குஜராத் மாநிலத்தில், பாஜக வேட்பாளருக்கு எதிராக ராஜபுத்திர சமூக மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பாஜக தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை கண்டித்து ராஜ்புத் சமூகத்தினர் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜபுத்திர சமூகத்தை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சர் ரூபாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜ்கோட் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவுக்கு கடுமையான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
ஒன்றிய அமைச்சர் ரூபாலா வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் வாங்கிக் கட்டியுள்ளார். குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா களமிறங்கியுள்ளார். இந்நிலையில், ராஜ்புத் சமூக மக்கள் பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர் களிடம் நெருக்கமாக இருந்தனர் என புருஷோத்தம் ரூபாலா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவின் இந்தப் பேச்சுக்கு குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ராஜ்புத் சமூக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்ட பின்னரும், அதனை ஏற்க மறுத்துள்ள ராஜபுத்திர சமூக மக்கள் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளரை மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் பாஜக தலைமைக்கு தலைவலியல்ல – இதய வலியே ஏற்பட்டுள்ளது . மாரடைப்பு வராததுதான் பாக்கி! பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரான புருஷோத்தம் ரூபாலாவை மாற்றினால், சுமார் 10 தொகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டிதார் சமூகத்தவரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், வேட்பாளரை மாற்றாமல் அமைதி காத்து வருகிறது பா.ஜ.க. தலைமை.
பா.ஜ.க. மாநில தலைவரை முற்றுகையிட்டு ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளரை மாற்றினால் பட்டிதார் சமூக மக்களின் ஆதரவை இழக்க நேரிடும். இல்லை என்றால் ராஜபுத்திர சமூக மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது. இரண்டு பக்கமும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பாஜக. சிக்கல் என்றால் சாதாரணமானது அல்ல – இடியாப்ப சிக்கல்! அடி என்றால் சாதாரணமானதல்ல – இரு பக்கமும் அடி!
ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக 2 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர். இதையடுத்து அவர்களுக்குப் பதிலாக வேறு வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க. தலைமை. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜ.க.வில் மீண்டும் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் தீர்வு காணும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று உள்ளூர் தலைவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை கடும் தோல்வியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது.
குஜராத் எங்கள் கோட்டை என்று பிஜேபி சொல்லிக் கொண்டு திரிகிறது – அதில் ஓட்டை விழப் போகிறது.
மதவாதத்தையும், ஜாதியவாதத்தையும் வாளாகச் சுழற்றி வாக்குகளைக் கபளீகரம் செய்தவர்கள், நுணலும் தன் வாயால் கெடும் – தன் வினை தன்னைச் சுடும் – என்பதற்கு ஏற்ப – குஜராத்தில் ராஜ்புத்ரா, பட்டிதார் சமூகத்திற்கிடையே கலகத்தை உண்டு பண்ணும் வேலையில் பிஜேபி வேட்பாளரே இறங்கி விட்ட பரிதாப நிலை!
காங்கிரஸ் பிரிவினைவாதம் பேசுகிறது என்று சொல்லி வந்த பிஜேபியே தனது முக்கியமான மாநிலமான குஜராத்தில் இரு சமூகத்திற்கிடையே பிரிவினைத் தீயை மூட்டி ஆப்பசைத்த குரங்காகி விட்டது – தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொண்டு விட்டது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், குஜராத்தில் மாற்றுக் கட்சியினர் இந்தப் பிளவை ஏற்படுத்தவில்லை; தங்கள் வீட்டுக்குத் தாங்களே (பிஜேபி) தீ வைத்துக் கொண்டு விட்டனர். பிரிவினைவாதம் எத்தகைய ஆபத்தானது என்பதை பிஜேபி இப்போதாவது உணரட்டும்!
No comments:
Post a Comment