பா.ஜ.க. ஆண்டதும் போதும் - மக்கள் மாண்டதும் போதும் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

பா.ஜ.க. ஆண்டதும் போதும் - மக்கள் மாண்டதும் போதும் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

featured image

சென்னை,ஏப்.4- திமுக தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு வண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை சோமா சிப்பாடியில் நேற்று (3.4.2024) நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

தமிழ்நாட்டைப்போலவே, டில்லியி லும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும். ஜனநாயகம் பாதுகாக் கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும். எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும். அரசி யல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும். அதற்கு முதலில், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஏன் என்றால், ”பா.ஜ.க. ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட் டார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு பதில் சொல்ல வில்லை. அமலாக்கத்துறை நடவடிக் கைகளுக்கும் – தனக்கும் எந்த சம்பந்த முமில்லை என்று ஒரு மோடி உருட்டு உருட்டினார் பாருங்கள். பேட்டி எடுத் தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள். பிரதமர் அவர்களே ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே உங்களுக்குத் தெரியாது தானே? டில்லி முதலமைச்சர் அர விந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தார் களே அதுவும் தெரியாதுதானே?

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக் குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே அதுவும் உங்களுக்குத் தெரியாது தானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் அய்.டி, இ.டி, சி.பி.அய் இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது. நாங்கள் நம்பிவிட்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன் னால் நாளைக்கு உங்களுக்கும் – குஜராத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன் னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணி வோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப் பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப் பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொல்லவில்லை! கேட்ட நிதி யையும் தரவில்லை! ஆனால் என்ன சொன்னார் தெரியுமா? “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்தி ருக்கிறேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னிடம் பிரதமர் மோடி சொன்னார்.
சொன்னபடி, நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார், நிதி வரவில்லை! நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட்கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார். அவரின் பேச்சுகளைப் பார்த்தபோது, ஒரு விடயம் தெளிவா கப் புரிந்தது. அம்மையார் நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்கா கவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச் சைப்படுத்தினார் அந்த அம்மையார்!
ஆணவச் சிந்தனை கொண்ட அவர் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக் கிறார். அதில், “அய்ந்தாயிரம் கோடி யைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்துவட்டிக் காரர் போன்று பேசியிருக்கிறார்கள்.

அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது! ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசு தான் திரும்பக் கட்டப்போகிறது. மக்க ளுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ் சம் விளக்கி சொல்கிறேன்.

பொதுவாக ஏ.டி.பி, கே.எப்.டபிள்யூ மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்பு களில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கி னால் அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக்கிற்கு வந்துதான் மாநில அரசுக்கு ‘டிரான்ஸ்பர்’ ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத் ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள் அம்மையார் நிர்மலா சீதாரா மன் அவர்களே. ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு – மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கி றேன்.

குறித்துக் கொள்ளுங்கள் – மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயி ரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்தி ருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை – டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக் கவில்லை. ராமநாதபுரம் மாவட்ட வறட் சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்க வில்லை. இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத் தோம். எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

நிர்மலா சீதாராமன் அவர்களே ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது ஆணவத் தில் தப்புக் கணக்கு போடாதீர்கள். நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன் நாங்கள் கேட்கும் நிதி, என்.டி.ஆர்.எப். என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

அவர்கள் கொடுத்ததாகச் சொல் வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்பட வில்லை என்றாலும் நமக்குக் கண்டிப் பாகத் தர வேண்டிய எஸ்.டி.ஆர்.எப் என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக் காரன் படத்தில் வருமே, வாழைப்பழ காமெடி, அது போன்று “அதுதான் இது இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக் கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் – நக்கல் – நையாண்டி – கிண்டல், கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளி வாகிவிட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment