♦ நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு! ♦ இட ஒதுக்கீடு 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கம்! ♦ பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு! ♦ ‘நீட்டி’லிருந்து மாநிலங்களுக்கு விலக்கு! ♦ ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கிடையாது! ♦ அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து!
♦ பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்
♦ ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும்
அடுக்கடுக்கான மக்கள் நலம் பேணும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
புதுடில்லி, மார்ச் 5 – நாடு முழுவதும் ஜாதி வாரி கணக் கெடுப்பு – இட ஒதுக்கீடு 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கம் – பெண் களுக்கு 50% இட ஒதுக்கீடு – நீட்டிலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு – ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கிடையாது – அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து – அடுக்கடுக்கான மக்கள் நலம் பேணும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று (5.4.2024)
வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, சோனியா காந்தி அம்மையார், ராகுல் காந்தி ஆகியோர் டில்லியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிகழ்வில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள்!
5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறினார்.
1. நாடு முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
2. இடஒதுக்கீட்டிற்கான 50 சதவிகித உச்ச வரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
3. ஒன்றிய அரசு பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
4. அரசுப் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் நடைமுறை ரத்து செய்யப்படும்.
5. நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பட்டியலின மாணவர்களுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6. மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
7. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்.
8. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.
9. நீட், க்யூட் நுழைவுத் தேர்வுகள் மாநில அரசுகளின் விருப்பத்துக்கு உட்பட்டது.
10. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
11. மிகவும் ஏழைகளாக உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்.
12. 2025 ஆம் ஆண்டுமுதல் ஒன்றிய அரசின் பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கப்படும்.
13. மார்ச் 2024 ஆம் ஆண்டுவரை பெறப்பட்ட அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும்.
14. வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சட்ட ரீதியாக உறுதி செய்யப்படும்.
15. மாநில அரசுகள் விரும்பாவிட்டால், நீட், க்யூட் நுழைவுத் தேர்வு நடத்த அவசியமில்லை.
16. மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
17. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும்.
18. நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.
19. அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
20. பா.ஜ.க. கொண்டு வந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. (2.0) கொண்டு வரப்படும்.
21. 14 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள்.
22. புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
23. ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும்.
24. தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும்.
25. அனைத்து கடலோரப் பகுதிகளிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
26. முப்படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
27. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவினால், தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
28. தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
29. வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டைப் பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப் படும்.
30. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டுவரப்படாது.
31. அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
32. பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.
33. நிட்டி ஆயோக் திட்டக்குழு மீண்டும் கொண்டுவரப்படும்.
34. பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
35. பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச் சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.
36. பா.ஜ.க.வுக்கு மாறியதால், ஊழல் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப் படும்.
37. பட்டியலின மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வரப்படும்.
38. விவசாய இடுபொருளுக்கு ஜி.எஸ்.டி. ரத்து செய்யப் படும்.
39. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
40. வெறுப்பு பேச்சுகள், வெறுப்பு குற்றச்செயல்கள், வகுப்பு வாத மோதல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்.
41. பெண்கள், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்களை இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.
மேலும் பல மக்கள் நலத் திட்டங்கள் வாக்குறுதிகளாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment