திருநங்கை நிவேதா: பெற்றோர் கைவிட்டும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நெகிழ்ச்சிக் கதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

திருநங்கை நிவேதா: பெற்றோர் கைவிட்டும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நெகிழ்ச்சிக் கதை

featured image

என்னை திருநங்கையாக உணர்ந்த தருணத்தில் நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். செய்வதறியாது சாலையில் சுற்றிக் கொண்டிருந்த நான் இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் திருநங்கை நிவேதா.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பன்னி ரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய திருநங்கை நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார்.
எனக்குச் சொந்த ஊர் சென்னையில் உள்ள பள்ளிக் கரணை. நான் 9-ஆம் வகுப்பு வரை பெற்றோருடன் தான் வசித்து வந்தேன். 9-ஆம் வகுப்பு படிக்கும் போது தான் என் உடலில் மாற்றங்களை உணரத்தொடங்கினேன். ஆனால், என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினாலும் என் பள்ளியில் சக மாணவர்கள் என்னைத் தொடர்ந்து கிண்டல்கள் செய்து வந்ததாலும் நான் பெரும் விரக்தி அடைந்தேன்” என்கிறார்.

அதன்பிறகு அவரது பெற்றோர் வீட்டிலிருந்து அவரை வெளியேற்றியதாகக் கூறுகிறார் நிவேதா. “முதலில் எனக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. கையில் காசு இல்லாததால் பசியோடு சாலையில் சுற்றித் திரிந்தேன். அப்போது தான் அனுசிறீயை சந்தித்தேன். அதுதான் வாழ்வின் திருப்புமுனை,” என்கிறார் நிவேதா.
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார் அனுசிறீ. ஒரு விழாவில் நிவேதாவை பார்த்த அவர், குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அப்போது தான் வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டதாக கூறியிருக்கிறார் நிவேதா. இனி என்ன செய்யப்போகிறாய், என்று கேட்டதும் ‘எனக்குப் படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது, என்னை படிக்க வைப்பீர்களா?’ என அவர் கேட்க, அப்போது தான் நிவேதாவுக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம் இருக்கிறது என்று புரிந்து கொண்டார் அனுசிறீ.

என்னால் பள்ளியில் படிக்க முடியுமா?
தனது கதையை மேலும் தொடர்ந்த நிவேதா, “நான் அனுசிறீ அக்காவிடம் ‘எனக்குப் படிக்க வேண்டும்’ என்று சொன்னவுடன், நிச்சயமாக அதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்று உறுதியளித்தார். அதன்பிறகு எனக்குத் திருநங்கைகள் குறித்தும், அவர்களைப் பற்றிய சமூக புரிதல் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வை ஏற்படுத் தினார்,” என்றார்.
“அதுவரை நானும் திருநங்கைகள் என்றாலே யாசகம் செய்ய வேண்டும் அல்லது பாலியல் தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று தான் நினைத்து வருந்தினேன். அனுசிறீயை பார்த்த பிறகுதான் எனக்கு வாழ்வின் மீது சிறு நம்பிக்கை கீற்று பிறந்தது,” என்றார் நிவேதா.
நிவேதா குறித்து நம்மிடம் பேசிய அனுசிறீ, தன்னைப் பார்த்ததும் நிவேதா தன்னை படிக்க வைக்க முடியுமா என்று கேட்டதாகச் சொல்கிறார். படிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் தெரிந்ததும் நிச்சயம் அவரை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகச் சொல்கிறார்.

அதன் பிறகு அவளுக்காகப் பள்ளியை தேர்வு செய்வது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். ஏனென்றால் ஏற்கெனவே அவளுக்கு பள்ளியில் கசப்பான அனுபவங்கள் இருந்திருக்கிறது. அதனால் இருபாலர் பள்ளியைத் தவிர்த்துப் பெண்கள் பள்ளியைத் தேடத் துவங்கினோம். ஆனால் பல பள்ளிகளில் எங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் திரு நங்கைகள் பற்றிய புரிதல் பெரும்பாலோனோருக்கு இல்லை,” என்கிறார் அனுசிறீ.
“திருநங்கைகளைப் பள்ளியில் சேர்த்தால் மற்ற மாண வர்களுக்குப் பிரச்சினை வரும் என்றே பெரும்பாலானோர் நினைத்தார்கள். அதனாலேயே காலங்கள் கடந்து கொண்டே போனது. அதன் பிறகு இறுதியாக திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் விண்ணப்பத்தை வாங்கினோம். ஆனால் முதலில் அவர்களுமே தயங் கினார்கள் என்கிறார் அனுசிறீ.

மாணவர் தலைவியான நிவேதா
அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பல்வேறு அலுவலகங் களில் அனுமதி வாங்கச் சென்ற பிறகே, இறுதியாக சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட உயர்கல்வி அலுவலர் பிரியா அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதுபோன்று வேறு திருநங்கைகள் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் என்னுடைய அலுவலகம் வாருங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகே நிவேதாவுக்கு பள்ளியில் இடம் (அட்மிஷன்)கிடைத்திருக்கிறது.
“பள்ளியில் இடம் கிடைத்த பிறகு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பள்ளி நிர்வாகமும் நிவேதாவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பள்ளியில் அவளுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்,” என்கிறார் அனுசிறீ. தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார் நிவேதா.

கடந்த 2 வருடங்களாக அப்பள்ளி மாணவர்கள் அனை வரும் வாக்களித்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் தலைவியாக நிவேதாவைத் தேர்ந்தெடுத் திருக்கின்றனர். “இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. டியூஷன் எங்கும் செல்லாமல், தொடர்ந்து 3 வருடங்கள் இடைநிற்காமல் படித்து, தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை என்ற சாதனையை நிவேதா படைத்திருப்பது எங்கள் திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றியாகப் பார்க் கிறேன்,” என்கிறார் அனுசிறீ.

மருத்துவர் ஆவதே கனவு
நிவேதாவின் இந்த வெற்றியில் அவருடைய பாட்டிக்கும் பங்கு இருக்கிறது. 15 வயதில் திக்கற்று இருந்த நிவேதாவை திருநங்கை சாம்பவி தன்னுடைய பேத்தியாக தத்தெடுத்து இருக்கிறார். “என்னுடைய பேத்தியாக நிவேதாவை தத்தெடுத்து என் வீட்டிலேயே அவளை தங்க வைத்தேன். 10க்குப் 10 அளவு கொண்ட அறையில் என்னோடு சேர்த்து 7 திருநங்கைகள் வசித்து வருகிறார்கள்,” என்கிறார் அவர்.

“அந்த அறையில் தான் நாங்கள் அனைவரும் தூங்க வேண்டும். பல இன்னல்களுக்கு மத்தியில், பல இரவுகள் எல்லாம் தூங்காமல் படித்திருக்கிறார் நிவேதா. நாங்கள் அனைவரும் சேர்ந்து பட்ட துன்பத்திற்கும், உழைப்பிற்கும் இன்று அவளுடைய தேர்ச்சி மூலமாக பலன் கிடைத் திருக்கிறது,” என்று கூறுகிறார் சாம்பவி.
மாணவி நிவேதாவிற்கு மருத்துவராகும் கனவு இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மருத்துவராகி திருநங்கைகளுக்கு தரமான மருத்துவ சேவைகள் தர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார் நிவேதா.

No comments:

Post a Comment