தேர்தல் முடிவுக்கு பின் மூன்றே நாட்களில் பிரதமர் அறிவிக்கப்படுவார்: காங்கிரஸ் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

தேர்தல் முடிவுக்கு பின் மூன்றே நாட்களில் பிரதமர் அறிவிக்கப்படுவார்: காங்கிரஸ் விளக்கம்

சண்டிகார், மே 25- அய்ந்தாண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருவர் வீதம் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் பதவி வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். சண்டிகாரில் நேற்று (24.5.2024) செய் தியாளர்களிடம் கூறியதாவது:-

‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமராக இருப்பார்? என்று கேட்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் அவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை நினைவு படுத்துகிறேன். அப்போது, பாரதீய ஜனதா ஆட்சியை விட்டு விரட்டப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாள்களுக்குள் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு மீண்டும் திரும்பும், இந்ததடவை 3 நாள்கள் கூட ஆகாது. அதற் குள் பிரதமர் யார் என்று அறிவிக்கப்படும். ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் பிரதமரை தேர்வு செய்வார்கள்.

5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்கள் எல்லாம் கிடையாது. ஒரே நபர், 5 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்துவார்.
நமது ஜனநாயகம், கட்சிகளை மய்யமாகக் கொண்டது’ நபர்களை மய்யமாகக் கொண்டது அல்ல. எனவே, யார் பிரதமர் என்ற கேள்வியே அர்த்தமற்றது. எந்த கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றுதான் கேட்க வேண்டும்.

தெளிவான பெரும்பான்மை
முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்த வுடன், ‘இந்தியா’ கூட்டணி தெளிவான பெரும் பான்மை பெறும் என்பது உறுதியாகி விட்டது.தென் இந்தியாவில் பா.ஜனதா துடைத்து எறியப்பட்டு விட்டது. இதர பகுதிகளில் அதன் பலம் பாதியாக குறைந்துவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கூட்டணியின் செயல்பாடு மிகவும் வலிமையாக இருக்கிறது.

உண்மையான பிரச்சினைகள் குறித்து….
அதனால்தான், முதல்கட்ட தேர்தல் முடிந்த வுடன் பிரதமர் மோடியின் பிரசாரம் திசைமாறி விட்டது. இந்து-முஸ்லிம் என வகுப்புவாத பிரச்சினையை அவர் பேசி வருகிறார். வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை என உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர் பேசுவது இல்லை.
மேலும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சிந்தனை இருப்பதாகவும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங் கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment