“நாங்கள் எறும்புகள் தான்” ஆச்சாரியாருக்கு அய்யா பதில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

“நாங்கள் எறும்புகள் தான்” ஆச்சாரியாருக்கு அய்யா பதில்!

திராவிடர் கழகத்தை எறும்புக்கும், மூட்டைப் பூச்சிக்கும் ஒப்பிட்டு முதலமைச்சர் ஆச்சாரியார் பேசிய தற்கு சேலம் ஆத்தூர் மாநாட்டில் தலைவர் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து சில பதில்கள்.

– ஆ-ர்.

நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார். நாம் உண்மையில் எறும்பு களைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக் ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார். நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம். தேவ – அசுர யுத்தம் வந்துவிட்டது என்கிறார் ஆச்சாரி யார். நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் கூறினேன், ராம – ராவணப் போராட்டம் துவங்கிவிட்டது என்று. நாம் இராவணர்கள்; அவர்கள் இராமர் கூட்டம். நம் துரோ கிகள் எல்லாம் அனுமார்கள், விபீஷணர்கள். நாம் இப்பொழுது ஒன்றுபடவில்லையென்றால் அவர்களுக் குத் தான் வெற்றி என்று கூறினேன். இப்பொழுது ஆச்சாரி யார் தைரியமாகக் கூறுகிறார் – தேவ – அசுர யுத்தம் ஆரம்பித்துவிட்டது என்று! ஒழித்துக் கட்டி விடுவ தாகவும் கூறுகிறார். நமக்கு இனி சரித்திரத்தில் மட்டும் தான் இடமிருக்கும் என்று கூறுகிறார். நான் இரண்டாண்டு களுக்கு முன் கூறினேன். பார்ப்பனர்களை சித்திரத்தில் – அகராதியில்கூட இல்லாமல் ஒழிக்க வேண்டுமென்று கூறினேன். அப்படி இல்லையென்றால் விமோசனமில்லை.
நாளை மாநாட்டில் ஒரு தீர்மானம் போடப் போகி றேன். அதாவது; சட்டத்தின் வரம்பிற்கு – எல்லைக்கு உட் பட்டு – சட்டம் எந்த அளவிற்கு இடம் அளிக்கிறதோ அந்த அளவிற்கு நீங்கள் ஆளுக்கொரு மடக்க முடியாத கத்தி வைத்துக் கொள்ளுங்கள். அது மற்றவர்களைக் குத் துவதற்காக அல்ல; ஆச்சாரியாரால் தூண்டி விடப்பட்ட காலிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள – தற்காப்பிற்காக.
பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர் களை கொன்றொழிப்பது என்பதல்ல. 4 பார்ப் பனர்கள் போனால் நாளைக்கு வேறு 4 பார்ப்பனர்கள் வருகிறார் கள். மலேரியா வந்தால் ‘கொயினா’ கொடுத்தால் மலேரியா எப்படி ஒழியும்? எனக்குத் தோன்றுவ தெல்லாம் பார்ப்பனர்கள் செல்வாக்குக்குக் காரணம் கடவுள்கள், கோயில்கள், இராமாயண, பாரத இதி காசங்கள், மதம், சாஸ்திரங்கள் இவைதான். இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான். சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படிக் கொசு ஒழியுமோ அப்படி இந்துமதம், கடவுள், கோயில், புராணங்கள் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

– ‘விடுதலை’, 13.10.1952

No comments:

Post a Comment