பெரியார் சிலை மீது கை வைத்துப் பார்... சீறிய சிங்கம்! நம் ராக்கு தங்கம்!‌! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

பெரியார் சிலை மீது கை வைத்துப் பார்... சீறிய சிங்கம்! நம் ராக்கு தங்கம்!‌!

featured image

வி.சி.வில்வம்

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து, அய்யா வா.நேரு அவர்களுடன் அவனியாபுரம் நோக்கி செல்கிறோம்!
கொள்கைத் தங்கம்!
பேருந்துகள் செல்லும் பெரிய சாலையில் போகிறோம். ஒரு திருப்பத்தில் அது கார் செல்லும் சாலையாக சுருங்குகிறது. திடீரென இரு சக்கர வாகனம் செல்லும் சாலையாக நீடிக்கிறது. கடைசியில் நடந்து செல்லும் ஒத்தையடிப் பாதையாக மாறுகிறது!

கொள்கைத் தங்கம் நம் ராக்கு தங்கத்தைப் பார்க்கத் தான் இந்தப் பயணம்! விடுதலை ஞாயிறு மலரில் நம் இயக்கப் பெண்களின் வரலாறுகள் பேட்டியாக வருவதைப் பார்த்திருப்பீர்கள்! அந்த வகையில் இது 10ஆவது மகளிர்!
மகளிர் பார்வையில் ஆசிரியர்!
இந்த நேரத்தில் முக்கியமான செய்தி ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும்! ஆண்களோடு நாம் பழகுகிறோம், செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் மகளிரோடு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அதுவும் இயக்கத்திற்கும், அவர்களுக்குமான தொடர்புகள் குறித்து அவ்வளவு நேரம் பேசும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொண்டதில்லை!

இந்த இரண்டு மாத கால தொடர் நேர்காணலில் ஒரு விசயம் மிக, மிக அதிகம் வியப்பூட்டுகிறது. ஆம்! ஆசிரியர் குறித்து அவர்கள் கூறும் செய்திகள் தான் அவை! ஆண் தோழர்கள் கூட சில நேரங்களில் அதிகபட்சமாக, மிகையாகப் பேசுவார்கள். ஆனால் மகளிர் தோழர்கள் அதிகப் பெரும்பாலும் இயல்பானவர்கள்!
அவர்களின் வார்த்தைகள் நம்மை நெகிழ்வூட்டுகின்றன! எங்கள் தலைவர் என்கிறார்கள், எங்கள் அண்ணன் என்கி றார்கள், தந்தை போன்றவர் என்கிறார்கள், அவர்தான் ஆறுதல் என்கிறார்கள், அவர் தான் எங்கள் நம்பிக்கை என்கிறார்கள், நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு இந்தக் கொள்கையும், தலைவரும் தான் காரணம் என்கிறார் ஒருவர். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

பெரியார் தந்த தலைவர்!
இப்படியான சூழலில் தான் மதுரை ராக்கு தங்கம் அவர்களைச் சந்தித்தோம். “என் தலைவர் ஆசிரியர் வீரமணி, பெரியார் தந்த தலைவர்”, எனக் கையை உயர்த்தி, உயர்த்தி வேகமாகப் பேசுகிறார். விட்டால் நம்மிடமே சண்டைக்கு வந்து விடுவார் போல! பேட்டி முடிந்ததும், “நீங்கள் தான் நம் இயக்கத்தின் பெண் ரவுடி” என வேடிக்கையாய் கூற ஆசைப்பட்டேன். அவ்வளவு மகிழ்ச்சி நமக்கு! அந்தளவு துணிச்சலும், போராட்டக் குணமும் நிறைந்தவராக இருக்கிறார் அவர்!

பெரியார் மீது கை வைத்துப் பார்!
அப்படியென்ன போராட்டக் குணம் என நீங்கள் கேட்கலாம். இதோ சொல்கிறேன்.
மதுரை அவனியாபுரத்தில், பெரியார் சிலை வைக்க முயற்சி செய்கிறார்கள். கடும் போராட்டம், பண நெருக்கடி.‌ இருந்தாலும் ஏற்பாடு செய்துவிட்டார்கள். சிலை அமைக்கும் பணியின் போது மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற பொருட்கள் அங்கு இருக்கும். அதைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு ராக்கு தங்கம் அங்கேயே இருப்பாராம்.
ஒருநாள் மதிய வேளையில், “யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?”, எனக் காவல்துறையைச் சார்ந்த ஒருவர் மிரட்டலாய் கேட்டிருக்கிறார். ‘பெரியா ருக்குச் சிலை எழுப்புகிறோம் என ராக்கு தங்கம் பதில் அளித்திருக்கிறார். அதெல்லாம் இங்கே கட்டக் கூடாது, காலால் உதைத்து இடித்துவிடுவேன் எனக் காவல்துறை நபர் கூறியிருக்கிறார். அவ்வளவு தான் பொறுமை இழந்த ராக்கு தங்கம், அங்கிருந்த அரிவாளை எடுத்து, முடிந்தால் இடித்துப் பார் என அதிர வைத்திருக்கிறார். சுற்றியிருந்த பொது மக்களும், தோழர்களும் வருகை தந்து அமைதிப்படுத்தி இருக்கிறார்கள்!

போன் செய்த இன்ஸ்பெக்டர்!
பெரியார் பிறந்த நாள், ஆசிரியர் பிறந்த நாள் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் சுவரொட்டி ஒட்டுவது யார் தெரியுமா? நம்ம ராக்கு தங்கம் தான்! நள்ளிரவு ஆனாலும் முடிக்காமல் வீட்டுக்கு வரமாட்டாராம்! “ஏம்மா யாரிடமாவது பணம் கொடுத்து ஒட்டச் சொல்லலாமே?”, எனச் சாலையில் போவோர், வருவோர் கேட்பார்களாம். என் தலைவர்களுக்கு நான்தான் ஒட்டுவேன் எனச் சிரித்துபடியே கூறிவிட்டு, அடுத்த இடத்திற்குக் கிளம்பிவிடுவாராம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவனியாபுரம் “இன்ஸ்பெக்டர்” பேசினாராம். “நான்தான் ராக்கு தங்கம் பேசுகிறேன், என்ன விடயம் சொல் லுங்க?” எனக் கேட்டிருக்கிறார். தேர்தல் அறிவித்துவிட்டார்கள், உங்கள் கழகக் கொடிகளை எல்லாம் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள் என்றாராம். சரி, சரி பார்க்கிறேன் என்றாராம் இவர்! என்ன ஒரு ஆளுமை! என்ன ஒரு துணிச்சல் பாருங்கள்! நான் செல்லமாக ‘ரவுடி’ என நினைத்ததில் தவறேதும் இல்லையே!

பெரியார், ஆசிரியர் படம் போட்ட பனியன்!
வீட்டிற்குச் சென்ற போது கூட அவரின் உடை அமைப்பு எப்படி இருந்தது தெரியுமா? சேலை கட்டி, அதன் மேல் கருப்புப் பனியன் அணிந்திருந்தார். அதில் “சமூகநீதி நாள் செப்டம்பர் 17” என இருந்தது. என்னம்மா இப்படி எனக் கேட்டோம். இதுதான் என் உடை. எங்கு சென்றாலும் என் தலைவன் படத்தோடு தான் செல்வேன் என்றார். வேறு சிலர் சாலைகளில் பார்த்துக் கிண்டல் செய்வார் களாம். அடுத்தது “பேண்ட்” போட்டு வருகிறேன் பாருங்கள் என்பாராம்.
கல்வி இல்லை, பொருளாதாரப் பலம் இல்லை, ஆனாலும் அந்த 58 வயதில் எவ்வளவு கொள்கை மிடுக்கு! உடம்பு முழுக்கத் தன்னம்பிக்கையைக் கொட்டி வைத்திருக்கிறார். “அவனியாபுரத்தில் 50, 60 பேர் இருந்தார்கள். சிலர் மறைந்து போக, சிலர் வெளியூர் போக என் குடும்பம் மட்டும் தான் இங்கே மிச்சம்”, என்கிறார். எனினும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதியில் காளியம்மன் கோயிலுக்கு வரிகட்டாத ஒரே குடும்பம் இவர்கள் மட்டும்தான்! ஆனாலும் மனிதர்களை நிறைய சம்பாதித்து வைத்துள்ளார்!

தாலியை விற்று வாங்கிய கருப்புச் சேலை!
பெரியார் பிறந்த நாளுக்குப் பொங் கல் செய்து அந்தப் பகுதி முழுவதும் கொடுப்பாராம்! இரண்டு, மூன்று ஆண்டு களாக லட்டு வாங்கிக் கொடுக்கிறாராம்! கொள்கையைச் செயல்படுத்த இவர் செய்ததெல்லாம் அதிரடி ரகம்தான்! அப்போது கருப்புச் சேலை ரூ. 100 விற் றுள்ளது. ஆனால் வாங்க பணம் இல்லை. இந்நிலையில் மணியம்மையார் கழுத்தில் தாலி இல்லாததைப் பார்த்துள்ளார். அம்மா கழுத்தில் தாலி இல்லை; பிறகெதற்கு நமக்கு என அதைக் கழட்டி 300 ரூபாய்க்கு விற்று விட்டாராம்.‌ பிறகு அந்தப் பணத்தில் கருப்புச் சேலை வாங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் எங்கு பெரிய நிகழ்ச்சி கள் நடந்தாலும் போக வேண்டும் என அடம் பிடிப்பாராம். கையில் பணம் இருந்தால் இவரே கிளம்பி விடுவாராம். இல்லா விட் டால் இணையரை நச்சரிப்பாராம். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் உறவினர்களை விட, ஆசிரியர் மற்றும் தோழர்களைப் பார்க்கும் போதுதான் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார். “ஆமாம்! இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்”, என ஆமோதிக்கிறார் அருகில் இருந்த வா.நேரு அவர்கள்!

ஆசிரியருடன் தேர்தல் பயணத்தில்!
இவரின் இணையர் பெயர் தங்கராசு. மதுரை தேவசகாயம் அவர்கள் கடையில் வேலை பார்த்ததால் பெரியார் கொள்கை அறிமுகமாம்! பிற்காலத்தில் ஆசிரியரின் பயணத்தில் உடன் செல்லும் மெய்க் காப்பாளராக நான்கைந்து ஆண்டுகள் பணி செய்தாராம். இணையர் மட்டுமின்றி, ஆசிரியரின் தேர்தல் பயணம் ஒன்றில் நானும் 15 நாட்கள் உடன் சென்றுள்ளேன் என்கிறார் ராக்கு தங்கம்!
ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே தலைவர் என்பதை அடிக்கடி கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார். மதுரை தெப்பக் குளத்தில் உள்ள பெரியார் மாளிகையில், பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது எனக்கு ஒரு பையன் பிறந்தான். அதையொட்டி அவனுக்கு “பெரியார் நூறு” எனப் பெயரிட்டோம் என்கிறார். எல்லாவற்றிலும் வித்தியாசம்; எல்லாவற்றிலும் அதிரடி!

தந்தை பெரியார் நகர்!
மொத்தம் 4 குழந்தைகள் இவருக்கு! ஒருமுறை மதுரை தொடர் வண்டி நிலையத்திற்கு ஆசிரியரைச் சந்தித்து, தன் குழந்தைக்குப் பெயர் வைப்பதற்காகச் சென்றிருக்கிறார் ராக்கு. ஆசிரியரோ, “என்னம்மா குடும்பக் கட்டுப்பாடு செய்து விட்டீர்களா?”, எனக் கேட்டாராம். ஆமாம் என்றதும், இப்போது தான் உங்களுக்கும் விடுதலை, உங்கள் இணையருக்கும் விடு தலை என்று சொல்லி, அதன் நினைவாக “விடுதலைச் செல்வி” எனப் பெயர் வைத்தாராம்!
மதுரை அவனியாபுரத்தில், இவர் வசிக்கும் பகுதியின் பெயர் “பச்சேரி” என்று இருந்ததாம். மதுரை தேவசகாயம் அய்யா மற்றும் இப்பகுதி தோழர்கள் இணைந்து அதை “தந்தை பெரியார் நகர்” என்று மாற்றினார்களாம்! அதேபோல 1995 ஆம் ஆண்டு பெரியார் சிலை ஒன்றும் வைத்திருக்கிறார்கள்!

ஆசிரியர் வருகையும்! அழுகையும்!!
ஏராளமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்று கைதாகி இருக்கிறார். அதிகபட்சம் மதுரை மத்திய சிறையில் 15 நாட்கள் இருந்தாராம். அப்போது இவரின் ஒரு பெண் குழந்தை 6 மாதமாம்! “எவ்வளவோ இயக்க நிகழ்வுகள் இருந்தாலும், எங்கள் வீட்டுத் திரும ணத்திற்கு ஆசிரியர் வந்திருந்தார். கழகக் கொடி, சுவரொட்டி என அசத்தியிருந்தேன். எங்கள் உறவுகளும், நண்பர்களும் அதிக மாகக் கூடியிருந்தனர். ஆசிரியர் வந்த அந்த நொடியில் ஒரே ஆர்ப்பரிப்பு, குதூ கலம், கொள்கை முழக்கங்கள்! வந்திருந்த அனைவரும் என்னை வியப்போடு பார்க்க, நான் அங்கேயே அழுதுவிட்டேன்”, என்கிறார்.
தமிழர் தலைவர், ஆசிரியரின் 84 ஆவது பிறந்த நாளுக்கு இணையர்கள் இருவரும் உடல்கொடை பதிவு செய்துள்ளார்கள்! பொருளாதாரப் பலம் இல்லாவிட்டாலும், கடன் ஏதும் வாங்காமல் வாழ்கிறோம் என்கிறார். திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் மணியம்மையார் விருது வாங்கி இருப்பதையும் நினைவு கூர்ந்தார். மதுரையில் வேறு சில அமைப்புகளும்

விருது கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்கள்!
கொள்கை உறுதி!
தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினர் வாக்கு சேகரிக்க வருவார்களாம். ராக்கு தங்கத்தின் முதல் வீட்டில், அடுத்த வீட்டில் வாக்குக் கேட்பார்களாம். ஆனால் ராக்கு தங்கம் வீட்டில் மட்டும் கேட்க மாட்டார்களாம். காரணம் இவர் திராவிடர் கழகத்தில் இருக்கிறார், தலைவர் சொல்படி தான் நடப்பார் என அரசியல் கட்சிகளே முடிவெடுத்துப் போகும் அளவிற்கு, இவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்!
ராக்கு தங்கத்தின் கொள்கை வாழ்க்கையில் தான் எவ்வளவு தெளிவு, துணிவு, உறுதி! நம் இயக்கத்திற்குக் கிடைத்த தங்கம் தோழர் ராக்கு தங்கம்!

No comments:

Post a Comment