குஜராத் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி இரவு ஆப்கான், சூடான், எகிப்து, கென்யா, தஜிகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் ரமலான் மாத நோன்பு இருந்து நோன்பு திறக்கும் பொழுது தொழுகை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஹிந்துத்துவ கும்பலைச்சேர்ந்த நபர்கள் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய நகர நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மிரட்டி வெளிநாட்டு மாணவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கூறிய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகமும் அவர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
குஜராத் பல்கலைக்கழக விடுதியில் மார்ச் 17ஆம் தேதி இரவு நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு வெளியேறிய ஹிந்துத்துவக் கும்பலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுத்த காட்சிப் பதிவை குஜராத் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செய்வோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தவில்லை என்றும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரு வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்தனர் அதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். மற்றொருவர் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர் – காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் – வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை புதிய விடுதிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக துணைவேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்திருந்தார்.
மேலும் மாணவர் விடுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்த மேனாள் ராணுவ வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்பு நிறுவனங் களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
குஜராத் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர் ஆலோ சனைக் குழுவையும் அமைத்துள்ளது. இதில் வெளிநாட்டுப் படிப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், சட்டப் பிரிவின் உதவிப் பதிவாளர் மற்றும் பல்கலைக்கழக லோக்பால் பிரதிநிதி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று குப்தா கூறினார்.
இந்த நிகழ்வு நடைபெற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களை உடனடியாக பல்கலைக்கழக விடுதியில் இருந்து காலி செய்யுமாறு நிர்வாகம் தாக்கீது அனுப்பி உள்ளது
மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வசதி குறைந்த வெளிநாடுகளில் உள்ளவர்களின் உயர் கல்விக்கு இந்திய அரசோடு அந்தந்த நாடுகள் செய்த ஒப்பந்தம் காரணமாக கல்வி கற்க இங்கே வருகின்றனர். ஆனால் இங்கே மத விவகாரத்தைக் கையில் எடுத்து ஹிந்துத்துவ கும்பல் வேற்றுமத மாணவர்களைத் தாக்கி உள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும். எடுக்காத காவல்துறையும், குஜராத் பல்கலைக்கழக நிர்வாகமும் தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை விடுதியை விட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியது – இந்திய நாட்டின் மீதான மரியாதையை சீர் குலைக்கும் வகையில் அமைந்திருப் பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். இந்தியா குறித்து வெளிநாட்டவர்கள் மத்தியில் என்ன நிலை ஏற்படும் என்பது முக்கியம்! ஏன் பன்னாட்டு பிரச்சினையாகவும் வாய்ப்பு உண்டு.
ஹிந்து ராஜ்யம் அமைக்கப் போவதாககூறி ஒரே நாடு, ஒரே மதம் என்றும் வெறி பிடித்து அலையும் ஒரு நாட்டில் மற்ற மதக்காரர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா?
மதச் சார்பற்ற நாடு என்று அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறது. அதன்மீது உறுதிமொழி எடுத்துதான் மோடி உள்பட அத்தனைப் பிஜேபி உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அடிநாதமாக ஏற்றவர்கள், இன்னும் சொல்லப் போனால், ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்ன நடக்குமோ, அதுதான் ஒரு பல்கலைக் கழகத்தில் நடந்திருக்கிறது.
இன்றைய பிரதமர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு என்ன நடந்தது?
அத்தகைய ஒருவர் பிரதமரானால் என்னதான் நடக்காது? இத்தகைய அராஜக மதவெறி பிடித்த ஓர் அமைப்பு அதிகார பீடத்திலிருந்து அகற்றப்பட்டாலொழிய, சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல – ஓட்டு மொத்த சமுதாயமும் – நாடும் அமைதியை இழந்து சுடுகாடாக மாறி விடாதா?
இந்த நிலையில் சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களிடையே பிளவுபடாமல் ஒன்றிணைந்த சக்தியாக – பலமாக எழுந்து நிற்பதுதான் மீள்வதற்கு ஒரே வழி! அதற்கான பெரும் வாய்ப்புதான் நடக்கவிருக்கும் 18ஆவது மகக்கவைத் தேர்தல் – மறவாதீர்! மறவாதீர்!!
No comments:
Post a Comment