எச்சரிக்கை! அரசுப் பேருந்து மேற்கூரையில் ஏறி ரகளை கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

எச்சரிக்கை! அரசுப் பேருந்து மேற்கூரையில் ஏறி ரகளை கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு

featured image

சென்னை, மே.9- சென்னையில் அரசுப் பேருந்து மேற்கூரை யில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை விவே கானந்தர் இல்லத்தில் இருந்து திரு வி.க.நகர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் (7.5.2024) சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துசில் விவேகானந்தர் இல்லத்தில் 10க்கும் மேற் பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏறினார்கள். பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் திடீரென பேருந்து களின் படிகளில் தொங்கியவாறு பயணிக்க தொடங்கினர்.

இதில்,சிலர் பேருந்தின் மேற்கூரையில் ஏறி பாட் டுப்பாடியவாறு ஆட்டம் போட்டனர். கல்லூரி மாணவர்களின் இந்த நடவடிக்கை பேருந்தில் பயணித்த சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாணவர்கள் சென்டிரல் அருகே வந்த போது பேருந்தை திடீரென நிறுத்தச் சொல்லி மேற்கூரையில் இருந்து கீழே குதித்தனர். மாணவர்கள் பேருந்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட காட்சிப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு

இந்த நிலையில், சென்னை திருவல்லிக் கேணிகாவல்துறையினர் இந்த நிகழ்வு தொடர்பாக -வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது – அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு செய்தல் உட்பட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து, அவர்களை விரைந்து அடையா ளம் கண்டு நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காற்றாலை மூலம்
2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
தமிழ்நாடு மின்வாரியம் தகவல்

சென்னை, மே 9 தமிழ்நாட்டில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்த காலகட்டத்தில் காற்றாலையில் இருந்து நாள்தோறும் 2,500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், அன்றாடம் மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2-ஆம் தேதி அன்றாடம் மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால், காற்றாலைகளில் இருந்து நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் 10,600 மெகாவாட் திறனில் காற்றாலைகளை நிறுவி உள்ளன. சீசன் காலத்தில் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கும். அனல் மின்சாரம் கொள்முதல் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும்.

No comments:

Post a Comment