பொ.நாகராஜன்
பெரியாரிய ஆய்வாளர்
நூல் அரங்கம்
நூல்:
“சுயமரியாதை இயக்க வரலாறு ( பாகம் 1 )”
ஆசிரியர்: க.திருநாவுக்கரசு
வெளியீடு:
நக்கீரன் பதிப்பகம்
முதல் பதிப்பு 2023
பக்கங்கள் 640
நன்கொடை ரூ. 800/-
* நடப்பதோ சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு ( 1925 – 2024). இந்த நூற்றாண்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், செயல் பாடுகள், இன்றைய நிலைக்கான பொருத்தப் பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்!
* இதை அறிந்து கொள்ள ஒரு மிகச் சிறந்த ஆய்வாளரிடமிருந்து உருவான ஒரு மிகச் சிறந்த ஆவண நூல் பற்றிய அறிமுக வுரை தான் இது!
* திராவிட சிந்தனையாளர், திராவிட இயக்க ஆய்வாளர், திராவிட கணினி என்று எல்லோராலும் அறியப்படும் க.திருநாவுக் கரசு அவர்களின் பெரும் முயற்சியில், உழைப்பில், ஆர்வத்தில், தன்னலமில்லா நோக்கத்தில் உருவான மற்றுமொரு சிறந்த படைப்பு இந்த நூல்!
* நூலாசிரியர் க.திருநாவுக்கரசு அய்யா அவர்கள் இது வரை பல திராவிட வரலாற்று ஆவண நூல்களைப் படைத்துள்ளார். நீதிக் கட்சி வரலாறு இரண்டு பாகங்கள்; திமுக வரலாறு மூன்று பாகங்கள், தற்போது சுயமரி யாதை இயக்க வரலாறு முதல் பாகம். இதன் அடுத்த பாகமும் வெளிவர இருக்கிறது!
* தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அணிந்துரை யில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ‘ எழுத்துச் செம்மல் ‘ எனப் பாராட்டப்பட்டவர், திராவிட மாடல் அரசால், ‘ தந்தை பெரியார் சமூக நீதி விருது ‘ பெற்றவர் அண்ணன் க.திருநாவுக்கரசு – இந்த சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றைத் தொகுத்து நூலாக அளிப்பதற்கு மிகவும் பொருத்தமானவர். அவரைப் போன்ற வரலாற்று ஆய்வாளர் கிடைப்பது அரிது! ” ….எனப் பாராட்டியுள்ளார்!
* தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வாழ்த்துரையில், ” சுயமரியாதை இயக்க, திராவிட இயக்க சித்தாந்த வழியில் நம் தமிழ் நாட்டு இளைஞர்களை வீரத்துட னும், விவேகத்துடனும் வார்த்து – வளர்த்து எடுப்பதன் மூலமாகத்தான் மதவாத ஆரி யத்தை ஆணி வேரோடு வீழ்த்திட முடியும்! அதற்கு இந்த நூலும் இதற்கு முன் வெளிவந்த அவரது நூல்களும் ஆயுதங்களாக இருக்கும்!” என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்!
* நூலாசிரியர் க. திருநாவுக்கரசு அய்யா அவர்களின் என்னுரையில், ” இந்தியாவில் பிற மாநிலத் தலைவர்கள் தமிழ் நாட்டைக் கவனிக்க செய்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம். திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த சமூகக் கட்டமைப்பு, ‘ சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு ‘ என்னும் முழக்கத்தின் மூலம் வெளிப்படுத்திய இயக்கம் – சுயமரியாதை இயக்கம். அதன் பணிகளின் சிறப்பை முதல் பாகத்தில் கூறி இருக்கின்றோம்” …என தெளிவுபடுத்துகின்றார்!
இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்க்கிறோம்!
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், வடநாட்டில் ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை யின் அடிப்படையில் அரசியல் உருவெடுத் தது. அது இன்றுவரை தீர்க்கப்படாத தொடர் கதையானது!
* தென்னாட்டிலோ பார்ப்பனர் – பார்ப் பனரல்லாதோர் பிரச்சினையின் ஆதாரத்தில் அரசியல் கட்டமைக்கப்பட்டது! அதன் விளைவாக தமிழ்நாட்டில் 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது! பின்பு அது 1920ஆம் ஆண்டு ஆட்சிக்கும் வந்தது!
* தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்! சுயமரியாதை இயக்கம் அரசியலுக்கு வெளியே இருந்து அரசியலை இயக்கியது. ஆரம்பத்தில் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு தளங்களில் மட்டுமே இயங்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பகுத்தறிவு சிந்தனைகள், பொதுவுடைமை கொள்கைகள் பற்றியும் விவாதிக்க ஆரம்பித்தது!
* இந்தியாவில் முதன்முதலாக எல்லா மக்களுக்காகவும் சமூக நீதிக்காகப் போரா டிய ஒரே இயக்கம் – சுயமரியாதை இயக்கம்.
கன்னியாகுமரி பகுதியில் உருவான வைகுந்த சாமியின் இயக்கம்; கேரளாவின் அய்யன் காளி இயக்கம்; நாராயண குருவின் இயக்கம் ஆகியவைகள் அவரவர் ஜாதியை முன்னிறுத்தி அவர்களின் மேன்மைக்காக பணியாற்றின!
* ஆனால் சுயமரியாதை இயக்கமோ தனது பரப்புரையில் அனைத்து சாதிகளின் உரிமைகளைக் கோரிப் போராடியது! அனைத்து ஜாதி மக்களையும் தன்னுள் ஏற்றுக் கொண்டு போராடியது! அப்படித்தான் இந்த மண் நாள டைவில் பெரியார் மண் ஆனது!
* சுயமரியாதை என்றால் என்ன என்ப தற்கு நூலாசிரியரின் அருமையான விளக்கம்:
தன்மானம் தான் சுயமரியாதை! சமத்து வம் பேணுவது; புதிய உலகைப் படைக்க முயலுவது; பழைய அமைப்பை அறிவாயுதம் கொண்டு பரப்புரை செய்து அழிப்பது என்பதே சுயமரியாதையாகும்! இந்த சுய மரியாதை வாழ்வே சுகவாழ்வு தருவது. மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் – சுயமரியாதை இயக்கம்!
எவ்வளவு பெரிய கொள்கைக்கு எவ்வளவு எளிதான விளக்கம் பாருங்கள்!
* சுயமரியாதை என்ற சொல்லுக்கான சிறப்பை – ஈரோடு சுயமரியாதை இயக்க இரண்டாவது மாகாண மாநாடு (1930) நிகழ்வில் மாநாட்டுத் தலைவர் தோழர் எம். ஆர்.ஜெயகர், ” இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும், அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுயமரி யாதை’ என்கின்ற வார்த்தைக்கு மேலானதா கவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடி யாது!” என்று சிறப்பாக எடுத்துரைத்ததையும், அதற்கு மாநாட்டில் நன்றியுரையாற்றிய பெரி யார் வெகுவாக பாராட்டிப் பேசியதையும் நூலில் கண்டு பெருமிதம் கொள்ள முடிந்தது!
* சுயமரியாதை இயக்கம் எப்போது தோன்றியது என்பதற்கு சரியான தேதியை உறுதி செய்ய தரவுகள் இல்லாததால் ‘குடிஅரசு ‘ இதழின் முதல் இதழ் வெளிவந்த நாளான 02.05.1925ஆம் தேதியை சுய மரியாதை இயக்கம் தோன்றிய நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நூலா சிரியர், திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு பரிந்துரைக்கின்றார். அதனால் நாமும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் 02.05.1925 என்று எடுத்துக் கொள்வோம்!
* ‘குடிஅரசு’ இதழ் மூலமாகத்தான் சுயமரி யாதை இயக்கத்தின் நடவடிக்கைகளை அறிய முடிவதால் அந்த இதழ் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதும் நமக்கு தேவையான ஒன்றாகிறது.
பெரியார் குடிஅரசு இதழை 02.05.1925 அன்று துவக்கினார். இதை வார ஏடாக 13.08.1949 வரை தொடர்ந்து நடத்தினார். நான்கு முறைக்கு மேலாக சிறிய இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டு மீண்டும் வெளிவந்தது!
* பெரியாரின் நண்பர் வரதராஜூலு நாயுடு நடத்திய ‘ தமிழ்நாடு ‘பத்திரிகை – சுயராஜ்ய வாழ்வே சுகவாழ்வு என வெளிப் படுத்தியது!
பெரியாரின் குடிஅரசு இதழோ – சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு என முழங்கியது!
அந்த முழக்கம் இன்றும் மேடைகளில் தொடர்ந்து கேட்கிறது!
* சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பெரியார் தனி ஒருவராக தன்னை மட்டுமே முன்னிறுத்தி குடிஅரசு இதழில் எழுதாமல், பல அறிஞர்களை, எழுத்தாளர் களை, சிந்தனையாளர்களை, கவிஞர்களை அதில் எழுத வைத்தார்!
* சுயமரியாதை இயக்கம் பற்றியும், பகுத் தறிவு, பொதுவுடைமை, அரசியல் பற்றிய அவர்களது படைப்புகளை எல்லோரும் அறியும்படி செய்தார். பார்ப்பனரல்லாத எல்லா அறிஞர்களுக்கும் எழுதுகின்ற வாய்ப்பைத் தந்தார். குடிஅரசு இதழில் எழுதிய அறிஞர்களின் பெயர் பட்டியல் அதை நிரூபணம் செய்கிறது :
* பொன்னுசாமி என்கிற சுவாமி கைவல்யம், நாகர்கோவில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளை, கோவை அ. அய்யா முத்து, குத்தூசி குருசாமி, சாத்தான் குளம்
அ.இராகவன், சாமி. சிதம்பரனார், தோழர்
ப.ஜீவானந்தம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நீலாவதி இராம சுப்பிரமணியம், எஸ். இராம நாதன், தோழர் ம. சிங்கார வேலர், மயிலை. சீனி.வெங்கடசாமி, சந்திரசேகரப் புரவலர் எனும் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை,
அ.பொன்னம்பலனார், அறிஞர் அண்ணா, சேலம் பாலசுப்ரமணியன், சுயமரியாதை இயக்கத்தின் மரியாதை இவர்களின் எழுத் தில் குடிகொண்டிருந்தது!
* சுயமரியாதை இயக்கத்தின் செயல் பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் காகவும் அவர்களது சுயமரியாதையை காப்பாற்றுவதற்காகவும் இருந்தது. எடுத்துக் காட்டாக இந்த தகவல்:
* தாழ்த்தப்பட்டோருக்கு தனிப் பள்ளிக் கூடங்கள் இருந்ததை சுயமரியாதை இயக்கம் வன்மையாக கண்டித்தது. 1930 -1931 ஆண் டில் சென்னை மாகாணத்தில் தாழ்த்தப் பட்டோருக்கு என்று 1784 தனிப் பள்ளிக் கூடங்கள் நடந்து வந்தன. இதை சுயமரி யாதை இயக்கம் கண்டித்தது. பொதுப் பள்ளி களில் அனைவரையும் ஒன்றாக படிக்க வைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அத்தோடு தாழ்த்தப்பட்டோருக்காக தனிக் கிணறு ஏற்படுத்துவதையும் கண்டித்தது!
* சுயமரியாதை இயக்கம் 1926 முதல் 1931வரை கோயில் நுழைவுப் போராட்டங் களை தொடர்ந்து நடத்தியதை வரலாற்றில் இருட்டடிப்பு செய்தார்கள் என்பதை ஆதாரங்களோடு அந்த போராட்டங்களின் விவரங்களை நூலாசிரியர் தந்துள்ளார்.
* ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டவர் களை அழைத்துக் கொண்டு திருச்சி தாயு மானவர் கோயிலுக்குப் போனார். அங்கி ருந்து அவர்கள் கீழே உருட்டி விடப்பட்டார் களாம்! ஜே. எஸ். கண்ணப்பர் தாழ்த்தப்பட்ட மக்களோடு திருவண்ணாமலை கோயிலில் வைத்துப் பூட்டப்பட்டாராம்!
* கி.ஆ.பெ.விசுவநாதம் ஆயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நுழைந்தாராம்!
சா.குருசாமி ஈரோடு ஈசுவரன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றா ராம்!
* திராவிட இயக்கம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது எனக் கேட்கும் வரலாற்று சூன்யங்களுக்கு நினைவூட்டுவதற்காகவே இந்தத் தகவல்கள்!
* நூற்றாண்டைக் காணும் சுயமரியாதை இயக்கம் – சிறப்புமிக்க மூன்று பெரிய மாகாண மாநாடுகளை நடத்தி, அந்த அரங்கங்களிலேயே பல துணை மாநாடுகளையும் நடத்தி, வரலாற்றில் போற்றப்படும் பல தீர்மா னங்களை நிறைவேற்றி, தமிழ்ச் சமூகம் இன் றைய வளர்ந்த நிலையை அடைவதற்கு உறுதியான அடித்தளமாக இருந்தது! அவைகள் :
1) செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு 1929 – பிப் 17 & 18.
மாநாட்டுத் தலைவர் – சவுந்திர பாண்டிய னார்.
2) ஈரோடு சுயமரியாதை இயக்க இரண்டா வது மாகாண மாநாடு 1930 – மே 10 முதல் 13 வரை.
மாநாட்டுத் தலைவர் – எம். ஆர். ஜெயகர்.
3) விருதுநகர் சுயமரியாதை
இயக்க மூன்றாவது மாகாண மாநாடு 1931 – ஆக 8 & 9.
மாநாட்டுத் தலைவர் – ஆர். கே. சண்முகம்.
* வரலாற்று சிறப்பு மிக்க செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட தீர்மானங்களில் மிகவும் முக்கிய மானவைகள் :
1) ஜாதி பேதம் பார்க்கக் கூடாது! வர்ணா சிரம கொடுமையான கட்டுப்பாடுகளையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளை ஏற்றுக் கொள்ள கூடாது!
2) மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பை காட்டுவதற்காக சேர்க்கப் படும் பட்டங்களை விட்டு விட வேண்டும்!
3) ஜாதி அல்லது சமய பிரிவுகளைக் காட்டும் குறிகளை அணிந்து கொள்ளக் கூடாது!
4) பள்ளியில் அனைவருக்கும் கட்டாய, இலவச ஆரம்பக் கல்வி தர வேண்டும்!
5) தீண்டாதவர்கள் என்று சொல்லப் படுகின்ற வகுப்பினரின் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் புத்தகம், உணவு, உடை முதலிய வற்றை இலவசமாக தர வேண்டும்!
6) மூட நம்பிக்கைகளையுடைய எந்த புத்தகங்களையும் பாடப் புத்தகங்களாக பள்ளிகளில் வைக்கக் கூடாது!
7) பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச் சொத்துரிமை, வாரிசு பாத்தியமை களும் கொடுக்கப்பட வேண்டும்!
8) பெண்களும் ஆண்களைப் போலவே எந்த தொழிலையும் நடத்த சம உரிமையும் அவகாசமும் கொடுக்க வேண்டும்!
9) ஆரம்ப பள்ளிகளில் கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் (ஆசிரியர்) வேலைக்கு பெண்களையே நியமிக்க வேண்டும்!
10) சிற்றுண்டி சாலைகளில், ரயில்வே கேண்டின்களில் ஜாதி, மதம், வகுப்பு, நிறம் பார்க்க கூடாது!
* இது போன்றே இரண்டாவது மூன்றாவது மாகாண மாநாடுகள் பற்றிய முழு விவரங் களும் நூலில் தரப்பட்டுள்ளன. பெரியாரின் அய்ரோப்பிய பயணம் பற்றிய முழுத் தகவல்கள் ( 13.12.1931 முதல் 07.11.1932 வரை ) 331 நாட்களின் பயணக் குறிப்புகள் தரப் பட்டுள்ளன!
* தென்னிந்திய சமதர்ம கட்சியை துவக்க விரும்பி பின்னர் அதை கைவிட்டதற்கு ‘சுயமரியாதை இயக்கத்தை காப்பாற்றவே’ என்று பெரியார் குடிஅரசில் வெளியிட்ட முக்கிய அறிக்கை (10.03.1935 ) காணக் கிடைக்கின்றது.
* இராஜாஜி ஆட்சியின் போது நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937 – 1939) பற்றிய முழு விவரங்கள், சென்னையில் நடைபெற்ற தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் (13.11.1938) தந்தை பெரியாருக்கு, ‘ பெரியார் ‘ என்ற பட்டம் வழங்கியது பற்றிய விவரங்கள் உள்ளன!
* முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பெரியார் 08.12.1938 முதல் 12.05.1939 வரை சிறையில் அடைக்கப்பட்டது. அந்த வேளையில் பெரியாரை நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு களையெல்லாம் விரிவாக இந்த நூலில் காண முடிகின்றது!
* ஒரு பெரிய ஆவணக் காப்பகத்திற்குள் தனியாளாக நுழைந்து அங்கிருக்கும் ஆவ ணங்கள் ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கின்ற, வியக்கின்ற, சிந்திக்கின்ற, சீர்தூக்குகின்ற வாய்ப்பைப் பெற்ற ஒரு மாணவனாக இந்த நூலை படித்து முடித்த பின்னர் நான் உணர்ந்தேன்!
* நூலாசிரியர் க.திருநாவுக்கரசு அய்யா வின் இந்த இமாலயப் பணிக்கு இணை கிடையாது! அவருக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
* திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அவர்களின் இந்த நூலை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து அதை பரப்ப வேண்டியது தமிழர்களின் கடமை!
* சுயமரியாதை இயக்கத்தின் நூற் றாண்டை முன்னிட்டு இந்த நூலை நமக்கு தந்த திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி அவரை பெருமைப்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை!
No comments:
Post a Comment