இதுதான் 'நீட்' தேர்வின் யோக்கியதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

இதுதான் 'நீட்' தேர்வின் யோக்கியதை!

மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வந்தது. அந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவர் ஆனவர்கள் என்ன தரம் கெட்டு விட்டார்கள்?
அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் படித்து மருத்துவர் ஆனவர்கள் உலகின் பல நாடுகளிலும் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
இன்னொரு வகையில் பார்த்தாலும் மதிப்பெண் என்பதுதான் தகுதியின் அளவுகோலா?
1) மருத்துவக் கல்லூரியில் தங்க மெடல் வாங்கி வெளியில் வந்தவர்கள்தான் சிறந்த மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவிற்கு யோக்கியமான விடை உண்டா?
2) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததுண்டே! இதன் பின்னணியில் இருந்த பார்ப்பன சூழ்ச்சியை அறிய மாட்டோமா?
தந்தை பெரியார் குரல் எழுப்பி, நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோதுதான் அந்த நிபந்தனை தூக்கி எறியப்பட்டது.
3) இடஒதுக்கீடு வந்த நிலையில் பட்டியலினத்தவரும், பிற்படுத்தப்பட்டவரும் மருத்துவர்களாக அதிகம் வர ஆரம்பித்த நிலையில், அதனைக் கொல்லைப்புரம் வழியாகத் தீர்த்துக் கட்டக் கொண்டு வரப்பட்டதுதானே நீட் தேர்வு?
4) ‘நீட்’ வந்த பின் பட்டியலின மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கிடைத்து வந்த இடங்கள் பெரும் வீழ்ச்சி அடையவில்லையா?
சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் பன்மடங்கு பெருகவில்லையா?
ம.தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் கோவை ஈஸ்வரன் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்களைப் பார்த்தாலே தெரியுமே!
“தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-2019ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் இடம் கிடைத்தது.
அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் மூவருக்குத் தான் இடம் கிடைத்தது. தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 20. அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 611. வெளி மாநிலங்களில் +2 படிப்பை முடித்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழை அளித்து, வெளி மாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது” – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைக்கப் பெற்ற தகவல்கள் இவை.
‘நீட் தேர்வு யார் வயிற்றில் அறுத்துக் கட்ட உருவாக்கப் பட்டது என்பது இப்பொழுது புரியவில்லையா?
(5) காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தானே ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது என்ற கேள்வி எழலாம்.
உண்மைதான் அதனை எதிர்த்து தி.மு.க. உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் ’நீட்’ தேர்வு செல்லாது; தேர்வு நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதே! அத்தோடு அந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றது; சீராய்வு மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
2014இல் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர்தானே. சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2013இல் இப்பிரச்சினையில் ‘நீட்’டுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன அதே நீதிபதி ஆர்.என். தவே தலைமையிலான அமர்வுதானே ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பளித்தது.
(இப்பொழுது சூட்சுமம் வெளிவந்து விட்டதா, இல்லையா?)
உண்மை என்னவென்றால் இதே மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது ‘நீட்’டை எதிர்த்தார் என்பது நினைவில் இருக்கட்டும்!
6) ‘நீட்’ தேர்வாவது நேர்மையான முறையில் நடந்து வருகிறதா? முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலைதான்.
2.4.2018 அன்று மக்களவையில் தெலங்கானா ராஷ்டிரிய சமதி கட்சியைச் சேர்ந்த பூரா நர்சையா கவுட் என்பவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
“மருத்துவ மேல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வினை நடத்தும் புரோ மெட்ரிக் என்னும் அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு தொடர்பான மென்பொருளைக் கையாடல் செய்ய முடியும் என ஒப்புக் கொண்டுள்ளதா?
ஆம், எனில் விசாரணை நிலவரம் மற்றும் குற்றவாளிகள்மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?”
உறுப்பினரின் இந்தக் கேள்விக்கு, ஒன்றிய அரசின் மனிதவளத் துறை இணை அமைச்சர் டாக்டர் சத்யாவி சிங் மக்களவையில் அளித்த பதில்:
2017ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் நிறுவனம் விசாரணையின்போது – தொலைப்பேசி உரையாடலில் தங்களது மென்பொருள் கையாடல் செய்யப்பட்டது என்று ஒப்புக் கொண்டது என்று ஒன்றிய இணை அமைச்சர் மக்களவையில் ஒப்புக் கொண்டு பதில் அளித்தாரே!
ஆனால், இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அந்த ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டதா என்றால் இல்லை என்பது தான் பதில்.
ஒவ்வொரு ஆண்டு ‘நீட்’ தேர்வின்போதும் ஆள் மாறாட்டம் வினாத்தாள் வெளியானது – இதில் பல லட்சம் ஊழல். (நடந்து முடிந்த நீட் தேர்வில் குஜராத், மத்தியப் பிரதேசம், பீகாரில் நடைபெற்ற ஊழல்கள் மோசடிகள் விலாவாரியாக ஊடகங்களில் வெளியாகி யுள்ளன?)
7) ‘நீட் தேர்வே அடிப்படையில் தவறானது, ‘நீட்’ தேர்வு நடத்துவதிலும் தில்லுமுல்லு, இலஞ்ச இலாவண்யம், இவற்றால் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிப்பு – இதுதான் ‘நீட்’ தேர்வின் நிகர வரவு செலவு.
8) காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வு நடத்துவதா, இல்லையா என்பது மாநில அரசுகளின் முடிவுக்கு விடப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரிதும் வரவேற்கத் தக்கதே!

No comments:

Post a Comment