தேர்தல் ஆணையம் - பிரதமரின் விருப்பத்திற்கேற்ப நடப்பதால் தான் ஏழு கட்ட தேர்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

தேர்தல் ஆணையம் - பிரதமரின் விருப்பத்திற்கேற்ப நடப்பதால் தான் ஏழு கட்ட தேர்தல்!

featured image

பி.ஜே.பி.யின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில்
எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது பி.ஜே.பி. என்பது நினைவிருக்கட்டும்
இந்தியா கூட்டணியினர் அடுத்த 15 நாள்கள் மிகக் கவனமாக
இருக்க வேண்டும் என்பது முக்கியம்! அதிமுக்கியம்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யின் தோல்வி உறுதியான நிலையில் உச்சக் கட்டத்தில் பி.ஜே.பி. அச்சத்தில் அல்லாடுகிறது. இந்த நிலையில் அவர்கள் எந்தக் கட்டத்திற்கும் செல்லக் கூடியவர்கள் ஆதலால், இந்தியா கூட்டணியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாட்டின் 18ஆவது பொதுத் தேர்தலின் நான்கு கட்டங்கள் முடிவடைந்து, இன்னும் மூன்று கட்டங்கள் பாக்கியாக உள்ள நிலையில், ஜூன் முதல் தேதி அன்று இறுதி ஏழாம் கட்டத் தேர்தல் முடிவடைந்து – ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப் படவிருக்கின்றன.

எல்லாம் நீர்மேல் எழுத்துகள் – வெற்று ஆரவார ஒப்பனை உறுதிமொழிகள்
தொடக்கத்தில் 400 இடங்கள் பெறுவோம் என்று பிரதமர் மோடியும், அவரது கட்சியினரும், அணியினரும் அடித்துக் கூறி, தங்களது அடுக்கடுக்கான தேர்தல் பிரச்சார பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி அப்பட்டமாக வெறுப்பு அரசியலை முதலாக்கியும் கூட, வாக்காளர் பெரு மக்கள் இந்த 4 கட்டங்களில் அப்பிரச்சாரத்தை நம்பி, முந்தைய தேர்தல்களில் (2014, 2019) ஏமாந்ததுபோல ஏமாறத் தயாரில்லை என்பதையும், ‘மோடிக் கீ கியாரண்டிகள்’ எல்லாம் நீர்மேல் எழுத்துக்கள்: வெற்று ஆரவார ஒப்பனை உறுதிமொழிகள் என்பதை நாட்டின் சகல தரப்பு வாக்காளர்களும் புரிந்து, விழித்துக் கொண்டு வாக்களித்துள்ளார்கள்.
இது பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்., மோடி ஆட்சியின் ‘வயிற்றில் புளியை’க் கரைத்துள்ளது!
வித்தைகள் விலைபோக மறுக்கின்றன!
‘சிலரை சில காலம் ஏமாற்றலாம்.
பலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால்
எல்லோரையும் எல்லா காலத்திலும்
ஏமாற்றவே முடியாது’ என்ற முதுமொழி மெய்யாகி வருகிறது!

அப்பட்டமாய் அம்பலத்துக்கு வந்த உண்மைகள்
ஏழு கட்ட தேர்தல் என்பதே தேர்தல் ஆணை யத்தை வயப்படுத்தி, ஆளும் கட்சி – செய்த ஒரு சார்பு நிலையாகும்!
பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மூவர் என்ற நிலையில், வெளிப்படையாகவே அவரது சட்டமீறல் பேச்சுக்கு அவர்கள் துணை போகின்றனரே தவிர, பாரபட்சமில்லா நியாயம் வழங்க அவர்கள் தயாரில்லை என்பது பல நடவடிக்கைகள் மூலம் அப்பட்டமாய் அம்பலத்துக்கு வந்து விட்டது!
இதை நாட்டின் பொது நிலையில் உள்ள ஜனநாயக, அரசமைப்புச் சட்ட காப்பாளர்கள், கருத்தியலாளர்கள், பரகால பிரபாகர் போன்றவர்கள் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகின்றனர்.
பல ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் போன்றவர்களும் கூறி வருகின்றனர்.

கவனச் சிதறல் கூடாது
நாளும் தேர்தல் தோல்வி பயம். அகண்டமாகி வரும் ஆளும் கட்சி அச்சத்தின் உச்சம் அவர்களை இனி எந்த நிலைக்கும் இழுத்துச் செல்லும் என்பது உறுதியாவதால், இனி இந்தியா கூட்டணித் தலைவர்களும், அரசமைப்புச் சட்ட ஜனநாயகப் பாதுகாவலர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனச் சிதறல் சிறிதுமின்றி நடந்து கொள்ள வேண்டியது அவசர அவசியம்.

ஆழ்ந்து படிக்க வேண்டிய
பரகால பிரபாகர் பேட்டி
‘தி வயர்’ (The Wire) என்ற இணைய இதழுக்கு பரகால பிரபாகர் அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கத்தை நாம் வெளியிட்டுள்ளோம். (கீழே காண்க!)
அதனை ஆழ்ந்து படித்து, போதிய பாதுகாப்புடன் இனிவரும் 15 நாள்களில் மிக மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியது இந்தியா கூட்டணித் தலைவர்கள், தொண்டர்களது முக்கியக் கடமையாகும். மீண்டும் எதேச்சதிகாரம் மகுடம் சூட்டிக் கொள்ளக் கூடாது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இந்திய ஜனநாயகத்தை, காவிக் கலாச்சார எதேச்சதிகார நோய்க் கிருமிகளை விரட்டி, காப்பாற்ற வேண்டியது மிகவும் முக்கியம்!
ஆளுங் கட்சி தோல்வி – அவர்களுக்கே புரிந்து விட்டது! அவர்களது தடுமாற்ற, தடம் புரண்ட மோடிகளின் பிரச்சாரங்களே தக்க சான்று!
“நெருப்பில் நிற்பவரின் நிலைபோல” உள்ளதால் எதைச் செய்தாவது கடைசி நேர யுத்தி மூலம் கடும் முயற்சி செய்வார்கள். கவனத்துடன், அதே நிலையில் நிதானத்தின்பால் அலட்சியமின்றி “வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழி உடைபடாமல் பார்த்துக் கொண்டு”, வெற்றியை அறுவடையை செய்ய மிகுந்த பொறுப்புணர்வோடு தலைவர்கள் பாடுபட வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

15.5.2024

No comments:

Post a Comment