சில ஆண்டுகளுக்கு முன் மீசோ ரோபோடிக்ஸ், தன் ‘பிளிப்பி’ என்ற சமைக்கும் ரோபோவை அறிமுகப்படுத்தி அசத்தியது. சுறுசுறுப்பாக பர்கர்களை செய்து பரிமாறும் தட்டில் வைப்பதில் கில்லாடி இந்த பிளிப்பி.
தற்போது மீசோ ரோபோடிக்ஸ், பிளிப்பி 2 என்ற புதிய மாடல் சமையல் ரோபோவை வெளியிட்டுள்ளது.முதலாம் பிளிப்பி ரோபோக்கள், ‘வொய்ட் கேஸ்ல்’ என்ற பிரபல உணவுத் தொடரில் வெள்ளோட்டம் பார்த்தனர்.
அதில் கிடைத்த ஆலோசனைகளைப் பின்பற்றி, உருவானது தான் பிளிப்பி 2 மாடல், முந்தையதைவிட இரு மடங்கு வேகமாக பர்கர்களை தயாரித்துத் தரும். அத்தோடு, வறுவல் அடுப்பை தானாகவே கையாளும் சமையல் கலையையும் அது கற்று வந்திருக்கிறது.
பிளிப்பி 2 ரோபோவால் உணவுப் பாத்திரங்களில் உருளைக் கிழங்கு, எண்ணெய் போன்றவற்றை நிரப்பி எடுத்து வந்து வைப்பது, சில பண்டங்களை எண்ணெயில் வறுத்தெடுத்து வைப்பது, பன் மீது காய்கறி, சாஸ்களை வைத்து பர்கர் செய்வது என்று பல சமையல் வேலைகளை வேகமாக செய்ய முடியும்.தவிர, குப்பையை எடுத்துக் கொண்டு போய் மூலையில் கொட்டுவது போன்ற பராமரிப்பு வேலைகளையும் பிளிப்பி செய்கிறது. இத்தனைக்கும் பிளிப்பி ஓர் ஒற்றைக் கை ரோபோதான். அதற்கு கால்கள் கிடையாது, மேற்கூரையில் பொருத்தப் பட்டு இயங்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளிப்பி இன்னும் சமையல் கலையில் நிறைய கற்க வேண்டியுள்ளதாக, மீசோ ரோபோடிக்சின் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெருந்தொற்றால் தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பல லட்சம் மக்கள் வேலையை விட்டு விலகி வருகின்றனர்.
இந்த நிலையில் உணவு விடுதி தொழிலிலும் மக்கள் அதிக அளவில் வேலையை விட்டு விலகுகின்றனர் அல்லது விலக்கப்படுகின்றனர். இந்த இடைவெளியை பிளிப்பி 2 போன்ற ரோபோக்கள் இட்டு நிரப்பும் என நம்பப்படுகின்றதாம்.
No comments:
Post a Comment