மகளிர் சந்திப்பு (16) பெண்களை உயர்வாக மதிக்கும் பெரியாரிஸ்டுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

மகளிர் சந்திப்பு (16) பெண்களை உயர்வாக மதிக்கும் பெரியாரிஸ்டுகள்!

featured image

வி.சி.வில்வம்

வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் வள்ளியம்மை.‌ சொந்த ஊர் உரத்தநாடு ஒன்றியம் ஆம்லாபட்டு கிராமம். இலுப்பத்தோப்பு பகுதியில் இருந்த தொடக் கப் பள்ளியில் பயின்றேன். எனது ஆசிரியர் பெயர் மாரியப்பன்!
என்ன புதுமையாக இருக்கிறது? தங்கள் அறிமுகத் தில், தொடக்கப்பள்ளி ஆசிரியரை முதன்மையாகக் கூறுகிறீர்களே?
ஆமாம்! என் வாழ்வின் தொடக்கமும், இன்று வரையிலான தொடர்ச்சியும் ஆசிரி யர் மாரியப்பன் அவர்கள் தான்! நான் படித் தது என்னவோ கிராமம் என்றாலும், பொது அறிவுச் செய்திகளை ஆசிரியர் மாரியப்பன் அவர்கள் அதிகம் சொல்லிக் கொடுப்பார். அதில் அறிவியல், பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, பெரியார் என அத்தனையும் அடங்கும்! அவற்றை ஒரு கதை போல சொல்லிக் கொடுப்பார்!

அப்போது தங்களுக்கு என்ன வயது இருக்கும்?
ஏழெட்டு வயது இருக்கும்! மூன்று அல் லது நான்காவது படித்திருப்பேன். இயல்பா கவே துருதுருவென கேள்விகள் கேட்கும் சுபாவம் எனக்கு! இதில் பகுத்தறிவு எண் ணெய் ஊற்றினால் கேட்கவும் வேண்டுமா! அதேசமயம் எனது பெற்றோர் தீவிர பொது வுடமை இயக்கத்தில் இருந்தார்கள். ஆம்லா பட்டு, கரம்பயம் பகுதி முழுக்கவே கம்யூ னிஸ்ட் தோழர்கள் நிறைய இருப்பார்கள்.
இந்நிலையில் அப்போதே நான் பெரி யார், பெரியார் எனப் பேசத் தொடங்கி இருந்தேன். பெரியார் குறித்தும், முற்போக்குக் கருத்துகள் குறித்தும் கட்டுரை எழுதச் சொல் வார் ஆசிரியர் மாரியப்பன்! ஒருமுறை கண் ணுகுடி கிராமத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்குப் பெரியார் வந்திருந்தார். என்னை உட்பட சில மாணவர்களை, அந்நிகழ்விற்கு அழைத்துச் சென்றார் ஆசிரியர்!

பொதுவாக அறிவு குறித்தும், அறிவியல் குறித்தும் பேசினாலே எதிர்ப்பு வருமே?
ஆமாம்! எங்கள் ஆசிரியர் பாடம் தவிர, பொது செய்திகள் நிறைய சொல்லிக் கொடுப் பார்‌. பகுத்தறிவு கருத்துகளையும், அறிவியல் ரீதியாகச் சொல்லிக் கொடுப்பார். இதனால் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் நாளடைவில் மாணவர்களின் திறனும், பள்ளி யின் தரமும் உயர்ந்ததை எண்ணி அமைதி யானார்கள். தவிர ஆசிரியரின் அணுகுமுறை, ஆலோசனைகள், மனிதாபிமானம் போன்றவற் றால், கிராமத்தின் மதிப்பையும் பெற்றார். பின்னா ளில் ஆம்லாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்!

பெற்றோர் குறித்தும், உடன் பிறந்தோர் குறித்தும் கூறுங்கள்?
என்னுடன் பிறந்தோர் ஒரு தங்கை, ஒரு தம்பி. எங்கள் மூவரையும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே எங்கள் அம்மா நன்றாகப் படிக்க வைத்தார்.‌ “நான்தான் விவசாய வேலையில் வெயிலில் வாடுகிறேன், பிள்ளைகளாவது நிழலில் இருக்கட்டும்”, என எங்கள் அம்மா அடிக்கடி கூறுவார்.‌ ஆடு வளர்த்து, அதை விற்றுக் கல்விக் கட்டணம் செலுத்துவார் அம்மா! மெழுகுவர்த்தி போல தன்னையே உருக்கி, எங்களை ஆளாக்கியவர்! “பெண் பிள்ளைகளை ஏன் இவ்வளவு படிக்க வைக் கிறாய்?”, எனக் கிராமமே கேட்டது அம்மா விடம்!

தங்களின் கல்வி நிலை குறித்துக் கூறுங்கள்?
50 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் கிராமத்தில் இருந்து, முதுகலை வரலாறு முடித்தேன். படித்து முடித்த சில ஆண்டுக ளிலே சோழன் போக்குவரத்துக் கழகத்தில் (CRC), பட்டுக்கோட்டையில் பணியில் சேர்ந் தேன். அங்கு 3 ஆண்டுகள் வேலை பார்த் தேன். ஒரு பெண் வேலைக்குப் போனால், அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம்! அம்மா, அப்பா, தங்கை, தம்பி என மொத்தக் குடும்பத்திற்கும் என் ஊதியம் பெருமளவு பயன்பட்டது! எதையும் எதிர்கொள்ளும் திற னோடும், துணிச்சலோடும் வளர்க்கப்பட் டேன். இன்னும் சொன்னால் பெரியார் சொன்னதைப் போல, ஆசிரியர் மாரியப்பன் அவர்கள் என்னை ஒரு ஆண் பிள்ளையாக உருவாக்கி இருந்தார்!

உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது? அதுகுறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்?
எனது தனி வளர்ச்சிக்கு, கல்வி வளர்ச் சிக்கு, ஆசிரியர் மாரியப்பன் அவர்கள் எவ்வ ளவு உதவினார்களோ, அதேபோல எனது குடும்ப வாழ்வையும் அவர்தான் வடிவமைத் தார்! எனது திருமணம் 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. இணையர் பெயர் தண்டாயுத பாணி. அவருக்கு முன்பே திருமணம் முடிந்து, முதல் மனைவி இறந்துவிட்டார். என்னை இரண் டாவது திருமணத்திற்குக் கேட்டார்கள். ஆனால் என் பெற்றோர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஆசிரியர் மாரியப்பன் அவர்கள் என்னிடம் பேசினார், “கணவரை இழந்த பெண் எப்படி விதவை என்கிற பெயரோடு வாழ்கிறாரோ, அது போலவே மனை வியை இழந்த ஆணும் அதே துன்பத்தோடு வாழ்பவர்தான்! எனவே தண்டாயுத பாணி அவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண் டும்”, என ஆசிரியர் கூறினார். அதன் பிறகே திருமணம் நடந்தது.

தொடக்கப்பள்ளி ஆசிரியரா, இவ்வளவு உதவிகள் செய்தார்?
ஆமாம்! குறிப்பாக அவர் தன்னைத் திராவிடர் கழகம் என்றே கூறிக் கொள்வார்! எனது திருமணம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. அது ஓர் பதிவுத் திருமணம். முழு ஏற்பாட்டையும் அந்த ஆசிரியர்தான் ஏற்பாடு செய்தார். இதில் முக்கியமான விட யம் என்னவென்றால், இணையர் தண்டாயுத பாணி அவர்களுக்கு முதல் திருமணத்தின் மூலம் 3 குழந்தைகள் இருந்தனர். 9 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண்கள், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. தண்டாயுத பாணி அவர்கள் சுகாதார ஆய்வாளராக (Health Inspector)இருந்தார். அவரின் சொந்த ஊர் கண்ணுகுடி. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் கழித்து தஞ்சாவூர் வந்து விட்டோம்!

உங்கள் பணி வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்?
தஞ்சாவூர் வந்து சோழன் போக்குவரத்துக் கழகத்தில் இணைந்தேன். ஓய்வு பெறும் வரை, 30 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்தேன். நான் திராவிடர் கழகத்தில் இருக் கிறேன் என்பதற்காக, பார்ப்பன அதிகாரிகள் மிகுந்த சிரமங்கள் கொடுத்தார்கள். கடுமை யான வேலைகளையும் கொடுத்தார்கள். சங் கடமாக இருந்தாலும், அவற்றையும் சிறப் பாகச் செய்து, பார்ப்பன அதிகாரிகளுக்குப் பாடம் புகட்டினேன்! 2012 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்!

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா?
இணையருக்கு முதல் திருமணத்தில் 3 குழந்தைகள் இருந்தனர். பிறகு எங்களுக்கு 2 குழந்தைகள். முதல் 3 பேரில் இருவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்கள். இணையரும் 2021 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். எங்கள் குடும்பத்தில் 3 சுயமரியா தைத் திருமணங்களைத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், ஒரு திருமணத்தை அய்யா நல்லகண்ணு அவர்களும் நடத்தி வைத்தார்கள்.
என் இணையர் என்னை அம்மா என்று தான் அழைப்பார். நான் அய்யா என்றே அழைப்பேன். எங்கு சென்றாலும் சேர்ந்தே போவோம். மூன்று குழந்தைகளுடன் இருந்த இணையருக்கு நான் துணையாக இருந்தேன். என் வாழ்வின் உயரத்திற்கும் அவரே முக்கி யக் காரணமாக இருந்தார். ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்ந்தோம்! எனது தாயாரையும் கிராமத்தில் இருந்து அழைத்து வந்து, என்னு டன் 20 ஆண்டுகள் வைத்திருந்தேன். எங்க ளுக்காக அவர் அனுபவித்த துன்பத்திற்கு, ஒரு பெண் குழந்தையாய் நான் அரவணைத் துப் பாதுகாத்துக் கொண்டேன். காரணம் இரண்டுதான்! ஒன்று எனது பகுத்தறிவுச் சிந்தனை, மற்றொன்று எனது பொருளியல்!

இயக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்த அனுபவங்கள் எப்படி?
நாங்கள் சிறந்த இணையர்களாக வாழ்ந் தோம். எனது இணையர் மிகுந்த மரியாதை யோடு பேசுவார்; நடத்துவார். பொதுவாகவே பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதில் திராவிடர் கழகத் தோழர்கள் மிகச் சிறப்பானவர்கள்! எங்கள் வாழ்க்கையைப் பார்த்து, “திராவிடர் கழகத் தோழர்களுக்கே பெண் கொடுக்க வேண்டும், நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்”, எனக் கிராமத்தில் பேசிக் கொண்டார்கள்!
திருமணம் முடிந்த ஓரிரு நாளிலே மதுரையில் ஒரு மாநாட்டிற்குச் சென்றோம். உரத்தநாடு பகுதி தோழர்கள் எல்லாம் புளி சாதம் கட்டி வந்தார்கள். அங்கேயே உண்டு, உறங்கி வந்தோம். முதல் மற்றும் புது அனுப வம் அது! அதேபோல தமிழ்நாட்டில் நடக் கும் முக்கிய நிகழ்வுகளுக்கு இருவருமே விடுமுறை எடுத்துச் செல்வோம். குறிப்பாக குற்றாலத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் மூன்று, நான்கு ஆண்டுகள் தவிர, அனைத் திலும் பங்கேற்றுள்ளோம். யார் வருகிறார்களோ, இலலையோ தண்டாயுதபாணி – வள்ளியம்மை இருவரையும் பார்க்கலாம் எனக் குன்னூர் டாக்டர் கவுதமன் கூறுவார். மாணவர்களுக்கு உணவு பரிமாறுவது எனக் குப் பிடித்தமான செயல்!

வேறெதுவும் கூற விரும்புகிறீர்களா?
எனது சித்தப்பா ஒருவரின் திருமணத்திற் குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆம்லா பட்டு கிராமத்திற்கு வந்திருந்தார். அதை என்னால் மறக்க முடியாது. அதேபோல 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, எனது கதை யைக் கேட்க வந்திருப்பதும் மகிழ்ச்சி! சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்! அதேநேரம் எங்கு பார்த்தாலும் திராவிட மாடல் என்கிற வார்த்தையை இப்போது கேட்க முடிகிறது! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப் பட்டோமே?
ஆமாம்! எனது இணையர் இறந்த பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அதுசமயம் எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இன்று வரை சிகிச்சை எடுத்து வருகிறேன்! “போனஸ்” வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது தொடக்க கால வாழ்வு, குடும்ப வாழ்வு, பணி வாழ்வு என எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் அடித்து, இப் போது புற்றுநோய் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனினும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்; நிறைவோடும், பொருள்படவும் வாழ்ந்திருக்கிறேன்! இப்போது எனக்கு 70 வயதாகிறது!

ஆசிரியர் குறித்துத் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
வீட்டில் இயக்க நூல்கள் நிறைய உள்ளன! தினமும் விடுதலை வாயிலாக ஆசிரியரைப் படிக்கிறேன். ஆசிரியர் போல தன்னலமற்ற பொது தொண்டரை வேறெங்கும் பார்க்க முடியாது. பெரியாரைப் பார்த்துப் பழகாதவர் களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு! இயக்கத் தைக் கட்டிக் காப்பாற்றியவர் நம் ஆசிரியர் அவர்கள்! உடல்நிலையைப் பொருட்படுத்தா மல் ஓடி, ஓடி உழைக்கும் தலைவர் யாருக்குக் கிடைப்பார்! அதுவும் நம் தலைவர் மீது கத்தி படாத இடம் இல்லை! அத்தனை அறுவைச் சிகிச்சைகள்!

எனது இணையர் இறந்த பின்னர் ஆசிரி யர் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். கால அவகாசம் எடுத்துக் கொண்டு, வெளியே வந்துவிட வேண்டும், முடங்கிவிடக் கூடாது என்றார்கள். அதன்படியே கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறேன். அண்மையில் கூட தஞ்சாவூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேசினார்கள்.‌ அதில் கலந்து கொண்டேன். ஆசிரியர் அய்யாவின் உழைப்பிற்கு ஈடுஇணை கிடையாது. இந்த இயக் கத்தில் அனைவரும் தத்தம் உழைப்பை நல்கி வருகிறார்கள். மேலும், மேலும் நம் இயக்கம் சிறந்தோங்க வேண்டும்! என்னால் முடிந்த வரை நானும் இயங்குவேன்”, என்றார் நெகிழ்வாக!

No comments:

Post a Comment