அழிவுப் பாதையில் செல்லும் இந்திய ஜனநாயகத்தை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்! சென்னையில் ப.சிதம்பரம் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

அழிவுப் பாதையில் செல்லும் இந்திய ஜனநாயகத்தை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்! சென்னையில் ப.சிதம்பரம் பிரச்சாரம்

featured image

சென்னை,ஏப்.5- ஜனநாயகத்தை காக்க மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சா ரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய முத்தான திட்டம் என்ன?:

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முத்தான திட்டம் ஒன்றையாவது செயல்படுத்தியுள்ளீர்களா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏதாவது ஒரு முத்தான திட்டத்தை அவர்களால் சொல்ல முடியுமா? என்று சாடினார்.

ஜனநாயகத்தை காக்க மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்

எந்த அரசியல் கட்சியும் வருமானவரியே செலுத்தியது இல்லை; கட்ட வேண்டிய விதியும் சட்டத்தில் கிடையாது. அரசியல் கட்சி வரி செலுத்த சட்டத்தில் இடம் இல்லாதபோது காங்கிரசுக்கு ரூ.3,772 கோடி வரி அபராதம் விதித்துள்ளது பாஜக. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே மோடி என்பதில் போய் முடியும். ஜனநாயகத்தை காப்பாற்ற மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்; பாஜக ஆட்சியில் நாடு அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்றார்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்

தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். 10 ஆண்டு கால ஆட்சியில் மோடி என்ன வாக்குறுதி தந்தார், எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன? என்று கேட்டால் பாஜக அரசு பதில் சொல்வதில்லை. ஏழை, நடுத்தர மக்கள் அனைவரையும் பாதிப்பது விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும்தான் என குறிப்பிட்டார்.

வேலையின்மை விகிதம் 65%ஆக அதிகரிப்பு

10 ஆண்டுக்கு முன் 35%ஆக இருந்த வேலையில்லாதோர் விகிதம் பாஜக ஆட்சியில் 65%ஆக அதிகரித்துள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். ஐஐடியில் உயர் தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களிலேயே 30% பேர் வேலையில்லாமல் உள்ளனர். தனிநபர் சராசரி வருவாயை பொறுத்தவரைக்கும் உலக அளவில் 120-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலருக்கு விற்பனையானது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலருக்கு விற்றபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65-க்கு விற்பனையானது. தற்போது கச்சா எண்ணெய் 80 டாலராக குறைந்துள்ளபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனையாகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த நாட்டின் வளர்ச்சி, பாஜக ஆட்சியில் 5.8% சரிவு அடைந்துள்ளது என ப.சிதம்பரம் கடுமையாக சாடினார்.

No comments:

Post a Comment