத்த தந்தை, மகன் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

தாழ்த்தப்பட்ட மாணவருக்கு ஜாதி கட்டுப்பாடு என்கின்ற பெயரில் முடி வெட்ட மறுத்த தந்தை, மகன் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது!

காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது!

தருமபுரி மே 12 தருமபுரி மாவட்டம் அரூ ரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கீரிப்பட்டி என்னும் கிராமம் உள்ளது. அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெளாப்பாறை என் னும் ஊரில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற இளங்கோ என்பவரது மகன் சஞ்சய் (வயது 17) என்பவர் கீரிப்பட்டியில் உள்ள யோகேஷ் பியூட்டி சலூனுக்கு முடிவெட்ட சென்றுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர் என்பதால்….
அப்போது கடையில் இருந்த யோகேஷ், ‘‘தம்பி எந்த ஊர்” என சஞ்சயிடம் கேட்க, ‘‘கெளாப்பாறை” என்று பதில் சொன்னதும், ‘‘கெளாப்பாறையில் எந்த ஏரியா” என்று கேட்டபோது, ‘‘கெளாப் பாறை அம்பேத்கர் காலனி” என்று பதில் பதில் சொன்னதும், ‘‘சரி உட் காராதே எழுந்து போ, காலனிகாரருக்கு முடி வெட்டுவதில்லை” என்று யோகேஷ் சொன்னார்.
உடனே, அருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கெளாப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், பிரவீன், அன்புநேசன், சிவமணி ஆகியோரிடம் சென்று, முடி வெட்ட மறுத்த தகவலை சொல்லி உள்ளார் சஞ்சய்.
கடையில் இருந்த யோகேஷிடம், கணித் என்னும் இளைஞர், ‘‘ஏன் சஞ்சய்க்கு முடி வெட்ட முடியாது என்று சொல்லி உள்ளீர்கள்” எனக் கேட்டுள்ளார். அதற்கு யோகேஷ், ‘‘எஸ்.சி. காலனிகார ருக்கு முடி வெட்டுவதில்லை” என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடைக்கு வந்த யோகேஷின் தந்தை சென் னையன் என்கின்ற கருப்பு, ‘‘என்ன தம்பி எல்லாம் கூட்டமாக வந்து இருக்கிறீர்கள்” என கேட்க,சஞ்சய், கணித் உள்ளிட்ட இளைஞர்கள், ‘‘உங்கள் மகன் யோகேஷ் முடி வெட்ட முடியாது என்று சொல்லி இருக்கிறார்; எதனால் முடி வெட்ட முடியாது” என்று கேட்டுள்ளனர். உடனே சென்னையன் என்கின்ற கருப்பு என்பவர், ‘‘ஆமாம்; முடி வெட்டுவதில்லை, காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை, ஊரில் சமூக கட்டுப்பாடு உள்ளது. அதனால் முடி வெட்டுவதில்லை” என்றார்.

ஊர் கட்டுப்பாடாம்!
அதே ஊரில் உள்ள வேறு ஒரு கடையின் பெயரைச் சொல்லி, ‘‘அந்தக் கடையில் போய் முடி வெட்டி வா! நான் முடிவெட்டுகிறேன்” என்று பதில் உரைக்க, மாணவர்கள், ‘‘நாங்கள் எஸ். சி. பறையர்கள் என்பதினால் முடி வெட்டுவது இல்லை என்று சொல்கிறீர்களா?” என்று கேள்வி கேட்க, அதற்கு கருப்பு என்கின்ற சென் னையன் ‘‘ஆமாம்; அதனால்தான் முடி வெட்டுவதில்லை என்று கூறுகிறேன். எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய்து கொள்ளுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பேசி உள்ளார். (இவ் வுரையாடல் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது).
இது தொடர்பாக விசாரித்த போது, யோகேஷும் அவரது தந்தை கருப்பு என்கின்ற சென்னையனும் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு முடிவெட்டக்கூடாது என்று சொன்னது உண்மைதான்; என்றாலும் கூட அந்த ஊரில் இருக்கும் ஜாதி என்னும் பெயரில் ஆதிக்கம் செய்யக்கூடிய நாட் டாமைகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்டவோ, முகச் சவரம் செய்யவோ கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். அதனால் தான் அவர்கள் சமூக கட்டுப்பாட்டை மீறி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடிவெட்டவில்லை என தெரிய வருகிறது.

இளைஞர்கள் கேட்ட கேள்வி?
கலைஞர் படத்தையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் படத்தையும் வைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தி.மு.க.கொடியை போட்டுக் கொண்டு, தோளில் திமுக துண்டு போட்டு இருக்கும் சமூகநீதி பேசும் நீங்கள்,திமுகவின் பெயரைச் சொல்லி அரசியல் பேசும் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்ட மறுக்கலாமா? அதைத்தான் தந்த பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், கலைஞரும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார்களா என இளைஞர்கள் கேள்வி கேட்க, பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து ‘‘போங்கடா! போங்கடா! போய் எங்கேயோ பார்த்துக்கோங்கடா” என்ற பதிலை சொல்லிவிட்டு புறப்பட்டார் கருப்பு (வீடியோ பதிவு)
இந்த செய்தியை இளைஞர்கள் துண்டறிக்கையாக அச்சிட்டும், வீடியோ காட்சிகளை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டதால் அரசு, மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து யோகேஷ் மற்றும் அவரது தந்தை சென்னையன் என்கின்ற கருப்பை வன்கொடுமை சட்டம் sc/st pao act 2015 கீழ் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் இருந்த சஞ்சய் மற்றும் கணித் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
சஞ்சய்க்கு ஏன் அண்ணா முடிவெட்டவில்லை என்று கருப்பிடம் நாங்கள் மரியாதையுடன் கேட்டபோது, அவர் ‘‘காலனிகாரருக்கு முடி வெட்டுவதில்லை, நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் புகார் செய்யுங்கள்; யாரிடமும் சொல்லுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறார்.

நாங்கள் காலங்காலமாக அடிமைப்பட்டு கிடப்பதா? எங்கள் பெற்றோர்களுக்கு கல்வி அறிவு கிடையாது. அடிமையாக நடத்தப்பட்டு இருக்கலாம். அதுபோல் நாங்கள் இருக்க முடியாது. தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் படித்திருக்கிறோம். எங்களுக்கு சுயமரியாதை உள்ளது. இப்படி அடிமையாக அடங்கி ஒடுங்கி இருக்க முடியாது என்றனர்.

தனிக்குவளை

இது மட்டுமல்லாமல் கீரிப்பட்டியில் வேறு ஒரு கடையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்ட மறுக்கிறார்கள். எங்கள் ஊர் கெளாப்பாறையில் சின்ன பாப்பா என்பவர் தேநீர்க் கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனிக்குவளை வைத்துள்ளார். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஜாதியையும், ஜாதிய கட்டுப்பாடையும் நம்பி சிறைக்குச் சென்ற யோகேஷ் அவரது தந்தை என்கின்ற கருப்பிடம் மாணவர்கள் கேட்ட ஒரே கேள்வி! ‘‘வெட்டி போட்ட மயிரில் எது தாழ்த்தப்பட்டவன் மயிர்? எது உயர்த்தப்பட்டவன் மயிர் என்று உங்களால் அடையாள காட்ட முடியுமா?” என்ற கேள்விதான். இன்னும் இது போன்ற ஜாதிய கட்டுப்பாடுகளையும், ஜாதிய சிந்தனையும் உள்ளவர்களையும் சமூக சிந்தனையாளர்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.

தலைமைக் கழகம் நடவடிக்கை
சம்பந்தப்பட்ட ஊரில் ஒரு முடி திருத்தும் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட தோழர் அவமதிக்கப்பட்டார் என்ற செய்தி தெரிந்தவுடனே, தலைமைக் கழகத்திலிருந்து மாநில கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் இராசேந்திரன், ‘விடுதலை’ செய்தியாளர் அ.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘விடுதலை’ செய்தியாளர் தமிழ்ச்செல்வன், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று, பல கட்சித் தோழர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்தார்.
காவல்துறையினர் இந்தப் பிரச்சினையில் உடனே தலையிட்டு, உரிய நடடவிக்கை எடுக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

No comments:

Post a Comment