உடுமலைப் பேட்டையில் வாணவேடிக்கைகளுடன் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

உடுமலைப் பேட்டையில் வாணவேடிக்கைகளுடன் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு!

ஆசிரியருக்கு உடுமலைப்பேட்டைக்கு வருவது என்றால் கூடுதல் உற்சாகமாம்! உடுமலைப்பேட்டை கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் பகிர்ந்து கொண்ட தகவல் இது. அங்கு நிலவிய சூழலைக் கண்டால், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் போலத் தான் இருந்தது!
தோழர்கள், உரமேற்றும் கொள்கை முழக்கங்கள் மூலமும், ”தோழா முன்னேறு! வீரமணியோடு!” என்ற நாடி நரம்புகளை தெறிக்கவிடும் பாடல் ஒளிபரப்பு மூலமும் ஆசிரியரை வரவேற்றிருக்கிறார்கள். உடுமலைப்பேட்டை தோழர்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று, பூஞ்சிதறல்களால் இருண்ட வானத்தை வெடித்துச் சிதறும் மத்தாப்புகளால் ஒளிரச்செய்து, எங்கள் தன்மானத் தலைவரே! இனமானம் காக்க வந்த தலைவரே! உடுமலைப்பேட்டைக்கு வருக! வருக! என்று அழைக்கும் வண்ணம் பரபரப்பான வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டனர்.

திண்டுக்கல்லில் மக்கள் பெருந்திரளாய் திரண்டிருந்து ஆசிரியரின் உற்சாகத்தை பெருக்கியிருந்தனர். அதனையும் புறம்கண்டுவிட்டது உடுமலைப்பேட்டையில் திரண்டிருந்த மக்கள் திரள்! ஏறக்குறைய பழனி, தாராபுரம் சாலைகளை இணைக்கும் கல்வி வள்ளல் காமராஜர் சிலையிருந்தே மக்கள் திரள் தொடங்கிவிடுகிறது.
மேடைக்கு முன்புறம் நாற்காலிகள் மக்கள் அமர்ந்து நிறைந்திருந்தது பெரிதல்ல, ஒருபக்கம் தாஜ் திரையரங்கம் ஒட்டி செல்லும் சாலையில் மேடையின் பக்கவாட்டிலிருந்து நெடுக நின்ற மக்கள், ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று பொறுமையுடன் நிகழ்ச்சி முடியும் வரையிலும் காத்திருந்து கேட்டனர். இன்னொரு பக்கம் மேடையின் இரண்டு புறமும் அடைத்துக்கொண்டு நின்றிருந்த மக்களும் ஆசிரியரின் உரையைச் செவிமடுத்தனர். சொல்லப்போனால் மேடையே நிறைந்துதான் இருந்தது!

இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்கிற வகையில் ஆசிரியரே, “9 மணி ஆகிவிட்டதே கூட்டம் இருக்காது என்று எண்ணியிருந்தேன் (அவர் பேசத் தொடங்கும் போது மணி 9:20). ஆனால், உடுமலைப்பேட்டை மக்கள், தோழர்கள் வழக்கம் போல் எனக்கு உற்சாகமான வரவேற்பை அளித் திருக்கிறீர்கள்” என்றே தனது உரையைத் தொடங்கினார். உள்ளூர் கழகத் தோழர்களும் தங்கள் தலைவரின் மகிழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருந்ததை எண்ணி யெண்ணி இறும்பூது எய்தினர். தலைவரும், தோழர்களும் ஒருங்கே இப்படி ஒருவருக்கொருவர், மகிழ்வித்தே கைம்மாறு கருதாமல் மக்கள் தொண்டு செய்வது இந்த இயக்கத்தில் தான் சாத்தியம்! இந்த உற்சாகம் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்!

No comments:

Post a Comment