புதுடில்லி, மே 12 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் – பி.ஜே.பி.,க் காரர்கள் எந்தப் பதவியும் வகிக்க முடியாது; அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் ஒதுக்கப்பட்டனர். மோடிக்கும் இது பொருந்தும் என்றார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்.
டில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானை முகவரி இல்லாமல் ஆக்கினார்கள். சிறு வனாக இருந்த மோடியை சைக்கிளில் ஷாகாக்களுக்கு அழைத்துச் சென்ற மனோகர் லால் கட்டாரை முகவரி இல்லாமல் ஆக்கினார்கள்; அடுத்த குறி சாமியார் ஆதித்யநாத்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் முகவரி இல்லாமல் ஆகிவிடுவார். மோடியின் வலதுகரமான அமித்ஷா இந்தியாவின் பிரதமராக வருவார் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பிணையில் வெளிவந்த ஒரு நாளுக்குப் பிறகு டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால், அனைத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் இன்னும் 2 மாதங்களில் பதவியை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அத்வானி எங்கே?
பாஜகவை ஊர் ஊருக்கு, கிராமம் கிராமாக கொண்டு சென்ற எல்.கே.அத்வானி இன்று எங்கே உள்ளார்? இராமன் கோவில் இடிப்பால் பிரபலமாகி பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர பாடுபட்ட முரளி மனோகர் ஜோஷி எங்கே? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தானின் பாஜக முகம் என்று கூறப்பட்ட வசுந்தரா ராஜே எங்கே? ‘‘என்னை மனோகர் லால் கட்டார் தான் சைக்கிளில் அமரவைத்து ஷாகாக்களின் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் மனோகர் லால் கட்டார் எங்களுக்கு பெரிய அண்ணன் போன்றவர்” என்று மோடிதான் கூறினார். ஆனால், அந்த மனோகர் லால் கட்டார் 4 மாதங்களுக்கு முன்புவரை அரியானாவின் முதலமைச்சர். ஆனால், இன்று எங்கே? சத்தீஸ்கரில் பாஜகவின் ஆட்சியை அமரவைக்க பாடுபட்ட டாக்டர் ராமன் சிங் தற்போது எங்கே? இதர மாநிலத்தில் அவர் களின் கட்சித் தலைவர்களே அவர்களுக்கு செல்லாக் காசுகள் தான். மோடிக்கு குஜராத் நண்பர்கள் மட்டுமே முக்கியத்துவம்.
இன்று பாஜக செயல்தலைவராக உள்ள ஜே.பி.நட்டா விற்கே அங்கே மதிப்பில்லை. அவரை செயல் தலைவர் என்ற நிலையில் தான் வைத்துள்ளார்களே தவிர, தலைவர் என்று இன்றுவரை குறிப்பிடவில்லை. எப்படி காங்கிரசில் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சிற்கு அத்தனை தலைவர்களும் மரியாதை கொடுக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கட்டளைக்கு கடைசி திமுக தொண்டன் கூட உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். அதுபோல் ஜே.பி.நட்டா வின் பேச்சிற்கு ஒரு பாஜக தலைவராவது அடிபணி கின்றனரா? சென்னை சென்றால் அங்கே உள்ளூர் தலைவருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, ஜே.பி.நட்டாவை ஏதோ விருந்துக்கு வந்தவர் போன்றுதான் நடத்துகின்றனர்.
இதுதான் அனைத்து மாநில பாஜக நிலை. ஆகவே, இவர்கள் தங்களைவிடுத்து அனைத்துத் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையை முடித்துவிடுவார்கள்
பி.ஜே.பி. வெற்றி பெற்றால்…?
இந்தத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இன்னும் 2 மாதங்களில் உத்தரப்பிரதேச முதலமைச்சரை முகவரி இல்லாமல் மாற்றிவிடுவார்கள். காரணம் இவர் களுக்கு வட மாநிலங்களில் சாமியார் ஆதித்யநாத் வளர்கிறாரோ என்ற ஓர் அச்சம் உள்ளூர ஓடுகிறது.
கோரக்பூரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினரான சாமியார் ஆதித்யநாத், 2017 இல் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார். 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் அவரது தலைமையில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த படியாக, காவி உடை அணிந்த அரசியல்வாதி, நாட்டின் மிக முக்கியமான இந்துத்துவா முகமாக உள்ளார்.
பா.ஜ.க.வில் 75 வயதைக் கடந்த பிறகும் எந்தத் தலைவரும் தீவிர அரசியலில் ஈடுபடமாட்டார்கள். “இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமராக வருவார்கள்” என்று இவர்கள் கேட்கிறார்கள், நான் பாஜகவிடம் கேட்கிறேன், ‘‘உங்களுக்கு யார் பிரதமர் என்று?”
– இவ்வாறு டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேசினார்.
No comments:
Post a Comment