பிற இதழிலிருந்து... பொதுத்துறை நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்க ஒரு விதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

பிற இதழிலிருந்து... பொதுத்துறை நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்க ஒரு விதியா?

அறிவுக்கடல்

3.5 சதவீதம் மட்டுமே விற்கப்பட்டுள்ள எல்அய்சி நிறுவனத்தின் பங்குகளில் மேலும் 6.5 சதவீதத்தை விற்க இன்னும் 3 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதை செபி ஏற்றிருக்கிறது. அதென்ன அவகாசம்? ஆம்! பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள (அதாவது பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ள!) நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் 25 சதவீதப் பங்குகளை விற்றுவிட வேண்டும் என்பது விதி. அதாவது, நிறுவனத்தைத் துவக்கியவர் (புரமோட்டர்) அதிகப் பங்குகளை வைத்திருக்கும்போது, மிகக் குறைவான பங்குகளை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக நடந்து விடலாம் என்பதற்காக இந்த விதி. அதானி நிறு வனங்கள் எதுவும் புரமோட்டர் 75 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்கக்கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்கவில்லை, செபியும் நட வடிக்கை எடுக்கவில்லை என்பதும் ஹிண்டன் பர்க்கின் ஆதாரப் பூர்வமான குற்றச்சாட்டுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் பங்கு விற்பனை செய்யும்போதே, சிறு நிறு வனங்கள் குறைந்தது 25 சதவீதப் பங்குகளையும், பெரிய நிறுவனங்கள் குறைந்தது 10 சதவீதப் பங்குகளையும் விற்க வேண்டும் என்றிருந்த விதிகள், மாபெரும் நிறுவனமான எல்அய்சியின் பங்குகளை விற்பதில் குறுக்கீடாக வந்ததால் மாற்றியமைக்கப்பட்டன. புதிய படிநிலைகள் உருவாக்கப்பட்டு, ரூ.1 லட்சம் கோடிக்குமேல் மதிப்புள்ள நிறு வனங்கள் 5 சதவீதப் பங்குகளை விற்றால் போதும் என்று விதிகள் மாற்றியமைக்கப் பட்டன. அதுவும் முடி யாமல் சிறப்பு விதிவிலக்கு என்று சொல்லி, 3.5 சதவீதப் பங்குகள்தான் விற்கப்பட்டன.

சிறப்பு விதிவிலக்கு ஏன்?
அவ்வாறு குறைவான பங்குகள் விற்கப்பட்ட நிறுவனங்கள், பட்டியலிடப்பட்டதிலிருந்து 5 ஆண்டுக ளுக்குள் 25 சதவீதப் பங்குகளுக்குக் குறையாமல் விற்றிருக்க வேண்டும் என்பதும் விதி. அந்த விதியில் எல்அய்சி வருகிற, ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிறு வனங்கள் என்ற பிரிவிற்கு, 2 ஆண்டுகளுக்குள் 10 சதவீதமும், 5 ஆண்டு களுக்குள் 25 சதவீதமும் பங்குகள் விற்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் தான், தற்போது சிறப்பு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் 25 சதவீதப் பங்குகளை விற்றிருக்க வேண்டும் என்பதை, 10 ஆண்டுகளுக்குள் விற்றால் போதும் என்று சிறப்பு விலக்கு கடந்த டிசம்பரில் அளிக்கப்பட்டது. மற்றொரு விதியான 2 ஆண்டுகளுக்குள் 10 சதவீதப் பங்குகளை விற்றிருக்க வேண்டும் என்பதில்தான் தற்போது, மேலும் 3 ஆண்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே பங்கு விற்பனை செய்யப்பட்டவையும், எல்அய்சியைவிட மிகவும் சிறியவையுமான, யூகோ வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, எச்எம்டி, ஸ்கூட்டர்ஸ் இந்தியா போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களிலும் இன்றுவரை 10 சதவீதப் பங்குகளைக்கூட விற்க முடியவில்லை என்பது தான் எதார்த்த நிலையாக உள்ளது. உண்மை என்ன வென்றால், விற்க வேண்டும் என்ற வேட்கை அரசுக்கு இருந்தாலும், வாங்குவதற்கு ஆளில்லை.

சேமிப்பின் வீழ்ச்சி
பெரிய ‘நிறுவன முதலீட்டாளர்கள்’ பங்குச் சந்தையை தங்கள் விருப்பத்திற்கேற்ப திசை திருப்புவதை மட்டும்தான் செய்கிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் என்றழைக்கப்படக்கூடிய, ஏராளமான பொதுமக்களின் நிதிதான் நேரடியாகப் பங்குகளை வாங்கியோ, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வடிவங்களிலோ பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவில் பங்களிக்கிறது. வேலை வாய்ப்பு, வருவாய் போன்றவை குறைந்த தாலும், விலைவாசி உயர்வாலும், கடந்த 10 ஆண்டுகளில், ஹவுஸ்ஹோல்ட் சேவிங்ஸ் என்ற ழைக்கப்படும் எளிய மக்களின் சேமிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பதை அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. பாது காப்புக் குறைவான முதலீடான பங்குச் சந்தைக்கு, மொத்தச் சேமிப்பில் சிறு பங்கே வரும் என்ற நிலையில், சேமிப்பே குறைந்திருப்பதுதான் பங்குகளை மேலும் விற்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படியான நிலையில், தனியார் முதலாளிகளுக்குரிய அதே விதியை அரசின் நிறுவனங்களுக்கும் சுமத்துவது என்பது பொருத்தமற்றதாக உள்ளது. அதிகப் பங்குகளை வைத்திருக்கக்கூடிய முதலாளி, நிறுவனத்தின் லாபம் தங்களுக்குப் பயன்படும் வகையில் நிறுவனத்தை நடத்துவார் என்ற அதே அளவு கோல் அரசின் நிறுவனங்களுக்கு எப்படிப் பொருந்தும்? சரியாகச் சொன்னால், அரசின் நிறுவனங்களில் லாப நோக்கம் என்பது முதன் மையாக இருப்பதே இல்லை. சரியாகச் சொன் னால், பங்கு விற்கப்பட்டுள்ளது, பங்குதாரர் களுக்கு லாபத்தில் பங்களிக்க வேண்டும் என்ப தற்காகவே லாப நோக்கம் திணிக்கப்பட்டு, நிறு வனத்தை அரசு தொடங்கிய உண்மையான நோக்கமே சிதைக்கப்படுகிறது. இதில், மேலும் பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்பது தேவையற்ற நெருக்கடிகளையே ஏற்படுத்துகிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கு அரசே அதிக வரி விதித்துவிட்டு, மானியம் தருவ தாகவும் பொய்த்தோற்றம் ஏற்படுத்துவதைப் போலவே, அரசே இப்படியான விதியை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதைக்காட்டி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மேலும் மேலும் அடிமாட்டு விலைக்கு விற்கவும் செய்கிறது.

பொதுத்துறை பங்கு
விற்பனையை தவிர்க்க…
பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு விதி விலக்கு அளிக்கலாம் என்றாலும்கூட, அது கால அவகாசமாகவே அளிக்கப்படுகிறது. உதார ணமாக, எல்அய்சிக்கு விலக்கு அளிக்கப்படும் வரை, எல்அய்சியின் பங்குகள் மேலும் விற்கப் படும் என்ற எதிர்பார்ப்பும், அதையொட்டி ஏற்படுகிற அழுத்தங்களும் நிறுவனத்துக்குச் சுமையாகவே மாறுகின்றன. எனவே, இந்த குறைந்தபட்ச விற்பனை விதிகள் அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சட்டம் இயற்றி, இனி பங்கு விற்பனைகள் நடக்காமல் தவிர்க்க வேண்டும். ஆனால், ‘அரசு நிறுவனங்களுக்கு மட்டும் தனி விதி’, ‘சமமான போட்டிக் களம் இல்லை’ என்றெல்லாம் கூப்பாடுகள் தொடங்கிவிடும். உண்மையில், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களையும், அந்த நோக்கமற்ற அரசுத்துறை நிறுவனங்களையும் ஒன்றாகப் பார்ப்பதே முட்டாள்தனமானது. சரியாகச் சொன் னால், சமமான போட்டிக் களம் என்பது எப் போதும் அரசுத்துறை நிறுவனங்களுக்குத்தான் மறுக்கப்படுகிறது.

நியாயமற்ற விதி
உதாரணமாக, எல்அய்சி நிறுவனம் வேலை நாட்க ளில் ஒவ்வோர் இரண்டு நொடிக்கும் 5 பேருக்குப் பணப்பட்டுவாடா செய்கிறது. ஒவ் வொரு நாளும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துகி றார்கள். இவ்வளவு நிதிப் பரிவர்த்தனைகளையும் பிற வங்கிகளில் செய்வதற்கு பதிலாக, எல்ஐசியே ஒரு வங்கியைத் தொடங்கி நடத்தினால் பல்வேறு சிக்கல்கள் களையப்படுவதுடன், எல்அய்சியின் பாலிசி தாரர்களாக இருக்கிற சுமார் 28 கோடி மக்க ளுக்கும் இன்னும் சிறப்பான சேவை கிடைக்கும்.

ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனு மதியில்லை என்று விதி இருக் கிறது. வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்க லாம் எனும்போது, காப்பீட்டு நிறுவனம் தனக்கான வங்கியைத் தொடங்கக்கூடாது என்பது நியாயமற்ற விதி அல்லவா? அப்படிக் காப்பீட்டு நிறுவனங்களை நடத்துகிற வங்கிகள், அவர்களிடம் கணக்கு வைத்திருக்கிற வாடிக்கை யாளர்கள் எல்அய்சியில் பாலிசி எடுப்பதில் முட்டுக்கட்டை போடவும், கணக்கிலிருந்து அவர்கள் செலுத்துகிற பணத்தை (சட்டத்திற்குட் பட்ட வழிகளிலேயே) தடுக்கவும் எல்லா முயற் சிகளை யும் மேற்கொள்வது என்பது எல்அய்சிக்கு மிகப்பெரிய இடையூறாக உள்ளது. காப்பீட்டுக்குச் செலுத்தப்பட்ட காசோலையைத் திருப்பி அனுப் பிய ஒரு வங்கிக்கு பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட செய்திகூட அண்மையில் வெளி யாகி, இப்படியான நடவடிக்கைகளை வெளிச்சத் திற்குக் கொண்டு வந்தது.

உண்மையான சம போட்டிக் களம்
ஆனாலும் ரூ.50 லட்சம் கோடிக்குமேல் நிதிகளை நிர்வகிக்கிற எல்அய்சிக்கு வங்கி தொடங்க அனுமதி இல்லை. அதே நேரத்தில், சிறு நிதி வங்கிகள் என்று குறைந்த முதலீட்டுடன் அனுமதிக்கப்பட்டவைகூட முழுமையான வங்கி களாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது என்பதும், புதிய தனியார் வங்கிகள் பலவும் மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கவை. புதிய வங்கி தொடங்கத் தான் அனுமதி யில்லை, அரசிற்காக சுமார் 50 சதவீதப் பங்குகளை எல்ஐசி வாங்கிய அய்டிபிஅய் வங்கியை யாவது தன்னுடைய வங்கியாக எல்அய்சியே நடத்துவதற் குக்கூட ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை என்பதுதான் இன்னும் முக்கியமானது.

குறிப்பிட்ட அளவு பங்கு விற்கப் பட்டிருக்க வேண்டும் என்ற அதே விதியைச் சுட்டிக்காட்டித்தான் அய்டிபிஅய் வங்கியின் பங்குகளை எல்அய்சி குறிப்பிட்ட காலத்தில் விற்க வேண்டும் என்று அரசு வற்புறுத்து கிறது. வழக்கமான குறைந்தபட்ச பங்கு விற்பனை விதிகள் பொதுத்துறை, அரசு நிறுவ னங்களுக்குப் பொருந்தாது என்று சட்டமியற்றி னாலே, ஒரே கல்லில் மூன்று மாங்காயாக அய்டிபிஅய் வங்கி பிரச்சனையும் தீர்ந்துவிடும், எல்ஐசிக்கும் சொந்தமாக வங்கி கிடைத்துவிடும், எல்அய்சியின் பங்குகளை மேலும் விற்க வேண் டும் என்ற நெருக்கடியும் தீர்ந்துவிடும். வங்கிகளால் நடத்தப்படும் காப்பீட்டு நிறுவனங்களுடன் எல்அய்சி போட்டியிட, அதுதான் உண்மையான சமமான போட்டிக் களமாக இருக்கும்! அத்துடன், அதுவே பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற நீதியாகவும் இருக்கும்!

நன்றி: ‘தீக்கதிர்’, [21.5.2024]

No comments:

Post a Comment