அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
சண்டிகர், மே 29 ‘மக்க ளவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்து விட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ‘ஆரூடம்’ கூறி வரும் நிலையில், ‘மக்களவைத் தோ்தலில் அக் கட்சியின் வெற்றி 200 இடங்களைக்கூட கடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்தார்.
‘அதே நேரம், கடந்த தோ்தலுடன் ஒப்பி டும்போது காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு மக்களவைத் தோ்தலில் மிகுந்த சாதகமான சூழல் உருவாகியுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் நேற்று (28.5.2024) நடந்த தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இக்கருத்தை தெரி வித்தார்.
அவா் மேலும் பேசியதாவது:
மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று கூறிவருவது உளறல், முட்டாள்தனமானது. தோ்தலில் அவா்களின் வெற்றி வாய்ப்புக்கான இடங்கள் குறைந்து வரும் நிலையில், ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையே மக்களின் ஆதரவு காட்டு கிறது.
குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா மாநிலங்களில் பாஜக கட்சிக்கு அடித்தளமே இல்லை.கருநாடகத்தில் அக் கட்சி வலுவாக இல்லை. மகாராட்டிரத்தில் பல வீனமாக உள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் அக் கட்சி கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. பின்னா் எப்படி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியும்? மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதும், அக் கட்சியின் தலைவா் பதவியை மல்லிகார்ஜுன கார்கே இழந்துவிடுவார் என்று ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித்ஷா விமா்சித்துள்ளார். அரசியலில் பதவியை எதிர்பார்த்து நான் சேரவில்லை.
மக்களுக்குச் சேவையாற்றவே அரசி யலுக்கு வந்தேன். குழந்தைப் பருவம் முதல், குறிப்பாக பிரதமா் மோடியின் வயதுக்கு இணையான ஆண்டுகள் அரசியலில் இணைந்து சேவையாற்றி வருகிறேன்.எனவே, அமித்ஷாதான் வரும் ஜூன் 4 ஆம் (வாக்கு எண்ணிக்கை நாள்) தேதிக்குப் பிறகு தனது சொந்தப் பதவி குறித்து சிந்திக்க வேண்டும்.
காங்கிரஸ் தோ்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அடையாளத்தைத் தாங்கி இருப்பதாக பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். எங்களின் தோ்தல் அறிக்கையை பிரதமா் மோடி படிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அவா் விரும்பினால், காங்கிரஸ் கட்சி தலைவா் ஒருவரை அனுப்பி எங்களுடைய தோ்தல் அறிக்கை குறித்து அவருக்கு விளக்கிக் கூற தயாராக உள்ளோம்.
காங்கிரஸின் தோ்தல் அறிக்கை இளைஞா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், நலிவடைந்த சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கானது.
‘இந்தியா’ கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தவுடன் தோ்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளபடி, ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணி யிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இளை ஞா்களிடையே தற்போது அதிகரித்துக் காணப்படும் போதைப் பழக்கத்தைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவா்.
No comments:
Post a Comment