மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட  திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட  திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா?

featured image
அரசமைப்புச் சட்டத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை எதிர்த்து
விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
திருவள்ளுவர் திருநாள் என்று கூறி, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் படத்துக்குக் காவி வண்ணம் பூசிய ஆளுநர் ரவியைக் கண் டித்து விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம் நடைபெறும்  என்று திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், “திருவள்ளு வர் திருநாள் விழா” இன்று (24.5.2024) வெள்ளிக்கிழமை நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அழைப்பிதழ் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அழைப் பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப் பட்டுள்ளது. இது சமூக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டு ஆளுநர் தொடர்ந்து கருத்து மோதல் ஏற்படும் விதமாக திட்டமிட்டே செயல்பட்டு வருகிறார்.
‘திராவிட மாடலை’ காலாவதியான கொள்கை என்று சொன்னவர் ஆளுநர் ஆர்.என்.ரவி
குறிப்பாக ‘‘திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” என்ற விமர்சனத்தில் தொடங்கி தி.மு.க.வை சீண்டும் வகையில் ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்.
பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக் காமல் இழுத்தடிப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து உள்ளது.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என். ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் நிழற்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் கடும்  விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம் பின. இந்த நிலையில், தற்போது மீண்டும் அத்தகைய சர்ச்சை எழுந்துள்ளது.ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு வெடிக்கும் என்று தெரிந்திருந்தும், வேண்டுமென்றே ‘நம்மை யார், என்ன செய்ய முடியும்?’ என்ற ஆணவத்தில் இத்தகைய செயல்களில் திட்டமிட்டு செயல்படுகிறார் – தமிழர்களை சீண்டுகிறார்.
அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்திற்கு ஆளுநர் காவி சாயம் பூசலாமா?
தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் படங்களில் திருவள் ளுவர் வெள்ளை நிற ஆடை அணிந்தவாறு இடம் பெற்று இருக்கும்.  ஓர் அரசின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுக்கு மாறாக செயல்படுவது ஆளுநர் பதவிக்கு உகந்ததுதானா? தமிழ்நாட்டு மக்களுடனும், அரசுடனும் மோதிப் பார்க்க விரும்புவது விபரீதமானது!
திருக்குறளில் கடவுள், மதம் என்ற 
சொற்கள் உண்டா?
திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ, மதம் என்ற சொல்லோ கிடையாது.
‘‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
‘‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்று  சிந்தனைக்கும், அறிவுக்கும் முதலிடம் கொடுத்தவர் திருவள்ளுவர்.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன சொன்னார்?
திருக்குறளில் உள்ள பக்தி என்ற ஆன்மாவை ஜி.யு.போப், தன் ஆங்கில மொழி பெயர்ப்பில் சிதைத்து விட்டதாகவும் கூறியதுண்டே!
ஒன்றிய பி.ஜே.பி. அரசு, ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக தட்டிப் பார்த்து மாநிலங்களில் ஆளுநர்களாக நியமித்து வருகிறது.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக 
செயல்படும் ஆளுநர்!
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், பி.ஜே.பி. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொல்லைகள் கொடுக்கும் வகையிலும் நடந்து, சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலவரையறையின்றிக் கிடப்பில் போடுவதும் நேர்மை – ஒழுங்குமுறைகளுக்கு உகந்ததுதானா?
ஆளுநரின் அடாத செயல்களை எதிர்த்து விரைவில் கண்டனப் போராட்டம்!
மாநில அரசை மட்டுமல்ல – தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும், தொடர்ந்து திட்டமிட்ட வகையில் செயல்படும் இந்த ஆளுநரை எதிர்த்துக் கண்டனங்கள் வெடிப்பது தவிர்க்க முடியவே முடியாது.
அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து மாபெரும் கண்டனப் போராட் டத்தை நடத்திட கழகம் முயற்சிகளை மேற்கொள்ளும். ‘‘கொட்டினால்தான் தேள்  – இல்லையென்றால் பிள்ளைப் பூச்சியாகக் கருதும்” அலட்சியப் போக்கினை இனியும் பொறுத்தலாகாது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
24-5-2024

No comments:

Post a Comment