சமூக சீர்திருத்தவாதிகள் படுகொலை குற்றவாளிகளுக்குத் தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

சமூக சீர்திருத்தவாதிகள் படுகொலை குற்றவாளிகளுக்குத் தண்டனை

சமூக சீர்திருத்தவாதிகளான நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோர் பிற்போக்கு மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஸநாதன சாஸ்தா என்ற அமைப்பினர்தான் இதன் பின்னணியில் இருந்தனர் என்று கண்டறியப்பட்டது.
2013ஆம் ஆண்டில் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகளுக்குப்பிறகு இப்பொழுதுதான் கொலைகாரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற சீர்திருத்தவாதிகளைக் கொன்ற மதவாத பேர் வழிகளுக்கும் உரிய தண்டனை கால தாமதமின்றி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

“எனது தேசத்தில் எனது மக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நான் காவல் துறையின் பாதுகாப்பை வேண்டினால், என்னிடம்தான் ஏதோ தவறிருப்பதாகப் பொருள். ஏனென்றால், நான் சட்டவிதிமுறைகளின்படி அவர்களுக்காகத்தான் போராடுகிறேன். அவர்களுக்கு எதிராக அல்ல” – நரேந்திர தாபோல்கர் 2010 ஆம் ஆண்டு மும்பை பத்திரிகையாளர் குழுமத்துடனான உரையாடலின் போது இவ்வாறு கூறினார்.
2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நரேந்திர தபோல்கர் பூனேவில் உடற்பயிற்சிக்காக நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவர் செய்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று, மகாராட்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் கழகத்தைத் தொடங்கினார்.

மற்றொன்று, அதன்வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு தொடர்பான மசோதா ஒன்றை மகாராட்டிர சட்டப்பேரவையில் கொண்டுவர முனைந்தார். `அந்த மசோதா இந்துமதப் பாரம்பரியத்துக்கு எதிரானது’ என்று ஆளும் பி.ஜே.பி-யும், சிவசேனாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மசோதா கிடப்பில் போடப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் தபோல்கர் படுகொலையும் செய்யப்பட்டார்.

இதையடுத்து தபோல்கரைச் சுட்ட துப்பாக்கிக் குண்டுகளை வைத்து, மகாராட்டிர காவல்துறையினர் கடந்த 2014-இல் நகோரி மற்றும் கண்டேல்வால் ஆகிய இரண்டு ஆயுதக் கடத்தல் நபர்களைக் கைது செய்தார்கள். அதன்பிறகு, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சி.பி.அய். விசாரித்த இந்த வழக்கில், ஸநாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திர சிங் தாவ்டே கைது செய்யப்பட்டார். தாவ்டே-வுடன் வினய் பவார் மற்றும் சாரங் அகோல்கர் ஆகிய இருவரையும் முதன்மைக் குற்றவாளிகளாகச் சி.பி.அய். அறிவித்தது.

அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும்தான் தபோல்கரைச் சுட்டதாகவும் சொன்னது. மேலும், `அவர்கள் இருவரையும் பற்றித் துப்பு கொடுப்பவர்களுக்கு அய்ந்து லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது. சி.பி.அய். குற்றப்பத்திரிகையில்கூட அவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தாவ்டே குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தார். அவருக்கும் சி.பி.அய். முதன்மைக் குற்றவாளியாகக் குறிப்பிட்ட அகோல்கருக்கும் தொடர்பு இருந்தது என்று சஞ்சய் சத்வில்கர் என்கிற ஹிந்துத்துவ செயற்பாட்டாளர் ஒருவரும் சாட்சியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தபோல்கரைச் சுட்டது சச்சின் பிரகாஷ் ராவ் அந்தூரேதான் என ஒரு நபரை, அவுரங்காபாத்தில் சி.பி.அய். காவல்துறை கைது செய்தது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக கருநாடகா காவல்துறை கொடுத்த தகவலின் பேரில் வைபவ் ராவத், சரத் கலஸ்கர், சுதன்வா கொந்தலேகர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் 20 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையின்போதும் சச்சின் பிரகாஷ் ராவ் அந்தூரே பெயரே வெளிவந்துள்ளது.
“தபோல்கர் கொலையாளிகளின் பெயர், எதற்குக் கவுரி லங்கேஷ் கொலைக் குற்ற விசாரணையில் வரவேண்டும்?
‘பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையையும், பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலையையும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களே செய்திருக்கலாம்” என சி.பி.அய். தெரிவித்தது.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 05.09..2017 அன்று தன் வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கர் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சச்சின் ஆண்ட்ரே என்பவரிடம் நடந்த விசா ரணையில், ஒரு துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களை கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவரிடம் அளித்ததாகக் கூறியுள்ளார்.
சச்சின் ஆண்ட்ரூவின் காவலை நீட்டிக்கக் கோரிய வழக்கில், இதை சி.பி.அய். தெரிவித்துள்ளது.
தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய சீர்திருத்தவாதிகள் கொல்லப்பட்டனர்.
கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், கொலை தொடர்பான விசார ணையையும் கருநாடகாவின் அப்போதைய சித்தராமையா அரசால் துரிதப்படுத்தப்பட்டது. மற்றொருபுறம் 2013-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தபோல்கரின் கொலைக் குற்ற விசாரணையும் வெவ்வேறு கோணங்களை எட்டிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், வலதுசாரி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வெவ்வேறு நபர்கள்தான் கல்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோரைப் படுகொலை செய்ததாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த மூன்று கொலைகளுக்கும் கோவிந்த பன்சாரே கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற விசாரணை ஒருபக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டி ருந்தது.

தபோல்கரை கொலை செய்த குற்றவாளிகள் ஸநாதன் சன்ஸ்தா என்கிற ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதே ஸநாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சரத் கலசாரே என்பவர் வெடிகுண்டு தொடர்பான விசாரணையின்போது தபோல்கர் கொலையில் தனக்குத் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், 2017-இல் கவுரி லங்கேஷ் கொல்லப் படுவதற்கு முன்பு, அவரது வீட்டை நோட்டம் பார்க்க, தான் உதவியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கருநாடக காவல்துறையினரால் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருக்கும் பரத் மற்றும் சுஜித் குமார் ஆகியோரின் விசாரணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த குமார் என்னும் நபர் ஏற்கெ னவே கல்புர்கி கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர். இதன்மூலம், இந்த மூவரையும் கொன்ற வர்கள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என் பதும், அவர்களது கொலை நோக்கமும் உறுதி யாகியுள்ளது.

கோவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸநாதன் சன்ஸ்தா ஹிந்து கலாச் சாரத்தைக் காக்கும் அமைப்பு என்று கூறிக் கொண்டு திரிகிறது, ஹிந்து கலாச்சாரத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை கொலைசெய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த அமைப்பின் கீழ் கருநாடகாவில் ஹிந்து ஜாகுருதி சன்ஸ்தா, ஹிந்து ரக்ஷா சமிதி உள்ளிட்ட பல சில்லறை அமைப்புகள் இயங்குகின்றன. இந்த அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவுகள் தான் – ஆனால் ஆர்.எஸ்.எஸ் இதை என்றுமே ஒப்புக்கொள்ளாது.

குற்றவாளிகளை அடையாளம் தெரிந்த பிறகு சான்றுகளைக் கொண்டுவந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர, கருநாடகாவின் சித்த ராமையா 2013 முதல் 2018 ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த போது இந்த வழக்கு வேகமெடுத்தது, நான்கு பேர் கொலைகளையும் விசாரிக்க தனிக் குழுவை அமைத்தார்.
ஆனால் 2018 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பாஜக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்ற உடனேயே தாபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரையிலான கொலை விசாரணைகள் தொடர்பான அமைப்பை கலைத்தார். இதனால் அந்தக் கொலை வழக்குகளின் விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் மகாராட்டிரா அரசும் பாஜக கூட்டணி என்பதால் அவர்களும் இந்தக் கொலை வழக்குகள் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொண்டு எடுக்காமல் முடக்கி வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது, சித்தராமையா முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விசாரணையை தீவிரமாக்க உத்தரவிட்டு அந்த வழக்கு தொடர்புடைய அதிகாரிகளிடமே மீண்டும் வழக்கை ஒப்படைக்க அவர்களும் மராட்டிய மாநில நீதிமன்றத்தில் எந்த ஒரு தாமதமும் இன்றி வழக்கு விபரங்களைத்தர குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. விரைவில் கல்புர்கி, கோவிந்த பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகளும் சிறைக்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment