பிறந்த நாள் சிந்தனை: தந்தை பெரியாரும் - டாக்டர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

பிறந்த நாள் சிந்தனை: தந்தை பெரியாரும் - டாக்டர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

featured image

கி.வீரமணி

தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத் கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர். இவர்களிருவரும் சமுதாயப் புரட்சிக்கு வித்தூன்றிய வரலாற்று நாயகர்கள் ஆவார்கள். ஒரு மேற்கோளை எடுத்துப் போட்டு, அதன் கீழே அம்பேத்கர் என்று எழுதியிருந்தால், அதே மேற்கோளின் கீழ் ‘அம்பேத்கர்’ என்ற பெயரை எடுத்து விட்டு ‘பெரியார்’ என்று போட்டாலும் – அப்படியே பொருந்தக் கூடியதாகவே இருக்கும்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு. மராட்டியத்தின் ஜோதிபா பூலே அவர்கள் தத்துவக் கொள்கையில் மிகப்பெரிய வழிகாட்டியாக விளங்கினார்.

அதுபோலவே, வைக்கம் போராட்டத்தினை தந்தை பெரியார் அவர்கள் 1924இல் நடத்தியதை. அப்போது தான் வெளி நாட்டிலிருந்து திரும்பி ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தை நடத்தி, நம் மக்களுக்குள்ள இழிவுகளையும் தடைகளையும் ஒழிக்கத் துணிந்து போராட வந்த டாக்டர், அதை தனக்கு ஒரு முன் னோடி நெறியாகக் கொண்டார். அந்த முறையிலே ‘மகத்’ குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்ட முறையினை ஏற்றார்.
டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதியுள்ள தனஞ்செய்கீர் அவர்கள் இதுபற்றி விளக்குகையில், வைக்கம் சத்தியாகிரகம் டாக்டர் அம்பேத்கருக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஊமையர்களின் குரல்’ என்று டாக்டர் அம்பேத்கர் நடத்திய இதழில், வைக்கம் போராட்டத்தின் வெற்றி பற்றி உள்ளத் தைத் தொடக்கூடிய வகையில் மிக அருமையானதொரு தலையங்கத்தை எழுதியுள்ளார்கள் என்று தனஞ்செய்கீர் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கரின் வாழ்வும் தொண்டும்’ என்ற ஆங்கில நூலில் குறிப்பிட் டுள்ளார். அவ்விருவருக்கும் ஏற்பட்ட கொள்கை வயப்பட்ட நட்பு – இறுதிவரை இறுகியே இருந்தது; இளைக்கவோ, நீர்க்கவோ இல்லை!
1936இல் லாகூரில் “ஜாட்பட் தோடக் மண்டல்’ என்ற ஜாதி ஒழிப்பு சங்க மாநாட்டில் தலைமை உரையாற்றிட மறுத்துவிட்டார் டாக்டர் அவர்கள். காரணம், அவர் எழுதி அனுப்பிய தலைமை உரையில், இந்து மதத்தினைத் தாக்கி எழுதிய சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று மாநாட்டு வரவேற்புக் குழுவினர் டாக்டரைக் கேட்டனர்; அவர் மறுத்துவிட்டார்.

அவரது தன்மான, கொள்கை லட்சியப் பிடிவாதத்தினைப் பாராட்டிய தந்தை பெரியார் அவர்கள், டாக்டரின் அந்த உரையை வரவழைத்து, 1936இல் தனது ‘குடி அரசு’ப் பதிப்பகத்தில் ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து பல லட்சக் கணக்கில் பரப்பினார்கள். அதன் மூலம் தமிழ் நாட்டில் டாக்டரும், டாக்டரின் புரட்சிச் சிந்தனைகளும் ஏராளமான பேர்களுக்கு மிகவும் அறிமுகம் ஆயின என்று கூறுவது மிகையல்ல.

5.1.1940இல் பம்பாய்க்குப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், 6.1.1940 காலை 10 மணிக்கு பம்பாய் தாதர் புகை வண்டி நிலையம் அடைந்தார்கள். அன்று இரவு 9 மணிக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களை அழைத்து விருந்தோம்பினார். இருவரும் சுமார் 1.30 மணி நேரம் அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை தனிமையில் உரையாடினர்.
மறுநாள் மாலை (7.1.1940) தந்தை பெரியாரின் வருகையைக் கொண்டாட வேண்டி, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார் (கோகலே கல்வி நிலையத்தில்). விருந்துக்கு வந்த முக்கிய பிரமுகர்களான எஸ்.சி. ஜோஷி. எம்.எல்.சி., ஆர்.ஆர்.போலே (பிறகு இவர் நீதிபதி, மண்டல் குழு உறுப்பினர்) ஜாதவ் எம்.எல்.ஏ. போன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

9.1.1940 அன்றும் மீண்டும் ஓர் அரிய பெரிய விருந்தினை டாக்டர் தந்தை பெரியாருக்கும், அவருடன் சென்றவர்களுக்கும் அளித்தார் என்றால் எவ்வளவு அன்பு, நட்பு, பாசம் என்பது புரியவில்லையா?
81.1940இல்தான் பம்பாயில் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், ஜனாப் முகம்மதலி ஜின்னா மூவரும் கலந்துரையாடினர். 1944இல் சென்னைக்கு வந்திருந்த டாக்டர் அம்பேத்கருக்கு, சேலம் மாநாட்டில் தந்தை பெரியாரை விட்டு வெளியேறிய சில பிரமுகர்கள், தாங்கள்தான் பார்ப்பனரல்லாதார் ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று கூறி தனிக் கட்சியை சில காலம் நடத்திய நிலையில் அவர்கள் ஓர் விருந்துபச்சாரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
டாக்டர் அவர்கள், அவர்களிடம் தந்தை பெரியாரை மதித்து. தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்கள் போக்கைக் கண்டித்தார்கள் என்றால், எவ்வளவு ஆழ்ந்த நட்புறவு அவ்விரு தலைவர்களிடம் உண்டு என்பது தெரிகிறதல்லவா?

மிசோரம் ஆளுநராக இருந்த மேதகு டாக்டர்
ஏ.பத்மநாபன் அவர்கள், பெரியார் மணி யம்மை மகளிர் பொறியியல் கல்லூரியை தஞ்சை வல்லத்தில் திறந்து வைத்துப் பேசியபோது, “நாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது, ஒரு குழுவாகச் சென்று சென்னை வந்த டாக்டர் பாபாசாகேப் அவர்களைச் சந்தித்து எங்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று கேட்டோம்: அப்போது டாக்டர், “உங்கள் ஊரியிலேயே ஒரு சிறந்த தலைவரை (அருகில்) வைத்துக் கொண்டு (தொலை தூரத்திலிருந்து வந்த) என்னிடம் அறிவுரை கேட்கிறீர்களே என்று கூறிவிட்டு அவரைப் பின்பற்றுங்கள்’ என்று கூறினார்” என்ற கருத்தை தந்தை பெரியார் பற்றி ஆழமாகக் குறிப்பிட்டார்கள்!

அவ்விரு தலைவர்களின் இந்தப் பாசமிகு நட்புறவுக்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்: இளைய தலைமுறை இவற்றை உணர வேண்டும். ‘இந்து சமூக அமைப்பு உள்ளவரை பாகுபாடுகள் ஒழியாது’ டாக்டர் கூறுகிறார். அதைத் தான் தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார்-கூறினார். இப்படிப் பலப்பல!
கடவுள், ஆத்மா -இரண்டையும் மறுத்த ஒரு கொள்கையாகத்தான் பவுத்தத்தை தந்து, பஞ்சமத் தன்மை என்ற பலி பீடத்தில் நின்று சாகக்கூடாது என்றே டாக்டர் அவர்கள் அய்ந்தரை லட்சம் சகோதர, சகோதரிகளுடன் பவுத்தம் ஏற்றார். தந்தை பெரியார் அவர்கள் இந்து மதத்தின் ஜாதியை, கடவுளை, சடங்குகளை சாடினார். அம்பலப்படுத்தினார். இந்து மதத்தை விட்டுச் செல்லாமல் இருந்தால்தான் வசதி யாகக் கண்டித்துப் பிரச்சாரம் செய்ய முடியும் என்று கருதினார். அவர்களது திட்டத்தில்தான் மாறுபாடு; கொள்கையில் அல்ல!
எந்த ஒரு கருத்துக்கும் எவ்வளவு இமய எதிர்ப்புக் கிளம்பினாலும் துணிந்து வெளியிடும் துணிவுக்கு, இந்த இரு பெரும் சிங்கங்களும் உரிமையானவர்கள்.

No comments:

Post a Comment