140 கோடி மக்களும் தன் குடும்பம் என்கிறார் பிரதமர் மோடி! தூத்துக்குடி, மணிப்பூர் மக்கள் அந்த குடும்பத்தில் உண்டா?
கவிஞர் கனிமொழி, ராகுல் காந்தியை உதாரணமாக்கி மோடியைக் கண்டித்துப் பேசினார் ஆசிரியர்
தூத்துக்குடி, ஏப்.4- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி, வீரமணி அவர்கள் நேற்று (3.4.2024) மாலை தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நகரங்களில் தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களான தி.மு.க., காங்கிரசு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான “இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு கிறார். பயணத்தின் இரண்டாம் நாளில் தூத்துக்குடி, விருதுநகர் தொகுதிகளில் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
முதல் கூட்டமான தூத்துக்குடியில் மாவட்டத் தலைவர் முனியசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். கழகக் காப்பாளர்களாக பால் ராசேந்திரம், காசி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், துணைச் செயலாளர் மணிமொழியான், மாநகரத் தலைவர் மதிவாணன், மாநகரச் செயலாளர் புத்தன் மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் நவீன்குமார், ம.தி.மு.க. பொறுப்பாளர்கள் முருகபூபதி, முருகேசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதேச்சதிகாரத்தை வீழ்த்த வேண்டும்!
ஆசிரியருக்கு முன்னதாக கழகத்தின் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் என்ன வாக்குறுதி கொடுத்தார். எதையாவது நிறைவேற்றியிருக்கிறாரா? என்று கேள்வி கேட்டு, அவரே பதிலளித்து விளக்கமாகப் பேசினார். அதைத்தொடர்ந்து ஆசிரியர் வருகை தந்தார். நேரத்தின் அருமை கருதி, ஆசிரியருக்கு மரியாதை; புத்தக அறிமுகம்; விற்பனை போன்ற பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் பரப்புரைப் பயணத்தில் சிறப்புரை ஆற்றினார்.
தொடங்கும் முன், கீழே அமர்ந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி இலா. விக்டர் அவர்களுக்கு கீழேயே சென்று பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். இது அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கியது. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றை ஒரு முன்னோட்டமாக சுருக்கமாக விவரித்தார். பின்னர் எல்லா தேர்தல்களைப் போல் அல்ல இந்தத் தேர்தல் என்று எச்சரித்துவிட்டு, “இந்தத் தேர்தல் ஜனநாயகமா? எதேச்சதிகாரமா? இரண்டில் எது நமக்குத் தேவை? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல்” என்று எச்சரித்தார். இந்த அரசியல் சட்டம் மக்களுக்குத்தான் அதிக அதிகாரம் வழங்கியுள்ளது என்பதை We the people என்று தொடங்கும் அரசியல் சட்டத்தின் முகப்புரையை நினைவுபடுத்தி, எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வேண்டும்” என்றார்.
மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை?
தொடர்ந்து பேசிய அவர், “140 கோடி இந்திய மக்களும் என் குடும்பம் என்கிறார் பிரதமர் மோடி. அப்படியொரு பிரதமர் தான் நமக்கு வரவேண்டும்” என்று சொல்லிவிட்டு, மோடி அப்படிப்பட்டவராக இருந்திருக்கிறாரா என்பதை, “மணிப்பூர் மக்கள் இந்தியர்கள் இல்லையா? ஏன் பிரதமர் சென்று பார்க்கவில்லை? எம் இனத்து சகோதரிகள் நிர் வாணமாக்கப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்பட்டார்களே; மோடி போனாரா? பேசினாரா? இல்லையே! தூத்துக்குடியில் ஏற்பட்ட பெருவெள்ளப் பேரிடருக்கு தேசிய பேரிடர் நிதியி லிருந்து ஒரு பைசா கொடுத்தாரா? காசு கூட இரண்டாவதாக வைத்துக்கொள்ளலாம். இப்போது தூத்துக்குடிக்கு வந்தாரே, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னாரா? என்று கேள்விகளைக் கேட்டு, மோடி அதற்கு அருகதை அற்றவர் என்பதை விளக்கினார்.
* தூத்துக்குடி தொகுதியில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை மதிமுக தோழர்கள் வரவேற்றனர்
* விடுதலை முகவர் விக்டருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். உடன்: முனியசாமி
தூத்துக்குடி வெள்ளப் பேரிடரில் கவிஞர் கனிமொழி மக்களுக்கு ஆற்றிய பணி!
நாடாளுமன்ற உறுப்பினர் எங்கள் கொள்கைத் தங்கம் கவிஞர் கனிமொழி மணிப்பூருக்குச் சென்றாரே! இந்திய கூட்டணியில் இடம் பெற்றிருந்த தலைவர்கள் சென்றனரே! காங்கிரசின் இளந்தலைவர் ராகுல் காந்தி சென்றாரே! திருமாவளவன் சென்றாரே! தூத்துக்குடியில் பேரிடர் ஏற்பட்ட போது, முழங்கால் தண்ணீரில் கவிஞர் கனிமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனரே! என்று கூறிவிட்டு, ”140 கோடி மக்களில் தமிழ்நாட்டு மக்கள் உண்டா? இருந்திருந்தால் பேரிடர் நிதி கொடுத்திருப்பாரே!” உண்மை வேறு ஒப்பனை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று 140 கோடி மக்களும் தனது குடும்பம் என்பது மோடியின் வித்தைகள் என்பதைப் பளிச்சென்று புரியும்படி எடுத்துரைத்தார். தொடர்ந்து, மணிப்பூர் பிரச்சினை பற்றி திராவிடர் இயக்கம் ஏன் பேசுகிறது? என்று கேள்வி கேட்டு, ”யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது எங்கள் இயக்கத்தின் பார்வை” என்று பதில் சொன்னார்.
மோடி தொடங்கிய இரண்டு தொழிற்சாலைகள்!
தொடர்ந்து சேது சமுத்திரத்திட்டம் அவசியம் பற்றி பேசினார். அதனால் கிடைத்திருக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை நினைவுபடுத்தினார். இந்தப் பகுதியைச் சார்ந்த கே.டி.கோசல்ராம் எப்போது பேசினாலும் சேது சமுத்திரத்திட்டம் என்றே பேசுவார் என்பதை நினைவுபடுத்தினார். பக்கத்தில் அமர்ந்திருந்த பால் ராசேந் திரம் ஆசிரியரின் நினைவுத்திறனை போற்றும் விதமாக ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தார். இறுதியில் பொய்யுரைக்கும், ஊழல்வாதிகளை தூய்மைப்படுத்தும் தொழிற்சாலைகளை பிரதமர் மோடி தொடங்கியிருக்கிறார் என்று பகடி செய்து, ”ஜூன் 5 ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறப்பொகிறது. இந்த தேர்தல் மோடியை வழியனுப்புகிற தேர்தல். ஆகவே எங்கள் கொள்கைத்தங்கம் கவிஞர் கனிமொழி கருணாநிதியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். மாநகர மாணவர் கழகத் தலைவர் திரவியம் நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
விருதுநகரில் தமிழர் தலைவர்!
தூத்துக்குடியில் நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு, விருதுநகர் நோக்கி பரப்புரைப் பயணக்குழு புறப்பட்டது. விருதுநகரில் மாவட்டத் தலைவர் நல்லதம்பி அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை ஆதவன் அனைவரையும் வரவேற்று பேசியிருந்தார். தலைமைக்கழக அமைப்பாளர் இல. திருப்பதி நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர் மன்றத்தலைவர் மாதவன், தி.மு.க. நகரச் செயலாளர் தனபாலன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரவிச்சந்திரன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் சந்திரன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், ஆதித்தமிழர் கட்சி பொறுப்பாளர் சுந்தரராஜன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் வானவில் மணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ஆனந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் சாத்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் அசோக், இராஜபாளையம் மாவட்டத் தலைவர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தன், உசிலம்பட்டி மாவட்டத்தலைவர் எரிமலை, மாவட்டச் செயலாளர் முத்துகருப்பன் ஆகியோரும் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
விருதுநகர் தொகுதி வேட்பாளர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள், துரை. சந்திரசேகரன் உரைக்குப் பின்பு, ஆசிரியர் உரைக்கு முன்னதாக சுருக்கமாக கை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அமர்ந்தார். தொடர்ந்து ஆசிரியர் பேசினார். இறுதியாக தூத்துக்குடி பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 10 மணிக்கு முன்னதாகவே உரையை நிறைவு செய்த ஆசிரியர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டார்.
பெரியார் தொண்டருக்கு மரியாதை
தூத்துக்குடியில் சிதம்பரம் நகர் பகுதியில் வேட்பாளர் கவிஞர் கனிமொழி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
”தோழா முன்னேறு! வீரமணியோடு!” என்ற தேர்தல் பரப்புரைப் பாடல் ஒலிக்க, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரைப் பயண செயற்பாட்டாளர்களுடன் வந்து இறங்கினார்.
தோழர்களின் குதூகல வரவேற்புடன் மேடை யேறி அமர்ந்தார்.
பயனாடை அணிவித்து மரியாதை, புத்தகங்கள் அறிமுகம், கூட்டணிக் கட்சியினர் பெற்றுக் கொள்வது போன்ற நிகழ்வுகள் முடிந்தவுடன், ஆசிரியர் பேசத் தொடங்குமுன், கீழே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக்காட்டிவிட்டு, மேடையிலிருந்து சரசரவென கீழே இறங்கினார்.
இதையறிந்த தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனியசாமி வேகமாக கீழே வந்து, கருப்புக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஊன்றுகோலுடன் அமர்ந்திருந்த ஒருவரிடம், “உங்களைப் பார்க்க ஆசிரியர் வீரமணி கீழே வந்து கொண்டிருக்கிறார்” என்றதும், அவர் பரபரப்புடன் எழுந்தார். அப்போது தான் அவர் பார்வை மாற்றுத்திறனாளி என்பது தெரிந்தது. ஆசிரியர் அவரிடம் வந்து மிகுந்த உரிமையுடன் பயனாடை அணிவித்தார். உள்ளம் இளகியிருந்த அவரிடம், “என்ன விக்டர் நலமாக இருக்கீங்களா?” என்று கேட்டார். விக்டரும் உணர்ச்சி வயப்பட்டு பதிலளித்தார். இந்த நிகழ்வு அங்கே சற்று நேரத்தில் பரபரப்பை உண்டு பண்ணி விட்டது.
பின்னர் மேடையேறிய ஆசிரியர் பேசும்போது, “விடுதலை நாளேடு எல்லா இடங்களுக்கும் பரவச் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விக்டர் இங்கே வந்திருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது” என்றார்.
அதன்பிறகு அவரிடம் விசாரித்தபோது, தூத் துக்குடியில் ‘விடுதலை’ முகவராக, இலா.விக்டர் இருந்திருக்கிறார். அங்கே அமைந்திருக்கும் பெரியார் சிலை அமைப்புக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் பெயரும் சிலையின் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தற்சமயம் வீட்டில் இருப்பதாகவும், ஆசிரியர்தான் தன்னை கவனித்துக் கொள்கிறார் என்றும் நெகிழ்வுடன் கூறினார். இதையெல்லாம் அறிந்த பிறகு, விக்டரின்மீது ஏற்பட்டிருந்த வியப்பு ஆசிரியர்மீது திரும்பியது. தனது 91ஆம் வயதிலும் மேடையிலிருந்து இறங்கி வந்து ஒரு பெரியார் தொண்டருக்கு மரியாதை செய்த ஆசிரியரின் இந்தப் பண்பு வியக்க வைத்தது.
தென்காசியில் தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரைக்கு ‘பொதிகை சாரல்’ மழை வழி வாழ்த்துக் கூறியது!
ஏப்ரல் 19 இல் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வாக்காளர்களை கேட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரையை 2.4.2024 அன்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தொடங்கினார். வேட்பாளர் டாக்டர் ராணி குமார் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசத் தொடங்கினார். சாரல் மழையும் தொடங்கியது மழை அதிகமாகி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்குத் தடை ஏற்படுமோ என்ற அச்சப்பட்டோம். ஆனால் மழையை பொருட்படுத்தாமல் தமிழர் தலைவர் பேச்சைத் தொடர்ந்தார். என்ன வியப்பு…….! சாரல் மழை தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரைக்கு வாழ்த்து கூறி விடைபெற்றதோ என நினைக்கும் வண்ணம் தூறல் நின்று போனது. தலைவரின் பிரச்சாரத்தில் அவர் பேச வேண்டிய கருத்துக்களைப் பேசி முடித்த பிறகு அடுத்த நிகழ்ச்சியான திருநெல்வேலியை நோக்கி பயணம் தொடர்ந்தது! உடன் இருந்த எங்களுக்கோ மகிழ்ச்சி! தேர்தல் பரப்புரையின் தொடக்க நிகழ்வே சாரல் காரணமாக நின்று விடுமோ என்று எண்ணிய மக்களிடம் அடுக்கடுக்கான ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் ஆற்றி வரும் அரும் சாதனைகள், மோடியின் பொய் தொழிற்சாலை மோசடிகள், வாக்காளர்களின் கடமையும் பொறுப்பையும் உணர்த்திய பேச்சு வாக்காளர்களை சிந்திக்க தூண்டியது என்றே சொல்லலாம்! நாற்பதும் நமதே! நாளை நமதே! நாடும் நமதே!
No comments:
Post a Comment