சென்னை, மே 9- சில நாள்கள் முன்னதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் 2 ராட்வெய்லர் நாய்கள் 5 வயது சிறுமியைக் கடித்துக் குதறின. அந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடமாடவே அஞ்சி வருகின்றனர்.
தெருநாய்களின் தொல்லையைவிட, வளர்ப்பு பிராணிகள் என்ற போர்வையில் வளர்க்கப்படும் நாய்கள் தான் அச்சமூட்டுவதாக உள்ளன. முறையாக அதைப் பராமரிக்காமல் கட்டியே போட்டுள்ளதால், அதன் வீரியம் அதிகமாகிவிடுகிறது.
உரிமையாளர் காலை நடைப்பயிற்சிக்காக அதை உடன் அழைத்து வரும்போது பொதுமக்களை அது தாவிக் கடிக்க செய்கின்ற நிகழ்வுகள் மிக எளிதாக நடைபெற்று வருகின்றன.
இந்த ராட்வெய்லர் நாய் விவகாரம் பெரும் பிரச் சினையாக உருவெடுத்ததால் அந்த நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருவரை நாய்க்கடித்தால் அவர் என்ன மாதிரியான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் அறிவுரை தேவையாக உள்ளது.
அது குறித்து பொது மருத்துவர் டாக்டர் சுலைமான், “வெறிநாய் கடிப்பதால் வருகின்ற மோசமான நோய்தான் ரேபிஸ். இந்த நோய் 97% நாய்க்கடியினால் மட்டுமே வருகிறது. 2% பூனைகளால் வருகிறது. 1% வனவிலங்குகளால் வருகின்றன.
ஒருவரை நாய்க் கடித்துவிட்டால், உடனடியாக அவரை நல்ல நீரில் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கழுவவேண்டும் என்றால் நன்றாகக் கழுவ வேண்டும். ஒப்புக்குக் கழுவக் கூடாது. அதன்பிறகு நாய்க்கடித்த இடத்தில் சுண்ணாம்பு பூசுவது, மஞ்சள் பத்து போடுவது எல்லாம் செய்யவே கூடாது.
அதை மாதிரியே நாய்க் கடித்த காயத்தின் மீது கட்டுக்கட்டக் கூடாது. ப்ளாஸ்திரி ஒட்டக் கூடாது.
அதன்பின்னர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அலட்சியம் கூடாது. அங்கே போனால் ஓர் ஊசி போடுவார்கள். எவ்வளவு சீக்கிரம் இந்த ஊசியைப் போடுகிறோமோ அவ்வளவு நல்லது. ஆனால், கடித்த 24 மணிநேரத்திற்குள் சென்று விட வேண்டும்.
எத்தனை முறை ஊசி போடவேண்டும் என்றால் – நான்கு டோஸ் போட வேண்டும். முதல் நாள் ஒரு ஊசி. அடுத்து 3ஆம் நாள் ஒரு ஊசி. அதன்பின்னர் 7ஆவது நாள் ஒரு ஊசி. கடைசியாக 28 ஆவது நாள் ஒரு ஊசி. இப்படி முறையாகத் தவறாமல் போட வேண்டும்.
ரேபிஸ் நோய் வந்த பிறகு காப்பாற்றுவது கடினம். ஆனால், தடுப்பூசி போட்டுவிட்டால், 100% ஒருவரைக் காப்பாற்றி விடமுடியும். அதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்களைக் கடித்த நாய்க்கு முறையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும், கடிபட்டவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வது 100% பாதுகாப்பானது. ஒரு நாயின் வெறித் தன்மையை நாம் பரிசோதிக்க முடியாது. அதற்குப் பதிலாக நாம் தடுப்பூசி எடுத்துக் கொள்வதே சிறந்த வழி.
ஒரு நாய்க்கடிப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. நாம் நாயுடன் விளையாடும் போது அது லேசாகக் கடித்துவிட்டு. இன்னொன்று அதுவே வெறிபிடித்து நம்மை வலிய வந்து தாக்குவதற்காகக் கடிப்பது. இதில் இரண்டாவது வகையான கடிதான் மிகமிக ஆபத்தானது.
எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொள்வது என்பது பற்றி உங்களுக்குக் குழப்பம் வேண்டாம். அதை மருத்துவர்களே முடிவு செய்வார்கள். தலைக்குப் பக்கத்தில் நாய்க்கடி இருந்தால் அது ஆபத்து. அதற்காக மட்டும் தனியான தடுப்பூசி உள்ளது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மட்டும் ஒரு நாளைக்கு 40 முதல் 50 பேருக்கு நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டு வருகிறது. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 100 பேருக்கும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போடப் பட்டு வருகிறது.
நாய்க்கடிக்குத் தடுப்பூசி 24 மணிநேரமும் போடப் படுகிறது. இரவு நேரம் ஆகிவிட்டதே, போனால் தடுப்பூசி போடுவார்களா என அஞ்ச வேண்டாம்.
ஆகவே அதிரடியான நடவடிக்கைதான் நாய்க்கடிக்கு நல்ல தீர்வு” என்கிறார்.
No comments:
Post a Comment