திருவள்ளுவர் என்றால் பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டுவது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

திருவள்ளுவர் என்றால் பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டுவது ஏன்?

திருவள்ளுவர் என்றாலே பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டுவது போல இருக்கும். காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறவில்லையா? ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் தீக்குறளைச் சென்றோதோம்!’ என்ற வரிகளுக்கு தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று விளக்கம் சொல்லவில்லையா?

குறளை என்றால் ‘பொறாமை’, ‘கோள் சொல்லுதல்’ என்ற பொருள்கூடத் தெரியாத பேர்வழி ஜெகத்குருவாம்.
கொலை வழக்கில் சிறைக்குப் போன காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி திருக்குறள் கீதையின் சாரம், மனுதர்மத்தின் தழுவல் என்று சொன்னவர்தானே.

“நல்ல குணம் வளர அறத்துப்பாலில் வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறாரோ, அதைச் சொல்லிக் கொடுத்தால் போதும், வேதத்தின் சாரம் அதிலுள்ளது. திருக்குறளில் பொருட்பால், காமத்துப்பால் முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப்பாலை இந்தக் காலத்துச் சினிமாக்களே சொல்லிக் கொடுத்து விடுகின்றன” என்றாரே லோகக் குரு(?) ஜெயேந்திர சரஸ்வதி (‘தினமணி’ 16.3.1982).

ஜெயேந்திர சரஸ்வதியின் இந்தக் கூற்றைக் கண்டித்து 12.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றினார்களே!
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளையும் பிறப்பிலேயே ஜாதிப் பேதம் கற்பிக்கும் மனுதர்மத்தையும் ஒப்பிட்டுத்தானே உரை எழுதினார்.

“திருக்குறளில் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆகும்.” அஃது ஒழுக்கம், வழக்கம், தண்டம் என மூவகைப்படும் என்று அப்பட்டமாக பார்ப்பனத் தன்மையுடன் முடக்குவாதம், திரிபுவாதம் செய்தவர்தானே பரிமேலழகர் – மறுக்க முடியுமா?

அந்தக் காலத்து பரிலேழகர் முதல் இக்காலத்து நாகசாமி, சோ. ராமசாமி வரை திருக்குறளை மட்டம் தட்டிப் பேசுவது வாடிக்கையே!

‘துக்ளக்’கின் (19.8.2009) கேள்வி பதில் பகுதியில் வந்ததைப் படித்தால் புரியுமே – திருவள்ளுவர் என்றாலே பார்ப்பனர்கள் நரநர என்று பற்களைக் கடிப்பார்களே!

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் – தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான் – யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே!” – இதுதான் ‘துக்ளக்’கின் பதில்.

திருக்குறளுக்கு உலகம் தழுவிய அளவில் மதிப்பும், பரவலும் இருக்கும் காரணத்தால் தந்திரத்திலும் அவர்களுக்கே உரித்தான நயவஞ்சக பணியிலும் ஈடுபட்டு விடுவார்கள்.

ஆளுநர் ஆர்.என். ரவி வள்ளுவரை காவி உடையில் சித்தரிப்பது அந்த வகையைச் சார்ந்ததுதான்.
வைதிக ஆரியத்தை எதிர்த்துப் பெரும் புரட்சி செய்த புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்கிய கும்பல் ஆயிற்றே!
நேற்றைய (24.5.2024) தினமலரில்கூட ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.

“அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே.” உலகு என்றார். இக் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன் என்பதும், அகர முதலன் என்பதும் சிவனையே குறிக்கும்” என்று தினமலர் கட்டுரை கூறுகிறது என்றால், இது பார்ப்பனர்களின் அணைத்து அழிக்கும் ஆரிய சூழ்ச்சியே.

ஆளுநர் ரவியும் அந்த வழியில்தான் திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுகிறார்.

திருக்குறள்பற்றி பார்ப்பனர்களின் மதிப்பும் – தொண்டும் எத்தகையது என்பதற்கு ”செந்தமிழ்ச் செல்வி” இதழில் (மார்ச் 2000) வெளிவந்த “குறளும் அயோத்திதாசரும்” என்ற தலையங்கமே தக்க சான்று கூறும். அது வருமாறு: 1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரை அவர்கள் தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.

“எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு அவர்கள். அவர் தீண் டத்தகாதவர். அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர்! காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.”

‘ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள்’ என்று கந்தசா மியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க. “எங்களுக்கும் அவர்களுக்கும் விரோதம்.”

எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந் தால் “உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும்” ‘என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” என்று கூறினாராம். உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத் திலும் மொழி பெயர்த்தார். 1819-இல் எல்லீஸ் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.” இவ்வாறு “செந்தமிழ்ச் செல்வி” கூறுகிறது.

எல்லிசிடம் திருக்குறளைக் கொடுத்த கந்தசாமி, தீண்டத்தகாதவர் என்றும், அவர் கொடுத்த திருக்குறளும் தீண்டத்தகாதது என்றும் எல்லீசுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பார்ப்பனர்கள் கூறினர் என்றால், மனு காலத்திலிருந்து ஆளுநர் இரவி காலம் வரை பார்ப்பனர்களின் புத்தி தமிழர்களுக்கு திராவிடர்களுக்கு அடிப்படையிலேயே பகையாளிகள் – எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment